ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட முயற்சி
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகப் பதவி வகித்தபோது முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக யூ.எல்.எம்.என். முபீன் தெரிவிக்கிறார்.
2009 ஆம் ஆண்டு நான் மாகாண சபை உறுப்பினராக செயற்பட்டபோது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபையில் தனிநபர் பிரேரணை கொண்டு வந்து விலாவாரியாக உரையாற்றினேன். பிரேரணையின் பின்னர் அப்போதைய மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் மூன்று மாவட்ட குழுக்களும் மாகாண குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்படி குழுக்களை இயங்க விடாமல் பாரிய தடைகளை ஏற்படுத்தியது.
அதாவது மட்டக்களப்பில் முஸ்லிம்கள் காணிகளை அபகரித்துள்ளதாக அரசாங்க மட்டத்திலும் அதற்கு வெளியிலும் மிகப் பொய்யான பரப்புரை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது” என்றும் முபீன் குறிப்பிடுகிறார்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காணி விவகாரக் குழுவின் தலைவராக இருந்தபோது தனது முயற்சியினால் சம்மேளனம் காத்தான்குடி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு முன்மொழிவு ஆவண அறிக்கையைத் தயாரித்ததாகவும் முபீன் குறிப்பிட்டார்.
காத்தான்குடி மக்கள் முகம்கொடுக்கும் காணி இல்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதிகாரத் தரப்பினருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி அனுப்பி வைத்திருந்த திட்ட முன் மொழிவின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :
முன்மொழிவு – 01
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவை மீள் எல்லை நிர்ணயம் செய்து அதனை இரண்டு பிரிவுகளாக ஆக்குதல். காத்தான்குடியின் மொத்த பரப்பளவு 6.5 சதுர கிலோ மீற்றர்கள். 2020 இல் செய்யப்பட்ட கணக்கெடுப்பின்படி 18 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 15273 குடும்பங்களைச் சேர்ந்த 50358 மக்கள் காத்தான்குடிப் பிரதேசத்தில் வசிக்கின்றனர்.
அதன் எல்லைகள் பின்வருமாறு:
வடக்கு: மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு
தெற்கு: மண்முனை பற்று பிரதேச பிரதேச செயலக பிரிவு
கிழக்கு: வங்காள விரிகுடா
மேற்கு: மட்டக்களப்பு வாவி.
காத்தான்குடி 1901ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு முறைப்படி தனியான உதவி அரசாங்க அதிபர் (AGA) பிரிவாக மாற்றப்படும் வரை மண்முனை வடக்கு பிரதேச இறைவரி அலுவலகத்தின் (DRO) பிரிவின் கீழ் இருந்து வந்தது. இது 1992இல் பிரதேச செயலகப் பிரிவாக மாற்றப்பட்டது.
2020 இல் உள்ளபடி காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு
மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 7747 ஆக உள்ளது. குறிப்பிட்ட சில கிராம அலுவலர் பிரிவுகளில், சுமார் 7338 மக்கள் வசிக்கின்றனர். இதன் காரணமாக தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக காத்தான்குடி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர அனுமதித்தால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. காத்தான்குடியில் மக்கள் தொகை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், சுகாதாரம், குடியிருப்புகள் போன்றவற்றில் சொல்லவொண்ணா இன்னல்களை அந்த மக்கள் எதிர்கொள்கின்றனர்.
காத்தான்குடி மக்கள் மிக அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். இங்கு எழும் பிரச்சினைகள் மற்ற அண்டைய பகுதிகளிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில். 1998ஆம் ஆண்டு நிலப் பரப்பு வர்த்தமானி உட்பட இன்னுமொரு பிரதேச செயலகப் பிரிவு தேவை என்று நாங்கள் முன்மொழிகின்றோம்.
இதற்கு மேலதிகமாக காங்கேயனோடை, சிகரம், கர்பலா, ஒல்லிக்குளம், பாலமுனை மற்றும் கீச்சாம்பள்ளம் ஆகிய இடங்கள் அசாதாரணமான சனத்தொகை அடர்த்தியின் காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவற்றில் சில:
01. சுத்தமான குடிநீர் இல்லை.
02. சுகாதாரமும் சௌக்கியமும் இல்லை.
03. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது.
04. குடியிருப்பதற்கு நிலம் இல்லை.
நிலத்தடி நீர் ஏற்கனவே மாசுபட்டுள்ளதால் சுகாதாரம் மற்றும் சௌக்கியம் பாதிக்கப்பட பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. மக்கள் தொகை அடர்த்தி காரணமாக பல்வேறு வகையான தொற்றுநோய்கள் எளிதில் பரவுகின்றன. நீரால் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மனிதர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாடு நாள்பட்ட சுவாச நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும்.
எதிர்காலத்தில், குடும்பங்கள் விரிவடையும்போது, காணிகள் வழங்கப்படாவிட்டால், மக்கள் சீவிக்க வாழ்விடங்கள் இல்லை. கொழும்பு மாநகரில் நிலவும் காணித் துண்டொன்றின் விலைத் தரத்தை விட காத்தான்குடிப் பிரதேசத்தில் காணியின் விலை அதிகரித்துள்ளது. நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியை முறியடிக்க, இடையில் குறுகிய இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர மக்களுக்கு தீர்வு இல்லை. காத்தான்குடியில் இந்தப் பாரிய காணிப் பிரச்சினையை புதிய விஸ்தரிக்கப்பட்ட பிரதேச செயலகம் உருவாக்கும் இந்த ஏற்பாட்டின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.
