முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

0 568

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­னுக்கோ கட்­சிக்கோ இக்­கட்­டு­ரை­யாளர் ஆத­ர­வா­ள­ரல்ல என்­பதை ஆரம்­பத்­தி­லேயே கோடிட்டுக் காட்­டி­யபின் இதில் சமர்ப்பிக்­கப்­படும் கருத்­துகள் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தை­மட்டும் கரு­வா­கக்­கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­பதும் தவிர்ப்­பதும் வாச­கரின் உரிமை.

பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் நீண்­ட­கால நோக்­கத்தை தமி­ழினம் புரிந்­து­வைத்­துள்ள அள­வுக்கு முஸ்­லிம்கள் புரிந்­துள்­ளார்­களா என்­பது சந்­தேகம். பௌத்த சிங்­கள பேரி­ன­வா­திகள் என்று குறிப்­பி­டும்­போது அது சாதா­ரண சிங்­கள மக்­க­ளையோ பௌத்த மக்­க­ளையோ குறிப்­பி­ட­வில்லை. உல­கத்­திலே எங்­கே­யா­வது உளம்­தி­றந்த சிநே­கி­தத்­துடன் சகோ­தரர்போல் உற­வா­டு­வ­தற்கு சிங்­கள பௌத்தர்களைப்­போன்ற இன்னோர் இனம் உண்டா என்­பது சந்­தேகம். அந்த அப்­பாவி இனத்தின் மத்­தி­யி­லேதான் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறப்­புடன் வாழ்ந்­துள்­ளனர் என்­பதை நன்­றி­யுடன் இங்கே பதி­வு­செய்ய வேண்டும். ஆனால் அவர்களை மந்­தை­க­ளாகப் பாவித்து கட்­டுக்­க­தை­க­ளையும் புரா­ணக்­க­தை­க­ளையும் வர­லா­றென்று கூறிக்­கொண்டு இந்த நாட்டைத் தனிச்­சிங்­கள பௌத்த நாடாக மாற்றி சிறு­பான்மை இனங்­க­ளை­யெல்லாம் குற்­றேவல் புரியும் அடி­மை­க­ளாக்கும் நோக்கில் ஆட்­சி­செய்யத் துடிக்கும் கூட்­ட­மொன்­றையே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் என்று இங்கே அழைக்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பேரி­ன­வாதம் இன்­றைய ராஜ­பக்ச ஆட்­சியில் இம­யத்தைத் தொட்டு நிற்­கி­றது.

பேரி­ன­வா­தத்தின் நீண்­ட­கா­லத்­திட்டம் 1948ல் இந்­தியத் தமி­ழரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஆரம்­ப­மாகி படிப்­ப­டி­யாக வளர்ந்துள்­ளது. இந்தத் திட்­டத்தின் பேரா­பத்தை முதன்­மு­தலில் உணர்ந்தவர்கள் தமிழ் தலைவர்களே. அதற்­கெ­தி­ரான அவர்களின் போராட்டம் சமஷ்டி அர­சியல், தமிழ் மொழி, தமி­ழீழம், என்­ற­வாறு பல வடி­வங்­களைப் பெற்று அவற்றால் எண்­ணற்ற உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து இன்னும் தொடர்கிறது. இவர்களு­டைய போராட்­டத்தின் தத்­து­வத்­தை விளங்­கு­கின்ற திறமை முஸ்லிம் தலைவர்களி­டையே இன்­னுந்தான் வள­ர­வில்லை என்­பதை வருத்­தத்­துடன் இங்கே குறிப்­பிட விரும்­பு­கிறேன். அர­சி­ய­லையே ஒரு வியா­பா­ர­மாகக் கருதிச் செயற்­பட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு இனப்­பற்று, மொழிப்­பற்று, தேசப்­பற்று என்­ப­வையும் வெறும் கடைச்­ச­ரக்­காகத் தோன்­றி­யதில் வியப்­பில்லை.

