சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது.
தமது நாட்டு பிரஜைகளை எந்த காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் ஒப்படைக்கமாட்டோம் என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக சவூதியின் முன்னாள் புலனாய்வு துறை பிரதானி அஹ்மட் அல் அஸிரி மற்றும் அரச குடும்பத்தின் முன்னாள் ஆலோசகரான சவுட் அல் குவட்டானி உள்ளடங்களாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை குறித்த 11 பேருக்கும் எதிராக துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவும் பிறப்பித்தது.
இந்நிலையிலேயே, அவர்களை தமது நாட்டிடம் ஒப்படைக்க வேண்டுமென துருக்கி வலியுறுத்தி வருகின்றது. எனினும், போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க துருக்கி மறுத்து வருவதாக சவூதி குற்றஞ்சாட்டி வருகின்றது. அத்தோடு, உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு துருக்கியிடம் கோரியுள்ளதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் சவூதி நீதிமன்றில் அவை விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் சவூதி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புல்லியுள்ள சவூதி தூதரகத்திற்குச் சென்றிருந்த ஜமால் கஷோக்ஜி காணாமல் போனார். பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சவூதியிலிருந்து சென்ற தேர்ச்சிபெற்ற குழுவொன்றினால் அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தடயமின்றி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஐவர் மரண தண்டனையை எதிர்கொள்ளலாமென கடந்த வாரம் சவூதி அரச வழக்கறிஞர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.