எனவே, அதற்கு சட்டபூர்வ நடைமுறையை வழங்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். காத்தான்குடி பிரதேச சபையின் தெற்கு எல்லையில் உள்ள ஒரு பிரதேசம் அண்மைக்காலமாக பரபரப்பான பிரச்சினையாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இது கிழக்கில் உள்ள கடற்கரையிலிருந்து மேற்கே பிரதான சாலை வரை ஹைறாத் நகர் என்று அழைக்கப்படும் ஒரு வாழும் பகுதி. 12 மே 1987, 24 மே 1997 மற்றும் 11 டிசம்பர் 1998 ஆகிய மூன்று வர்த்தமானி அறிவிப்புகளின்படி, இந்த குறிப்பிட்ட பகுதி காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குச் சொந்தமானதாக இருந்திருக்க வேண்டும்
இருந்தும், 1999இல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டபோது, ஆரையம்பதி பிரதேச சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர், நியாயமற்ற முறையில் இந்த விடயத்தில் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கினர். இதனால் சர்ச்சைக்குரிய பகுதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது ஒரு பெரிய குறைபாடு, உண்மையில். இது, அரசு நிர்வாகம் முறையாக செயல்படுவதற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினை மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் தீர்க்கப்பட்டு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.
முன்மொழிவு 2
தற்போதுள்ள காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் கிராம அலுவலர் பிரிவுகளின் அதிகரிப்பு
2020 இல் செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி 50358 மக்கள் தொகையுடன் ஏற்கனவே உள்ள காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் அளவு வெறும் 6.5 கிலோமீற்றர் மட்டுமே. மக்கள் தொகை 15273 குடும்பங்களைக் கொண்டது. பொதுவாக 300 குடும்பங்களைக் கொண்ட ஒரு பிரிவுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் பணிபுரிந்தால், இது 51 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பிரதேச செயலகப் பிரிவு நீடிக்கப்பட்டபோது, மேலே உள்ள முன்மொழிவின்படி, இப்போது மண்முனை வடக்கின் கீழ் வரும் குடும்பங்கள் 3 கிராம அலுவலர் பிரிவுகளையும் இப்போது இருக்கும் 2112 குடும்பங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
புதிய கிராம அலுவலர் பிரிவுகளை ஸ்தாபித்தல்
காத்தான்குடியில் உள்ள மக்கள் தொகைக்கு 50 கிராம அலுவலர் பிரிவுகள் தேவை. ஆனால் தற்போது 18 கிராம அலுவலர் பிரிவுகள் மட்டுமே உள்ளன. இந்த நிலைமை பின்வரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
1. பேரிடர்களின்போது குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவுகளால் தங்கள் பிரிவுகளுக்குள் இருக்கும் மக்களை சரியாக கவனிக்க முடியவில்லை.
2. பேரிடர் சூழ்நிலைகளின்போது பயனாளிகளை நிர்வகிப்பதில் எப்போதும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன.
3. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் பெரும்பாலும் வணிகத்தைச் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட தேவைகள் உள்ளன, அவை கிராம அலுவலரால் கவனிக்கப்பட வேண்டும்.
வறுமை ஒழிப்பு முன்முயற்சிகளின்போது மக்கள் பெறும் இழப்பீடுகளின் சதவீதம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக உள்ளது, ஏனெனில் தற்போதைய கிராம அலுவலர் பிரிவுகள் பெரியதாக உள்ளன.
நிறைவாக
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை மறுசீரமைப்புக்கான அவசியத்தையும் இன்றியமையாததையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இது ஒன்றே மக்களின் துயரங்களுக்கு சாத்தியமான தீர்வாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். காத்தான்குடியை இரண்டு தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற எங்கள் முன்மொழிவு இரண்டாம்பட்சம் மட்டுமே.
நாம் வலியுறுத்துவது காத்தான்குடியை அண்டியுள்ள முஸ்லிம் குக்கிராமங்களை ஒன்றிணைத்து எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். மேலும், தற்போதுள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து அவற்றின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். எங்கள் முன்மொழிவின்படி பிரதேச செயலாளர் பிரிவு பெருப்பிக்கப்படும்போது கிராம அலுவலர் பிரிவுகள் 62 பிரிவுகளைக் கொண்டிருக்கும். பிரதேச செயலாளர் பிரிவுகளை நிர்ணயம் செய்யும் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கும் ஆணைக்குழுவிற்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடயமும் இன்னமும் கிடப்பில்தான் உள்ளது. அதனால் காத்தான்குடி மக்களும் குடியிருக்க காணியின்றி, ஏலவே உள்ள குறுகிய நிலத்திற்குள்ளேயே புதிய கட்டிடங்களை நிர்மாணித்து சனத்தொகை அடர்த்திமிக்க பகுதிக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட (2021) கணக்கெடுப்பின்படி 3243 குடும்பங்கள் காணியற்றோராக உள்ளனர் என்று காத்தான்குடி பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எஸ். சில்மியா தெரிவிக்கிறார். இதுவே தற்போது காத்தான்குடி மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினையின் யதார்த்தமாகும்.
(தொடரும்… )
-Vidivelli