இவ்­வாறு கூறு­வ­தன்­மூலம் தமிழ் தலைவர்கள் தவ­றி­ழைக்­க­வில்லை என்­பது கருத்­தல்ல. முஸ்லிம் தலைவர்கள் ஏன் தமி­ழரின் போராட்­டங்­களிற் கலந்­து­கொள்­ளாது வேடிக்கை பார்க்­கின்­றனர் என்­பதை புரிந்­து­கொண்டு முஸ்லிம் மக்­க­ளுக்கு எவ்­வாறு உண்­மையை உணர்த்தி அவர்களையும் தமது பக்கம் இழுப்­ப­தற்­கான முயற்­சிகள் தமிழ் தலைவர்களால் இத­ய­சுத்­தி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மேடை­க­ளிலே தமிழ் பேசும் மக்­க­ளென்ற கூட்­டுக்குள் முஸ்­லிம்­களை அடக்­கிக்­கொண்டு மேடை­யை­விட்டு இறங்­கி­யபின் தமிழர்கள் என்று பேசிய தலை­மை­களால் எவ்­வாறு இரண்டு இனங்­க­ளையும் இணைக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில் அன்­றைய தமிழ் தலைவர் எஸ். ஜே. வி. செல்­வ­நா­யகம் அவர்கள் “முஸ்­லிம்­களை அவர்கள்பால் விட்­டு­வி­டுங்­கள்”, என்று சொன்­னமை என் ஞாப­கத்­துக்கு வரு­கின்­றது. இதைப்­பற்றி இங்கே விப­ரிக்க விரும்­ப­வில்லை. அது கட்­டு­ரையை வேறு திசைக்குத் திருப்­பி­விடும்.

எத்­த­னையோ இழப்­பு­களைச் சந்­தித்­த­பின்னர் இறு­தி­யாக இந்­தி­யாவின் அழுத்­தத்தால் 1987இல் நிறை­வேற்­றப்­பட்ட மாகா­ண­சபை நிர்­வா­கத்தை அமு­லாக்க வேண்டும் என்ற அடிப்­படையில் அப்­போது நிறை­வேற்­றப்­பட்ட 13ஆம் திருத்­தத்துக்கு உயிர்­கொ­டுக்கத் தமிழ் தலை­மைகள் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றன. அதை மோடி அரசும் வலி­யு­றுத்­து­கின்­றது. ஆனால் அந்தத் திருத்­தத்தை முற்­றாகக் குழி­தோண்டிப் புதைக்க ஜனா­தி­பதி தலை­மையில் பேரி­ன­வா­திகள் திட­சங்­கற்பம் பூண்­டுள்­ளனர். தமிழ் கூட்­ட­ணியின் தலை­மையில் இலங்கை முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வ­ருடன் சேர்ந்து மலை­யகத் தமி­ழரின் தலை­வ­ரையும் இணைத்து இத்­தி­ருத்தம் சம்­பந்­த­மாக ஓர் உடன்­பாட்­டுக்கு வந்து இந்­திய அர­சுக்கு ஓர் ஆவ­ணத்தைச் சமர்ப்பிக்க முடி­வெ­டுத்­தனர். இந்தத் திருத்­தத்தின் ஒரு முக்­கிய அம்சம் கிழக்­கையும் வடக்­கையும் இணைத்த ஒரு மாகாண சபையை உரு­வாக்­கு­தலே. இதற்­கெ­தி­ராக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர் போர்க்­கொடி தூக்­கி­யதால் தமது தலை­மைக்கு ஏற்­ப­டப்­போகும் ஆபத்தை உணர்ந்த முஸ்லிம் தலைவர் தயக்­க­முறத் தொடங்­கினார். இப்­போது வெளியில் இருந்­து­கொண்டு ஆத­ரவு வழங்­கு­வ­தாக ஒரு செய்தி கூறு­கி­றது. இது ஒரு பம்­மாத்து. எனினும் அவர் இணங்­கி­னாலும் இணங்­கா­விட்­டாலும் தமிழ் தலைவர்கள் தமது முடிவை மாற்­று­வ­தாக இல்லை. இந்தச் சூழலில் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையா தனித்­த­னியே இரு மாகாண சபை­களா என்ற சர்ச்சை மீண்டும் முஸ்­லிம்­க­ளி­டையே தலை­தூக்கி உள்­ளது. இதற்­கு­ரிய விடையை பேரி­ன­வா­தத்தின் எதிர்­காலச் சுனா­மி­யையும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் வியா­பார அர­சி­ய­லையும் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தையும் தொடர்புறுத்­தாமல் விளங்­கு­வது கடினம்.

