பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் : வெறும் கண்துடைப்பு

மோசமான சரத்துக்கள் நீக்கப்படவில்லை என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்

0 470

வெளிவிவகார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அதில் காணப்படக்கூடிய மிக மோசமான சரத்துக்களை இல்லாமல் செய்யவில்லை. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். மாறாக அச்சட்டத்திலுள்ள மோசமான சரத்துக்களை நீக்குவதுடன் அதனை எமது நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச நியமங்களுக்கும் அமைவானதாக மாற்றியமைக்கக்கூடிய வகையில் திருத்தங்களை மேற்கொள்வதானது நாட்டின் நன்மதிப்பை உறுதி செய்வதற்குக் குறைந்தபட்ச பங்களிப்பை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவையினால் கடந்த 24 ஆம் திகதி அங்கீகாரமளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வெளிவிவகார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அந்தச் சட்டத்தில் காணப்படக்கூடிய மிக மோசமான சரத்துக்களை இல்லாமல்செய்யவில்லை.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபரொருவரிடம் வாக்குமூலம் பெறுவது தொடர்பான சரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இச்சட்டத்தின் பிரகாரம் நீதிவான் அல்லது ஏ.எஸ்.பி நிலையிலுள்ள பொலிஸ் அதிகாரியினால் சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் அதேவேளை, சந்தேக நபரின் உடலியல் ரீதியான முழுமையான பாதுகாப்பும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னரும் பின்னரும் சந்தேக நபர்கள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதுடன் அவர்கள் மத்தியில் வாக்குமூலம் குறித்த அச்சம் காணப்படும். ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக பொலிஸாரால் வெற்றிகரமாக சாட்சியங்களைத் திரட்டமுடியாத சந்தர்ப்பங்களில் அநேகமாக இது நிகழக்கூடும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தை நீதவான் பார்வையிட வேண்டும் என்ற திருத்தம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தம்மை வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக நீதவானிடம் கூறும்பட்சத்தில், அவர் அங்கிருந்து சென்றதன் பின்னர் சந்தேகநபர்கள் உளவியல் ரீதியான சித்திரவதைகளை எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்நிலை காணப்படுகின்றது. அதனைக் களைவதற்கான திருத்தங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முகங்கொடுக்கும் சித்திரவதைகள், மீறல்கள் தொடர்பிலும் அவர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவது குறித்தும் உயர் நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கைதிகள் பொலிஸ் காவலின்கீழ் மாத்திரமன்றி சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படாத ஏனைய கைதிகளாலும் முறைகேடாக நடத்தப்படுகின்றனர்.

அதேவேளை இச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரின் செயற்பாடுகள் அரசியலமைப்பின் ஊடாகவும் சில வழக்குகளில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நியமங்களுக்கு அமைவானதாகக் காணப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்ள மோசமான சரத்துக்களை நீக்குவதுடன் அதனை எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாக மாற்றியமைக்கக் கூடியவகையில் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதானது நவீன அரசு என்ற அடிப்படையில் நாட்டின் நன்மதிப்பை உறுதிசெய்வதற்குக் குறைந்தபட்ச பங்களிப்பை வழங்கும் என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.