ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு உறவினர்கள் செல்ல அனுமதி
பிரதேச சபையை தொடர்புகொண்டு அனுமதி அட்டையைப் பெறலாம்
(எச்.எம்.எம். பர்ஸான்)
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு, அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் நேரில் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மையவாடியை நிர்வகிக்கும் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெற்று உறவினர்கள் மையவாடிக்கு விஜயம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌபர், செயலாளர் எம்.எஸ். சிஹாப்தீன் ஆகியோர் ‘விடிவெள்ளி’க்கு கருத்து வெளியிடுகையில், கொவிட் தொற்றினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இம்மாதம் 12 ஆம் திகதி வரை 3527 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 2940 முஸ்லிம்களும் 257 இந்துக்களும் 248 பௌத்தர்களும் 81 கிறிஸ்தவர்களும் அடங்குகின்றனர்.
இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களது உறவினர்கள், குறித்த மையவாடிக்கு நேரில் விஜயம் செய்து தமது உறவுகளுக்காக பிரார்த்தனையில் ஈடுபட நாம் அனுமதி வழங்கியுள்ளோம். இவ்வாறு விஜயம் செய்ய விரும்புபவர்கள் தாம் வருகை தரத் தீர்மானித்துள்ள தினத்திற்கு ஒரு நாள் முன்பதாக எமது பிரதேச சபையில் இதற்காகப் பொறுப்பாக்கப்பட்டுள்ள அதிகாரிகளான எம். இமாம் 0779798787 மற்றும் ஏ. அக்பர் 0777108383 ஆகியோரை மேற்படி இலக்கங்களில் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க வேண்டும். இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களது விபரங்கள் அடங்கிய ஓர் அட்டையை நாம் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கியுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர் இலக்கத்தையும் வருகை தர விரும்புபவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் மேற்படி அதிகாரிகளிடம் முன்கூட்டியே வழங்க வேண்டும். இதற்கமைய தயார் செய்யப்படும் அனுமதி அட்டைகளை மையவாடியைத் தரிசிக்கும் தினத்தன்று காலையில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு நேரில் வருகை தந்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் ஒரு அனுமதி அட்டை மூலம் 15 பேர் மாத்திரம் மையவாடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாத்திரமே மையவாடிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியானது ஏலவே அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்களின் உறவினர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
இதேவேளை கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும்போது ஏற்கனவே பின்பற்றிய விதிமுறைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக இரண்டு உறவினர்கள் மாத்திரமே மையவாடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.- Vidivelli