பேரி­ன­வாத்தின் ஒரே இலட்­சியம் கிழக்­கையும் வடக்­கையும் ஏனைய மாகா­ணங்­க­ளைப்­போன்று சிங்­களப் பெரும்­பான்­மை­யாக்­கு­வதே. பேரி­ன­வா­தி­களைப் பொறுத்­த­வரை கிழக்­கையும் வடக்­கையும் சிங்­கள மாகா­ணங்­க­ளாக மாற்­றாமல் இலங்­கையை ஒரு பௌத்த நாடு என்று கூறு­வதில் அர்த்­த­மில்லை. வவு­னியா, திரு­கோ­ண­மலை, கந்­தளாய், அம்­பாறை ஆகி­ய­ப­கு­திகள் அவ்­வாறு மாற்­றப்­பட்­டு­விட்­டன அல்­லது விரை­வாக மாறிக்­கொண்டு வரு­கின்­றன. இப்­பொ­ழுது முல்­லைத்­தீவு மாவட்­டமும் அவர்களின் குறியில் விழுந்­துள்­ளது. இரா­ணு­வத்தின் பாது­காப்­பு­டனும் கடும்­போக்கு பிக்­கு­களின் ஆசீர்­வா­தத்­து­டனும் சிங்­கள அத்­து­மீ­றல்கள் துரி­த­மாக நிறை­வே­று­கின்­றன. ராஜ­பக்ச அரசு இதற்குப் பூரண ஆத­ரவு. இதனை முஸ்­லிம்கள் முதலில் விளங்க வேண்டும்.

எனவே வரை­ய­றுக்­கப்­பட்ட சட்­ட­திட்­டங்­க­ளு­டனும் இன விகி­தா­சார அடிப்­ப­டையில் வளங்­களின் பங்­கீட்டு அதி­கா­ரத்­து­டனும் உரு­வாக்­கப்­படும் கிழக்கும் வடக்கும் இணைந்த ஒரு மாகாண சபை இவ்­வா­றான அத்­து­மீ­றல்­க­ளையும் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த முடியும். இத­னா­லேதான் 13ஆம் திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு அரசு முயல்­கின்­றது. இதற்கு ஒரு வழி தமிழர்களையும் முஸ்­லிம்­க­ளையும் பிரித்து வைப்­பதே. அந்தச் சதிக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ராக உள்­ளது வியா­பார அர­சியல் நடத்தும் ஒரு முஸ்லிம் தலை­மைத்­துவம். அந்தத் தலை­மையைக் கொண்டே முஸ்­லிம்­களின் எதிர்­கால வளர்ச்சியை சித­ற­டிக்க பேரி­ன­வாதம் திட்­ட­மி­டு­கின்­றதை முஸ்­லிம்கள் உணர்வார்­கள?

