நாட்டில் 1979 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரி அண்மைக்காலமாக பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்தே இந்த விடயம் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 40 வருடங்களில் இந்தக் கொடிய சட்டமானது பல்வேறு தரப்புகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் ஏராளமான தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்றும் சுமார் 50 பேரளவில் தமிழ் அரசியல் கைதிகள் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மறுபுறும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியது. அன்றிலிருந்து இன்று வரை நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், மத பிரசாரகர்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இரண்டு தடவைகள் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் உட்பட பலரும் இந்தக் கொடிய சட்டத்திற்குப் பலியானவர்களே. இவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் வழக்குகள் தொடர்கின்றன. எனினும் இன்னமும் எந்தவித தீவிரவாத செயல்களுடனும் தொடர்புபடாத நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த தன்னிச்சையான கைதுகள் மூலம் அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலர் இன்று தமது பெறுமதியான வாழ்வைத் தொலைத்து சிறைக் கம்பிகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் இவர்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எந்தவித குற்றமும் செய்யாத இவர்களை குடும்ப உறுப்பினர்கள் கூட கைவிடுகின்ற மோசமான நிலை தோன்றியுள்ளது. சட்டத்தரணிகளின் உதவிகளைப் பெறுவதற்குக் கூட பலருக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் சில சமயங்களில் பல இலட்சக் கணக்கான ரூபாக்களை சட்ட உதவிக்காக செலவிட வேண்டிய நிலைக்கும் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மிக மோசமான சரத்துக்கள் நபரொருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும் எவ்வித விசாரணைகளுமின்றி 18 மாதங்கள் வரை தடுத்துவைப்பதற்குமான அதிகாரத்தை வழங்குவதுடன் அது சந்தேகநபர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கும் வழிவகுக்கின்றது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர். மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என பல தடவைகளில் வலியுறுத்தியுள்ளன. எனினும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இச் சட்டத்தை தமக்கு விரோதமானவர்களுக்கு எதிராகவும் அல்லது தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான கருவியாகவுமே பயன்படுத்தி வந்துள்ளன.
இந் நிலையில்தான் இம்மாத இறுதியில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் முக்கிய கவனத்தைப் பெறவுள்ளன. இதன்போது தாம் குறித்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளதாக கண்துடைப்புச் செய்வதற்காகவே அரசாங்கம் அண்மையில் இது தொடர்பான திருத்தங்களை வெளியிட்டது. எனினும் எதிர்க்கட்சியினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் என பலரும் இத்திருத்தங்களை நிராகரித்துள்ளனர். அதுமாத்திரமன்றி இக் கொடிய சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தலைமையில் நாடளாவிய ரீதியிலான கையெழுத்துப் பிரசாரமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை யுத்தம் இடம்பெற்ற காலத்திலிருந்தே இந்த சட்டத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இதற்காக தமிழ் அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சமய தலைவர்கள், பொது மக்கள் என பலரும் முன்னின்று பாடுபடுகின்றனர். ஏனெனில் இச் சட்டத்தின் பாதிப்பை தமிழ் சமூகம் நேரடியாக அனுபவித்துள்ளது. இன்றும் அனுபவித்து வருகிறது. இந் நிலையில்தான் இச் சட்டத்தை ஒழிப்பதற்கான குரல்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஓங்கி ஒலிக்க வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ் அப்பாவி இளைஞர்கள் இச் சட்டத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது முஸ்லிம்களாகிய நாம் அதற்காக குரல் எழுப்பினோமா என்ற கேள்வியையும் ஒருமுறை நம்முள் எழுப்புவது பொருத்தமானது. அன்று நாமும் இணைந்து போராடியிருந்தால், இதனை ஒரு முக்கிய விவகாரமாக சர்வதேசமயப்படுத்தியிருந்தால் இன்று அப்பாவி முஸ்லிம் இச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்திருக்கலாம். எனினும் அது நடக்கவில்லை.
இந் நிலையில் தற்போது நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதாவது முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும். தற்போது அமுலிலுள்ள கொடிய சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேநேரம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படும் வகையிலான புதிய சட்டத்தை கொண்டு வருமாறு முஸ்லிம் சமூகமும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என சகலரும் இது தொடர்பில் களமிறங்கிச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli