ஆடைக் கலாசாரத்தை முன்வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தற்போது தோன்றியுள்ள சர்ச்சைகள் கவலை தருவனவாகவுள்ளன. ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் இந்து -முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் வகையில் இந்த விவகாரங்கள் திரபடைந்திருப்பது எதிர்காலம் பற்றிய அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது.
இலங்கையில், திருகோணமலை நகரில் அபாயா அணிந்து கடமைக்கு சமுகமளிக்க முடியாதென அப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையான சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரம் சுமார் 4 வருடங்களின் பின்னர் மீண்டும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றில் உள்ளதால் அது பற்றிய வாதப்பிரதிவாதங்களைத் தவிர்த்து, இந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படாதவாறு எவ்வாறு கையாளலாம் என சிந்திப்பதே நம்முன் உள்ள கடமையாகும்.
நாட்டின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையான அபாயா அணியும் உரிமையை அரசாங்க நிறுவனமொன்றில் மறுதலிக்க முடியாது என்பதே அதனை அணிந்து சென்ற ஆசிரியை மற்றும் அவருக்கு ஆதரவான தரப்பின் வாதமாகவுள்ளது. தான் தொடர்ந்து அங்கு பணியாற்றப் போவதில்லை என்றும் ஆனால் தனது உரிமையை மீண்டும் அப் பாடசாலையில் நிலைநாட்டிவிட்டு வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்லத் தயார் என்றும் குறித்த ஆசிரியை குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாடசாலை நிர்வாகம் இடமளிக்குமாயின் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியுமாகவிருக்கும். இதில் முன்னரே மனித உரிமைகள் ஆணைக்குழு, மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் மூலம் எட்டப்பட்ட இணக்கப்பாடு மற்றும் கல்வி அமைச்சின் உத்தரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை நிர்வாகம் செயற்படுமாயின் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியதாகவிருக்கும். அதைவிடுத்து பாடசாலை மாணவர்களையும் வீதிக்கு இறக்கி, பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் என இப் பிரச்சினையின் வட்டத்தை மேலும் விஸ்தரிப்பது ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை.
மறுபுறம் இந்தியாவின் கர்நாடகாவில் பாடசாலைகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என வெடித்த சர்ச்சையானது இன்று இரு மதங்களுக்கிடையிலான ஏட்டிக்குப் போட்டியான விவகாரமாக மாற்றம் பெற்றுள்ளது. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி நிற துண்டுகளை அணிந்துவருவோம் என மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றின் கைகளுக்குச் சென்றுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விரிவான நீதியரசர்கள் குழாமின் தீர்ப்பே இந்த விவகாரத்தின் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது.
துரதிஷ்டவசமாக, இந்தியாவின் ஹிஜாப் விவகாரம் அரசியல் பின்னணிகளைக் கொண்டது என்பதையும் இதனை ஆளும் பாரதீய ஜனதா கட்சி தனது வாக்கு வங்கிக்கான பிரதான கருப்பொருளாக கையிலெடுத்திருக்கிறது என்பதையும் இந்திய ஊடகங்கள் வெளிச்சமிட்டுக்காட்டி வருகின்றன. அடுத்த வருடம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் தூண்டுவதானது, தமது தேர்தல் பிரசாரத்திற்கு வாய்ப்பாக அமையும் என அக் கட்சி கருதுகிறது. இந்த விடயத்தில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது. இது தமது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற போதிலும் தாம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமையின் பக்கம் நிற்பதற்கு பின்னிற்கப் போவதில்லை என அக் கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது இந்திய ஊடகங்களிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதில் முஸ்லிமல்லாத அதிகமானவர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதானது ஆறுதலளிக்கின்ற போதிலும், ஹிஜாபுக்கு எதிரானவர்களது அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்ற அச்சம் மேலோங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல்கள் அண்மிக்கின்ற போது இன, மத, சாதிகளுக்கிடையே கலவரங்களைத் தோற்றுவித்து தமது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வது வழக்கம். தற்போது இந்த ஹிஜாப் விவகாரத்தையும் பூதாகரமாக்கி அங்கு கலவரங்களைத் தோற்றுவித்துவிடுவார்களோ என்ற நியாயமாக அச்சம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
அதேபோன்றுதான் இந்திய ஹிஜாப் விவகாரத்தின் போக்கை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விவகாரமும் நகருமானால் அது இங்கும் தேவையற்ற முரண்பாடுகளையும் பதற்றங்களையும் தோற்றுவிக்கும். இந்தியாவில் இதனை அரசியல்வாதிகள் கையிலெடுத்துள்ளமையே பிரச்சினைகளுக்குக் காரணமாகும். இலங்கையிலும் அவ்வாறு அரசியல்வாதிகளின் கைகளுக்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்லக் கூடாது. மாறாக நீதிமன்றம் மற்றும் கல்வி அமைச்சு மட்டத்திலேயே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். இன்றேல் இந்தியாவைப் போன்றே தமது அரசியலுக்காக இலங்கையிலும் இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே விரிசல்களை உருவாக்கி அதன் மூலம் வாக்குகளைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக அமைந்து விடும்.
எனவேதான் இலங்கை மற்றும் இந்தியாவில் இந்து – முஸ்லிம் சமூகங்களை மையப்படுத்தியதாக இடம்பெறும் இந்த முரண்பாடுகள் களையப்பட்டு சுமுகமான நிலை தோன்ற பிரார்த்திப்பதுடன் நம்மால் இயன்ற நல்லிணக்க முயற்சிகளையும் முன்னெடுப்போமாக.-Vidivelli