உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் உண்மையை வெளிப்படுத்த அழுத்தம் பிரயோகியுங்கள்
மிச்சேல் பச்லெட்டிடம் பேராயர் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது குறித்து உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , அது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள இலங்கை கத்தோலிக்கர்கள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பேராயர் பரிசுத்த பாப்பரசரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெனீவா சென்று நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கும் இவ்விடயத்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் துணை ஆயர் கலாநிதி ஜே.டீ.அன்தனி ஜயக்கொடி தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக நாம் அனைவரிடமும் தெரிவித்தமைக்கமைய , அனைத்து மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ந்து வேறு மாற்று வழிகள் எவையும் இன்மையினால் சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் தீர்மானித்தோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதன் இரண்டாம் கட்டமாகவே நேற்று பிற்பகல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.- Vidivelli