(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் உரிய திருத்தங்களை முஸ்லிம் சமூகத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளலாம். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. இதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம். முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் சர்வதேசத்துக்கு ஒன்றும் இலங்கைக்குள் மற்றொன்றுமாக ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் கூறிவருவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பில், சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
தனியார் சட்டங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் இன, மத, பேதங்களின்றி போராடி வருகிறோம். அனைத்து அரசாங்கங்களும் தனியார் சட்டங்களில் கைவைக்காது அவற்றைப் பாதுகாத்து தந்துள்ளன. முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிங்கள, தமிழ் மக்களுக்கும் தனியார் சட்டங்கள் உள்ளன.
நாட்டின் தனியார் சட்டங்களில் கைவைக்க வேண்டாமென நாங்கள் அரசாங்கத்தைக் கோருகிறோம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நாம் இவற்றைக் காலத்துக்குக் காலம் கோரி வந்திருக்கிறோம்.
காதி நீதிமன்றங்களில் உள்ள குறைபாடுகளைத் திருத்தும் பொறுப்பை முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தயாராகவே இருக்கிறது. வரலாற்றில் அரபி வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் முஸ்லிம்கள் இந்நாட்டில் சமாதானமாகவே வாழ்கின்றனர். எமக்கு பிரச்சினைகள் தேவையில்லை. சமாதானம் தேவை.
வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மத்திய கிழக்கு அரபு நாடுகளின் தூதுவர்கள் மத்தியில் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கு உரியது. அது இல்லாமற் செய்யப்படமாட்டது எனக் கூறினார். அப்போது பிரதமரும் உடனிருந்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம். ஆனால் இல்லாதொழிக்க முடியாது என்பதை அரசாங்கத்திடம் கூறுகிறோம். திருத்தங்களை எதிர்க்க வில்லை.
முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமல்ல, தேச வழமைச்சட்டம், கண்டியர் சட்டம், பொதுச் சட்டம் அனைத்துச் சட்டங்களும் எமக்குத் தேவை. நாட்டின் பொதுச் சட்டத்தை நாம் கௌரவப்படுத்துகிறோம். மதிக்கிறோம்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு அங்குல நிலத்தையேனும் கோரவில்லை. போராடவுமில்லை. நாம் அனைத்து மக்களுடன் ஒன்றாக சமாதானமாக வாழும் மக்கள்.
முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை எதிர்க்கவில்லை. அல்லாஹ் எமக்கு வழங்கிய சட்டத்தினால் நீண்ட காலமாக ஆளப்பட்டு வருகிறோம். ஆங்கிலேயர் காலத்திலும் நாம் முஸ்லிம் சட்டத்தைப் பாதுகாத்து வந்தோம். அதனால் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை இல்லாதொழிக்க வேண்டாம் என்றார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அங்கு உரையாற்றுகையில், ‘ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தை அரசாங்கம் இல்லாமற் செய்ய முயற்சிப்பது பாரிய சவால் ஒன்றினை எதிர்கொள்வதாகும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு போதும் கை வைக்க முடியாது. போர்த்துக்கீசர் காலத்திலும் இச்சட்டம் அமுலில் இருந்தது. அவர்களும் இதில் கை வைக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசுகையில், முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்குரியது. அது பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது பிரதமரும் அங்கிருந்தார். இதுவரை காலம் இச்சட்டத்தை இல்லாமற் செய்வதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற உள்ள நிலையில் இச்சட்டம் பாதுகாக்கப்படும் என்கிறார்கள்.
இச்சட்டத்தை இலக்கு வைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.-Vidivelli