(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதிமன்றங்கள் மற்றும் காதி நீதிபதிகள் மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டுவரும் பொய் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கு காதிநீதிபதிகள் போரம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமுதித சமரவிக்ரம காதிநீதிமன்றங்கள் மற்றும் காதி முறைமை பற்றி ஒரு சிலரை நேர்கண்ட போது தவறான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காதி நீதிமன்றங்களை இல்லாமற் செய்யுமாறு கோரப்பட்டது.
இதன் உண்மைத் தன்மையை அதே யுடியூப் நிகழ்ச்சி மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கு தனக்கு அனுமதி வழங்குமாறு காதி நீதிவான்கள் போரத்தின் உபதலைவரும், இரத்தினபுரி காதிநீதிவானுமாகிய எம்.இப்ஹாம் யெஹ்யா நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்தினத்தைக் கோரியுள்ளார்.
அனுமதி கோரி கடந்த 21ஆம் திகதி அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமுதித நால்வரை நேர்கண்ட போது காதிநீதிவான்கள் தங்களிடம் நீதிகோரிவரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும், இலஞ்சம் பெற்றுக்கொண்டு தவறான தீர்ப்புகள் வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலே அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதிநீதிபதிகள் போரத்தின் உபதலைவர் கலந்துகொண்டு தெளிவுகள் வழங்கவுள்ளார்.- Vidivelli