சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை
சட்டமா அதிபர் அறிவித்தார்; நீதிமன்ற தீர்மானம் திங்களன்று
( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிப்பதா என்பது தொடர்பிலான தீர்மானம் மேன் முறையீட்டு நீதிமன்றால் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்களன்று அறிவிக்கப்படவுள்ளது.
தனக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த 2021 நவம்பர் மாதம் வழங்கிய உத்தரவை திருத்தி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நேற்று (2) நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகியோர் முன்னிலையில் இவ்வாறு அந்த சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த சீராய்வு மனு கடந்த ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது, ஹிஜாசுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை எனவும் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, அவ்வழக்கின் பிரதிவாதி ஹிஜாஸ் சார்பில் பிணைக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் அன்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த 28 ஆம் திகதி, புத்தளம் மேல் நீதிமன்றம் ஹிஜாஸ் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை, மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேல் நீதிமன்றத்துக்கு பிணை வழங்குவதற்கு அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்னர் கடந்த 2021 நவம்பர் மாதம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளமையினால், அதே நிலைப்பாட்டில் பிணையை மீள நிராகரிப்பதாக நீதிபதி குமாரி அபேரத்ன அறிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே, சீராய்வு மனு நேற்று ( 2) நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜரானார்.
‘கனம் நீதிபதிகளே, கடந்த 28 ஆம் திகதி புத்தளம் நீதிமன்றில் எனது சேவை பெறுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது எனது சேவை பெறுநர் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சட்ட மா அதிபரும் பிணைக்கு ஆட்சேபனைகள் எதனையும் முன் வைக்கவில்லை. அவ்வாறான நிலையிலும், மேல் நீதிமன்ற நீதிபதியால் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லை எனவும் அதற்கான அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளதாகவும் சுட்டிக்காட்டி மேல் நீதிமன்ற நீதிபதியால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எனது சேவை பெறுநரை பிணையில் விடுவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ள நிலையில், அவரை பிணையில் விடுவித்து உத்தரவிடுமாறு கோருகிறேன்.’ என ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.
இதன்போது மனுவின் பிரதிவாதியான சட்ட மா அதிபருக்காக மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டார்.
இந் நிலையில் இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், இந்த பிணைக் கோரிக்கை குறித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்களன்று வழங்குவதாக அறிவித்தது.- Vidivelli