பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் ஜெனீவா அறிக்கைக்கு பயந்து கொண்டுவரப்பட்ட திருத்தமே
அரசாங்கத்தின் போலி முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்கிறார் ஹக்கீம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
மார்ச் மாதம் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குப் பயந்தே பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்த யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது என தெரிவித்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் போலி முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து வேட்டை நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்து அடிக்கடி தங்களுடைய அரசியல் எதிரிகளையும் அப்பாவிகளையும் கைதுசெய்து நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்திருந்துவிட்டு நீதிமன்றத்தின் உத்தரவு வரும் என்ற பயத்தில் விடுவிக்கும் நிலையே நீடிக்கிறது. இதன் மூலம் அப்பாவிகள் பல மாதக் கணக்கில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். வேண்டுமென்று சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் அவர்கள் கைது செய்யப்படுவதால் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அடாத்தான செயற்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும்.
ஜெனீவாவில் மார்ச் மாதம் கொண்டுவரப்படுகின்ற அறிக்கைக்கு பயந்து அரசாங்கம் போலியான திருத்தங்கள் சிலவற்றை கொண்டுவந்து தங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்கொள்ள முயற்சிக்கிறது. பொருளாதார தடை ஏற்படாதிருக்கவும் ஜீ.எஸ்.பி.வரிச் சலுகை இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் இன்று ஒரு திருத்தச் சட்டத்தை முன்மொழிந்திருக்கின்றனர். இதனை நாம் ஏற்க முடியாது. முழுமையாக பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்.
நாட்டில் பிரிவினைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்காலிக சட்ட ஏற்பாடே பயங்கரவாத தடை சட்டமாகும். இச்சட்டம் நிரந்தரமாக 42 வருடங்கள் நீடித்திருக்கிறது. இந்த சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும்.
புதிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் உலகில் நடைமுறையில் இருக்கின்ற மனித உரிமை சாசனங்களுக்கு கட்டுப்பட்ட புதிய சட்ட மூலமொன்றை அறிமுகப்படுத்தலாம். இதைத்தான் நாங்கள் நீண்டகாலமாக கதைத்து வருகின்றோம். இதை தொடர்ந்தும் புறந்தள்ள அனுமதிக்க முடியாது. இந்த அரசின் போலி முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருக்கிறோம். இது நாடுதழுவிய ரீதியில் இடம்பெறுவதையிட்டு ஆறுதல் அடைகிறோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் பொதுவாகவே ஆபத்தானது. எனினும், அதிகமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே இச்சட்டம் அதிகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும், இது ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் பாதிக்கின்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். – Vidivelli