தமிழர்களுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே வளர்ந்துள்ள அர­சியல் ரீதி­யான வேற்­று­மைக்கு சுமார் ஒன்­றரை நூற்­றாண்டு வய­துண்டு. அத­னையும் இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை. ஆனால் 1980கள் தொடக்கம் விடு­தலைப் புலி­களும் மற்­றைய தமிழ் போராட்டக் குழுக்­களும் இந்­திய அமை­திப்­ப­டையும் இலங்கை இரா­ணு­வமும் நடத்­திய திரு­வி­ளை­யா­டல்­களால் தமிழ் முஸ்லிம் பிளவு மிகவும் விரி­வ­டை­ய­லா­யிற்று. காத்­தான்­குடி, ஏறாவூர் படு­கொ­லைகள், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம் ஆகி­ய­ன­வெல்லாம் முஸ்­லிம்­களால் மறக்­க­மு­டி­யாத துயர்கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அதே­போன்று பழிக்­குப்­பழி வாங்கும் எண்­ணத்தில் முஸ்­லிம்கள் சில தமிழ் கிரா­மங்­களில் அரங்­கேற்­றிய கொலை­க­ளையும் வன்­செ­யல்­க­ளையும் தமிழ் மக்­களால் மறக்க முடி­யுமா? ஆனால் இந்தத் துயர்களையே கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு வரப்­போகும் ஒரு சுனா­மிக்கு இரு இனங்­களும் பலி­யா­வதா என்­பதே இன்­றைய கேள்வி. முன்னர் ஏற்­பட்ட காயங்­களை மீண்டும் மீண்டும் கிள­றிக்­கொண்­டி­ருந்தால் புண்கள் புரை­யோடி உயி­ரையே பறித்து விடும். இதனை கிழக்­கு­மா­காணத் தமி­ழரும் முஸ்­லிம்­களும் உண­ர­வேண்டும்.

கிழக்­கி­லங்­கையில் அதிலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அர­சாங்­கத்தின் ஆத­ரவில் சிங்­க­ள­மக்கள் விரை­வாகக் குடி­யே­று­வதன் நீண்­ட­கால விளைவை முதன்­மு­த­லாக உணர்ந்த ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி அன்­றைய எம். எஸ். காரி­யப்பர் என்ற உண்மை இன்­றைய முஸ்லிம் தலை­மை­க­ளுக்குத் தெரி­யுமோ தெரி­யாது. அர­சாங்­கத்தின் கல்­லோயா குடி­யேற்றத் திட்­டத்தை முழு­மை­யாக ஆத­ரித்த அவர் அதே­வேளை முஸ்­லிம்­க­ளையும் அங்கு குடி­யேற்­று­வ­தற்கு அரும்­பா­டு­பட்டார். ஆனால் எந்­த­வொரு முஸ்­லிமும் அங்­குபோய் குடி­யே­று­வ­தற்கு அன்று முன்­வ­ர­வில்லை. அதன் விளை­வாக அம்­பாறை தொகு­தியே தனிச் சிங்­களத் தொகு­தி­யாக இப்­போது மாறி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் இன்னும் பல அம்­பா­றை­களை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் வடக்­கிலும் உரு­வாக்க பேரி­ன­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ளனர். இதனை முஸ்­லிம்கள் அவர்களின் வியா­பார அர­சியல் தலைவர்களை வைத்­துக்­கொண்டு தடுக்க முடி­யுமா? கிழக்­கி­லங்கை முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு நில­மில்லை என்று கூச்­சல்­போ­டு­கின்ற இந்த அர­சியல் தலை­மைகள் தனித்து நின்று போராடி ஒரு ஏக்கர் நிலத்­தை­யேனும் அவர்களுக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பெற்றுக் கொடுக்க முடி­யுமா? இது­வரை எதைத்தான் இவர்கள் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்?

ஒன்­று­மட்டும் உண்மை. இப்­போது இருப்­ப­தை­யா­வது முஸ்­லிம்கள் காப்­பாற்ற வேண்­டு­மென்றால் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபை­யி­னா­லேதான் அது முடியும். கிழக்­கு­மட்டும் ஒரு மாகாண சபை­யாக வரு­மானால் இருப்­ப­தையும் இழக்­க­வேண்டி நேரிடும். அவ்­வா­றான ஒரு மாகாண சபையில் பேரி­ன­வா­திகள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை விலைக்­கு­வாங்கி தமி­ழரின் வளங்­களை பறிப்பர். அதே­போன்று தமிழ் எட்­டப்பர்களை விலைக்­கு­வாங்கி முஸ்­லிம்­களின் வளங்­களை குறைப்பர். அது ