ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: கர்தினால் வத்திக்கானுக்கு சென்றதால் அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது
முழுமையான அறிக்கை இல்லை என்கிறார் முஜிபுர்
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ஒருவருடமாக கேட்டும் அரசாங்கம் தரவில்லை.
ஆனால் கர்தினால் மெல்கம் ரன்ஜித் சர்வதேசத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வதாக தெரிவித்துடன் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்திருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் தொடர்பாக விசாரணைகளை பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவே முன்னெடுத்துவந்தார். என்றாலும் நாமல் குமார என்ற நபர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் ஆகியோரை கொலை செய்ய பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா சதித்திட்டம் மேற்கொண்டுவருவதாக தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய நாலக்க சில்வா கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.
ஆனால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும்வரை நாலக்கசில்வா அடைக்கப்பட்டார். இறுதியில் சஹ்ரானை கைதுசெய்ய பின்தொடர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார். அத்துடன் நாமல் குமார தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு என்ன நடந்தது என தெரியாது. கொலை அச்சுறுத்தல் தொடர்பில் நாமல் குமார தெரிவித்த முறைப்பாடு தொடர்பாகவும் அரசாங்கம் மறந்துள்ளது.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ஒருவருடமாக நாங்கள் அரசாங்கத்திடம் கோரி வந்தோம். கார்த்தினாலும் அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். ஆனால் அரசாங்கம் அதனை மறுத்துவந்தது. என்றாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாததனால் இதுதொடர்பாக சர்வதேசத்துக்கு முறைப்பாடு செய்வதாக கர்தினால் மெல்கம் ரன்ஜித் தெரிவித்திருந்தார். தற்போது கர்தினால் வத்திகானுக்கு சென்றுள்ளார். அதனால் அரசாங்கம் அச்சப்பட்டு தற்போது ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை பாராளுமன்ற நூலகத்துக்கு கையளித்திருக்கின்றது.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து மேற்கொண்டுவந்தது, குற்றப்புலனாய்வின் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோராகும். இவர்களுடன் 19பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் 19பேரையும் அரசாங்கம் இடமாற்றியிருக்கிறது. அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர்களாக 6மாதத்துக்கு ஒருவர் என இதுவரை 6பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருப்பதாகவும் அந்த நபர் யார் என்தை அறிந்துகொள்ளும்வரை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது என ரவி செனவிரத்ன பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அவரின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என கேட்கின்றோம். ஷானி அபேசேகர முன்னுக்கு கொண்டுசென்ற விசாரணையை முன்னுக்கு கொண்டு சென்றார்களா?. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவரை காலத்துக்கு காலம் பெயரிடவே விசாரணை அதிகாரிகளை அரசாங்கம் மாற்றி வந்திருக்கின்றது.
அத்துடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கை முழுமையான அறிக்கை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருக்கின்றார். அப்படியாயின் ஏன் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய அறிக்கைகளை மறைத்துக்கொண்டே பாராளுமன்றத்துக்கு அறிக்கையை சமர்ப்பித்திருக்கவேண்டும் என்றார்.- Vidivelli