இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மிக விமர்சையாக இடம்பெற்று வருவதுடன் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்வுகளில் மாத்திரம் 6500க்கும் மேற்பட்ட படையினர் பங்குபற்றுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். 111 இராணுவ வாகனங்களும் 26 விமானங்களும் இந்த அணிவகுப்பில் பங்குபற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுதந்திர தினம் இவ்வாறு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழமைதான். எனினும் இம்முறை நாடு மிகவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இக் கொண்டாட்டங்களை மிகவும் எளிமையான முறையில் அரசாங்கம் நடாத்த திட்டமிட்டிருக்கலாம் என்பதே பலரதும் அபிப்பிராயமாகும்.
நாட்டில் மக்கள் அன்றாம் உண்பதற்கே வழியின்றித் தவிக்கும்போது, பல மில்லியன் கணக்கான ரூபாக்களைச் செலவு செய்து ஆடம்பரமானதொரு தேசிய நிகழ்வு நடத்தப்பட வேண்டுமா என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ‘த டெலிகிராப்’ பத்திரிகை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பான விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு அதற்கு “உணவுப் பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளதால் இலங்கையில் பசியில் வாடும் குடும்பங்கள்” எனத் தலைப்பிட்டிருந்தது. இக் கட்டுரையில் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்கள் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியின்றித் திண்டாடுவதை உறுதிப்படுத்தும் பல குடும்பங்களின் வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மூன்று வேளையும் சாப்பிட்டு வந்த தமது குடும்பம் தற்போது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இரவில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வதாகவும் அதில் ஒரு தாய் குறிப்பிடுகிறார். இதுவே நாட்டின் கிராமப்புறங்களில் மாத்திரமன்றி நகர்ப்புறங்களினதும் இன்றைய யதார்த்தமாகும்.
அரசாங்கம் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடப்பதாகத் தெரியவில்லை. நாட்டில் எந்தவித நெருக்கடிகளும் இல்லை என்று காட்டிக் கொள்ளவே அரசாங்கம் முற்படுகிறது. அதற்காகவே வழக்கமான ஆடம்பரங்களுடன் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் இவ்வருட சுதந்திர தினமானது, நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்கின்ற, அதற்கான முழு நாட்டையும் ஒன்றுபடச் செய்கின்றதான திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். நாட்டு மக்களை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்வதற்கான ஆரம்ப நாளாக 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு அமைந்திருக்க வேண்டும்.
நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் எந்தவித அச்சமுமின்றி, அன்றாடம் போதுமான வருமானத்துடன் மூன்று வேளையும் வயிராற சாப்பிட்டுக் கொண்டு வாழ்வதே உண்மையான சுதந்திரமாகும். எனினும் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னமும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். காணாமல் போன குடும்பங்களின் பெற்றோரின் கண்ணீர் துடைக்கப்படவில்லை. யுத்த காலத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் கைது செய்யப்பட்டு அநியாயமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கைதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. குறித்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வர்த்தமானி கூறுகின்ற போதிலும், அது வெறும் கண்துடைப்பு என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறு அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுதந்திரம் கிடைப்பது எப்போது?
நேற்றைய தினம் திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் அபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியை தாக்கப்பட்டு, தனது கடமையை முன்னெடுக்கவிடாது தடுக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, அனுமதிக்கப்பட்டுள்ள ஓர் ஆடையை அணிவதற்குக் கூட இந்த நாட்டின் பிரஜைக்கு சுதந்திரம் இல்லையெனில் ஆடம்பரமான சுதந்திர தினக் கொண்டாட்டங்களால் என்ன பயன்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அப்பாவி கிறிஸ்தவ மக்கள் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூறுபேர் படுகாயமடைந்து இன்றும் நடைப்பிணமாக வாழ்கின்றனர். இவர்களது குடும்பத்தினர் பாரிய கவலையில் காலத்தைக் கடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்காது அரசியல் நடாத்துகின்ற ஆட்சியாளர்கள், சுதந்திர சதுக்கத்தில் வீர வசனங்கள் பேசுவதால் மாத்திரம் நீதியான, சுதந்திரமான நாடாக இலங்கை மாறிவிடாது.
எனவேதான், வருடாந்தம் பெரும் பண, பொருட் செலவில் சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்துவதால் மாத்திரம் நாடு சுதந்திரமடைந்துள்ளதாக அர்த்தப்படாது. மாறாக இன, மத பேதமற்ற ஐக்கியமும் புரிந்துணர்வும் பொருளாதார சுபீட்சமும் கொண்ட நாடாக இலங்கை மாறும்போதே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமாகவிருக்கும். அதற்காக உழைப்பதே நம் அனைவர் முன்னுள்ள கடமையாகும். இந்த நோக்கத்திற்காக அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், சிவில் தலைவர்கள் என அனைவரும் ஒரே புள்ளியில் இணைய முன்வர வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரத்தை நோக்கிய பயணத்திற்கான ஆரம்பமாக அமையும். – Vidivelli