“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க
"பாரம்பரியம்" நிகழ்ச்சியில் கெளரவம்
ஏ. எல். எம். சத்தார்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்தியில் அடையாளம் தேடி புகழைத்தேடிக்கொண்ட, சன்மார்க்க போதகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பாடகர்களை இன்றைய, அடுத்த தலைமுறைக்கும் இனங்காட்டி, ஆவணப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வரும் நிகழ்ச்சியே “பாரம்பரியம்” நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சி தொடரில் கடந்த 1ஆம் திகதி செவ்வாய் இரவு ஒலிபரப்பாகிய பாரம்பரியம் நிகழ்ச்சி முற்றும் மாறுபட்ட நிகழ்ச்சியாக மிளிர்ந்து நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புகள் வழங்கியோர் வரிசையில், முஸ்லிம் அல்லாதோரும் பெரும் பங்காற்றியுள்ளமையினை கடந்த பாரம்பரியம் பதிவாக்கியமை பாராட்டுக்குரியதே.
கடந்த நிகழ்ச்சியில் சிங்கள திரையுலகின் பிரபல பாடகர் முதுபெரும் கலைஞர், சுஜாத்தா அத்தநாயக்க சிறப்பதிதியாக கலந்து கொண்டார். அவர் பாடிய இஸ்லாமிய கீதங்களைக் கொண்டே அவரது நிகழ்ச்சியினை மெருகூட்டியமை நிகழ்ச்சி அதிகளவில் நேயர்களை வெகுவாக கவர்ந்தது எனலாம்.
தனது பிரபலத்துக்கு, முஸ்லிம் சேவையும் பெரிதும் துணையாகியமையினை, மகிழ்ச்சி பொங்க அவர் தெரிவித்தமை, முஸ்லிம் சேவைக்கு அவர் வழங்கிய கௌரவமே!
திருமதி. சுஜாத்தா அத்தநாயக்க, தனது வானொலி பிரவேசம் பற்றி சொன்ன போது, 1950இல் தனது 8ஆவது வயதில், சிங்கள சுதேசசேவையில் ஒலிபரப்பான “விசித்ராங்கய” நிகழ்ச்சியே தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என குறிப்பிட்டதோடு, அந் நிகழ்ச்சிக்கு தன்னை, பிரபல இசைக்கலைஞரும், பாடகருமான, ஏ.ஜே. கரீம் அறிமுகப்படுத்தியதாக மிகுந்த நன்றியுணர்வோடு குறிப்பிட்டார்.
முஸ்லிம் சேவை பேணி பாதுகாத்துவந்த, வானொலி வரலாற்றில் தனித்துவம் நிறைந்த இசைத்துறை பாரம்பரியத்துக்கு, “சிங்களக் குயில்” சுஜாத்தா அத்தநாயக்க வழங்கிய பங்களிப்புகள் நேர்த்தியான நேர்காணல் மூலம் புலப்பட்டது.
தான் அறிந்தவரை இஸ்லாமிய கீதங்கள் பாட இஸ்லாமியராகவே இருக்கவேண்டும் என சுட்டிக்காட்டி, தன்னை இனங்கண்டு, முஸ்லிம் சேவையில் அன்றிருந்த எம்.எச். குத்தூஸ், டி.எப்.லத்தீப், ஏ.ஜே.கரீம் போன்றவர்கள் முஸ்லிம் சேவையில் பாட வாய்ப்பு வழங்கி, ஒரு பிரபலமிக்க பாடகராக தன்னை அடையாளப்படுத்தியதாக குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
அது ஒரு நேரடியாக ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி என்றும் ஏ.ஜே. கரீம் அந்நிகழ்ச்சிக்கு இசை வழங்கியதாகவும் நினைவுபடுத்தி மகிழ்ந்தார்.
இஸ்லாமிய கீத பாடல்களில் தமிழ் மொழி போன்றே அரபு மற்றும் குர்ஆன் வசனங்களும் பயன்படுத்தப்பட்டன. நபியவர்களின் மனைவி கதீஜா, மகள் பாத்திமா இருவரும் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த இரு பெண்கள். நாமும் அவர்களை முன் மாதிரியாகக்கொண்டு வாழவேண்டும். பாடல் ஒலிப்பதிவின் போது இவர்களின் வாழ்க்கைச்சரிதம் பாடலின் அர்த்தம் போன்றவற்றை பாடலாசிரியர், சம்பந்தப்பட்டோரிடம் கேட்டு தெரிந்தே பாடுவதாக பேட்டியின் போது அவர் குறிப்பிட்டார்.
தான் பாடிய பாடல்கள் அனைத்தும் தனக்கு பிரபலத்தினை தேடித்தர காரணமாக இருந்த தன் நினைவுக்கு வந்த இஸ்லாமிய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தன்னோடிணைந்து பாடியோர்களை நினைவுகூர்ந்தமை அவரது சிறப்பினை வெளிப்படுத்தியது. முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம். எச். குத்தூஸ், டீ.எப்.லத்தீப், பீர் முஹம்மத், என்.எம்.நூர்தீன், பீர்முஹம்மத், ஏ.ஜே.கரீம். கே.எம், ஸவாஹிர், பூஜி இஸ்மாயீல், டீ.எஸ்.ரமழான், எம்.ஐ.எம்.அமீன், முஹம்மத் பியாஸ், ஏ.எம்.ஸாதிகீன். இஷாக் மொஹிதீன், டொனி ஹசன், அருள்லந்ரா, ஏ.எம்.ஏ.மொஹிதீன் போன்றோர்களை நினைவுபடுத்தி, இன்னும் பலர் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையுமே குறிப்பிட முடியாது போனமைக்கு தன் கவலையை தெரிவித்துக்கொண்டார்.
தான் வழங்கிய “இளம்பிறை கீதங்கள்” என்ற இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய இசைக்கச்சேரியை நினைவுபடுத்தி அந்த வைபவத்துக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட, முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார். இசையமைப்பாளராக இருந்த முஹம்மத்சாலி, டீ.எப்.லதீப், அந்நிகழ்ச்சயின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் போன்ற விபரங்களையும் சொல்லி மகிழ்ந்தார்.
பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றி சுஜாத்தா அத்தநாயக்க குறிப்பிடுகையில், இனங்களிடையே, ஒற்றுமை ஏற்படுத்தக்கூடிய சிறந்ததொரு நிகழ்ச்சியே பாரம்பரியம் நிகழ்ச்சி என்றார்.
இந்நிகழ்ச்சி தொடரவேண்டும் என்றும் இன்னும் தன் போன்ற பல மூத்த கலைஞர்களையும் அழைத்து, அவர்களையும் கௌரவப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்னும் தான் அறிந்தவரை, ஆண்களே முஸ்லிம் சேவைப்பணிப்பாளராக இருந்திருக்கிறார்கள்.
இன்று அதுவும் முதலாவது பெண் பணிப்பாளராக பாத்திமா ரினூஸியா இருப்பதை ஒரு பெண்ணான தான் மகிழ்வதாக தெரிவித்து, பாரம்பரியம் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்தமைக்கு தொகுப்பாளர் எம்.எஸ்.எம். ஜின்னாவுக்கும் முஸ்லிம் சேவைக்கும்ன் நன்றி கூறி விடைபெற்றார்.
சினிமா, சிங்கள பாடல்கள் என அதிக மொழிகளில் பாடி உலக அரங்கில் புகழ்பூத்த முதுபெரும் பாடகி சுஜாத்தா, இந்நிகழ்ச்சியில் முற்று முழுதாக முஸ்லிம் சேவையின் தொடர்புகளை மாத்திரம் குறிப்பிட்டு கூறியமை விசேட பாராட்டுக்குரியது.-Vidivelli