(றிப்தி அலி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சர்வகட்சி மாநாட்டினை பகிஷ்கரிப்பது என மேற்கொண்ட தீர்மானத்தினை மீறி அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் கூட்டப்பட்ட இந்த சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, அபே ஜனபல கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலை அமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என அறிவித்திருந்தன.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் குறித்த மாநாட்டினை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்தன.
எனினும், மேற்குறிப்பிட்ட இரண்டு கட்சிகளின் தீர்மானத்தினை மீறி அக்கட்சிகளின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஹாபீஸ் நசீர் அஹமட் ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஸ். எம்.எம்.முஷாரப் மற்றும் அலி சப்ரி றஹீம் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.- Vidivelli