கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“படிப்பதற்குக் கொப்பி இலை
படமெழுதத் தாளில்லை
நடிப்பதுபோல் நடந்தது நாடு”
– கவிஞர் அப்துல் காதர் லெப்பை
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்குக் கடதாசி தட்டுப்பாடென்பதால் பரீட்சைகள் காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ளன என்ற ஒரு செய்தியைப் படித்தபோது சிந்தனைக் கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் மேற்கூறிய வரிகள்தான் என் ஞாபகத்துக்கு வந்தன. இரண்டாவது உலகமகா யுத்த காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியைப்பற்றி அவர் விபரித்த விதமே அது.
இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சீரழிவும் நெருக்கடியும் எவ்வாறு பொதுமக்களைப் பாதித்துள்ளன என்பதை விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அதனை வாசகர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றனர் என்பதை அறிவேன். அதை விபரிப்பதால் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை குறைக்க முடியாது. அதேபோன்று இச்சீரழிவுக்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் இக்கட்டுரை ஆராயப்போவதில்லை.
பொருளியலாளர்களும் அரசியல் அவதானிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் அவற்றை ஏற்கனவே விபரித்துள்ளனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் அரசின் நிதிக்கொள்கை, இறக்குமதிக் கொள்கை, அதனாலேற்பட்ட பணவீக்கம், பாரபட்சமான வரிச்சலுகைகள், தேசியக் கடன்பளு, நிர்வாக ஊழல், மாபியாக்களின் செல்வாக்கு ஆகியனவற்றின் ஒன்றுபட்ட விளைவே இச்சீரழிவு. கொவிட் கொள்ளை நோய் அந்தச் சீரழிவுக்கு வேகமூட்டியதே தவிர அதனைத் தோற்றுவிக்கவில்லை. ஆகவே ஆட்சியினர் அதன்மேல் முழுப்பழியையும் சுமத்துவது அவர்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அரசியல் உபாயமேயன்றி வேறில்லை. ஆகவே இக்கட்டுரையின் பிரதான நோக்கம் இச்
சீரழிவுக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள அல்லது மறைந்திருக்கும் இன்னொரு அடிப்படைக் காரணியை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகும். அதனை இச்சீரழிவின் மறுபக்கம் என்றும் கூறலாம்.
எந்த ஒரு நாடும் அதன் அரசாங்கமும் அந்த நாட்டு மக்களைப் புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. பொருளாதாரம் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படுவது. இவ்வாறான ஒரு பாடத்தை ஜனநாயகத்தைப் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் அதை ஓர் அடிப்படைப் பாடமாக பொருளியல் நூல்கள் கற்பிப்பதில்லை. மக்களின் ஒன்றுதிரண்ட உழைப்புச் சக்தியும், முயற்சியும், நுகர்வும், பரிமாற்றமும் இல்லாமல் பொருளாதாரம் இல்லை. அந்த அம்சங்களின் ஒன்றுபட்ட கூட்டின் விளைவே இன்றைய நவீன உலகு. ஆகவே ஒரு நாட்டின் நிரந்தரச் செல்வம் அந்த நாட்டின் மக்களே. அந்த மக்கள் ஒன்றுபட்டால் இமயத்தையும் வீழ்த்தலாம். அவர்களைப் பிரித்துவிட்டால் ஒரு தூசியைக்கூட நகர்த்த முடியாது. இந்த விளக்கத்தின் யதார்த்தத்தை இரண்டு நாடுகளின் துரிதமான பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு விளங்கலாம். ஒன்று வங்காளதேசம், மற்றது சிங்கப்பூர்.
இலங்கை சுதந்திரம் அடையும்போது வங்காளதேசம் என்ற ஒரு நாடே இருக்கவில்லை. 1971 இல் அந்த நாடு உருவாகியபோது அபிவிருத்தி அடையாத ஒரு பொருளாதாரத்துக்கு இலக்கணமாகவே அந்த நாட்டை பொருளியலாளர்கள் மதிப்பிட்டனர். வறுமை, பட்டினி, கல்வியறிவின்மை, நோய் ஆகிய பிணிகளுக்கு உறைவிடமாக வங்காளதேசம் அன்று விளங்கியது. ஆனால் இன்று 163 கோடி மக்களுடன் பொருளாதாரத்திற் துரித வளர்ச்சிகண்டு இலங்கைக்கே கடன் பிச்சைபோடும் நிலைக்கு மாறியுள்ளதன் இரகசியம் என்னவோ? அந்த நாட்டின் பொருளியலாளர்கள் பலரை நான் அணுகிக் கேட்டபோது அவர்கள் கூறிய ஒரே விடை எவ்வாறு அந்த நாட்டின் பிரதான வளமான மக்கள் பிரயோசனப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே அப்பொருளாதார வளர்ச்சியின் இரசியம் என்றனர். இலங்கையில் உள்ளதுபோன்று அங்கும் இன மத வேறுபாடுகள் உண்டு. ஆனால் அந்த வேறுபாடுகளை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு, பொருளாதாரப் போராட்டத்தில் அம்மக்கள் ஒன்றுதிரண்டு அந்த நாட்டை கட்டியெழுப்புகின்றனர்.
இரண்டாவது உதாரணம் சிங்கப்பூர். 1950களில் ஒரு முறை அந்நாட்டின் பிதாமகன் லீ குவான் யூ இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கையின் வளர்ச்சியைக்கண்டு பொறாமை கொண்டார். இலங்கையின் வளர்ச்சியை எவ்வாறுதான் தனது நாடு எட்டிப்பிடிக்குமோவென அங்கலாய்த்தார். உண்மையிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கையே பொருளாதார வளர்ச்சி ஏணியில் அப்போது கால்வைத்திருந்தது. ஆனால் 1980களில் ஒரு நாள் அத்தலைவன் தனது நாட்டுமக்களைப் பார்த்து உரையாற்றியபோது இலங்கையின் வீழ்ச்சியை உதாரணங்காட்டி தனது மக்களை இலங்கையின் வழியிற்செல்ல முனையாதீர் என எச்சரித்தார். இலங்கை சென்ற இன மத வெறிபிடித்த பாதை ஒரு பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கும் என்பதையே அவர் அன்று தெளிவுபடுத்தினார். அதன் உண்மையை இரு நாடுகளும் இன்று சித்தரிக்கின்றன. மூன்றாம் உலகநாட்டுப் பொருளாதாரமாக அன்று விளங்கிய சிங்கை இன்று முதலாம் உலகநாட்டுப் பொருளாதாரமாக மிளிர, முதலாம் உலகநாட்டுப் பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்க இருந்த இலங்கையோ இன்று கேவலம் மூன்றாம் உலக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
வங்காளதேசமும் சிங்கப்பூரும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் களைந்தெறிந்துவிட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அடிப்படையில் யாவரையும் ஒன்று திரட்டி அவர்களின் ஒன்றுபட்ட உழைப்பாலும் முயற்சியாலும் அந்நாடுகளின் பொருளாதாரங்களை கட்டியெழுப்பி அதன் பிரயோசனத்தை அம்மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர். உண்மையிலேயே வங்காளதேசம் அடையவேண்டிய வளர்ச்சி இன்னும் எவ்வளவோ உண்டு. அதன் பிரச்சினைகள் முற்றாகத் தீரவில்லை. இருந்தும் அது போகும் பாதை சரியான பாதை என்பதையே அதன் குறுகிய கால அனுபவம் உணர்த்துகின்றது. ஆனால், இலங்கையில் நடந்ததும் நடப்பதும் என்ன?
இது எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சோகக் கதை. சுதந்திரம் கிடைத்ததன்பின் அரசாங்கம் முதலிற் செய்த வேலை இலங்கை மக்களென்றால் யார் என்பதை வரையறை செய்ததே. இந்த வரையறைக்குள்ளிருந்து முதலில் இந்திய வம்சாவழியினரை ஒதுக்கினர். அதன்பின் தமிழினத்தை ஒதுக்க முயன்று ஒரு போரையே உருவாக்கினர். இப்போது முஸ்லிம்களையும் அன்னியர் என்கின்றனர். இறுதியாக, இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் சுமார் மூன்றிலொரு பகுதி மக்களை ஓரங்கட்டியுள்ளனர். ஆகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த மூன்றிலொரு பகுதியினரின் பூரணமான பங்களிப்பை எதிர்பார்க்க முடியுமா? எல்லா மக்களையும் ஒன்றாகக் கட்டியணைக்காமல் ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண முடியுமா? சுருக்கமாகச் சொன்னால் இனவாதத்தை வளர்த்துக்கொண்டு பொருளாதார மலர்ச்சி காணமுடியாது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மறுபக்கம் இதுதான்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அச்சாணியாகச் செயற்படுகிறார் இன்றைய ஜனாதிபதி. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பேரினவாதத்தை வளர்ப்பதாகவே இருக்கிறது. இன்றைய பொருளாதாரச் சீரழிவு இனவாதம் தந்த பரிசே என்றால் அது மிகையாகாது. உதாரணமாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்தபோது வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்டனர். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ் மக்களுக்குத் தேவை அதிகாரப் பகிர்வு அல்ல, பொருளாதார அபிவிருத்தியே என்றார். இந்த வார்த்தைகளை நன்றாகச் சிந்தித்துப்பார்த்தால் அவற்றுள் ஒழிந்திருக்கும் இனவாதத்தை உணரலாம். அவரது வார்த்தைகள், தமிழர்களைப் பார்த்து, கும்பிட்டு வாழுங்கள் நீங்கள் குபேரர்களாகலாம் என்பதுபோல் இல்லையா? இந்த அந்தரங்கத்தை முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்கள் யாவும் உணர்தல் வேண்டும். இந்தப் பேரினவாத மனப்பாங்கும் அதனை ஒட்டிய செயற்பாடுகளுமே இன்று சர்வதேச அரங்குகளில் இலங்கையின் பெயரைப் பாழ்படுத்தியுள்ளன. ஐ.நா. மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
இன்று நிலவும் பொருளாதாரச் சீரழிவு இன்னும் தொடரும். இந்தியாவின் தயவையும் சீனாவின் உதவியையும் நம்பி இந்தச் சரிவை நிமிர்த்த முடியாது. சர்வதேச நாணய நிதியின் உதவியை நாடுவதைத்தவிர வேறுவழி இல்லை என்று எத்தனையோ பொருளாதார வல்லுனர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆலோசனை கூறியும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்றேதான் கால்கள் என்பதுபோல் ஜனாதிபதி வகுத்த வளர்ச்சிப்பாதையே பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு மாயையில் சிக்குண்டு முழு அரசும் அதன் கேந்திர ஸ்தாபனங்களும் இயங்கியதால் விளைந்த விபரீதமே இந்த அழிவு. இப்போது தனது தவறை உணர்ந்து சர்வதேச நிதியின் உதவியை நாட ஜனாதிபதி இணங்கியபோதும் அந்த ஞானம் காலம்கடந்த ஒன்றென்பதால் அந்த நிதியின் பரிகாரம் மட்டும் இப்பாரிய நோயைத் தீர்க்காது.
மக்களின் கொதிப்பு ஏற்கனவே வீதிக்கு வரத்தொடங்கி விட்டது. ராஜபக்சாக்களே வெளியேறுங்கள் என்ற கோஷங்கள் ஒலிக்கின்றன. ஆனாலும் அந்தக் கொதிப்பினை ஒன்றுதிரட்டி ஆட்சியை மாற்றுவதற்கு எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் இப்போது வலுவில்லை. இந்த நிலையில் இனவாதத்தையே மீண்டும் ஓர் ஆயுதமாகப் பாவித்து இன்றைய அரசும் அதன் ஜனாதிபதியும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எத்தனிப்பர். அடுத்த மூன்று வருடங்களுக்கும் இதே ஆட்சி நீடித்தாலோ அதற்கு முன்னர் அது கவிழ்ந்து வேறோர் ஆட்சி ஏற்பட்டாலோ இனவாதத்தை ஒழிக்காமல் இந்த நாட்டை என்றுமே கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் உணர வேண்டும். இந்த இனவாதம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீரூற்றிப் பசளையிட்டு வளர்க்கப்பட்ட ஒரு நஞ்சு மரம். அதன் துர்நாற்றத்தில் நாடே இன்று அழிந்துகொண்டிருக்கிறது. அந்த மரத்தை வெட்டி எறிவார் யாரோ?- Vidivelli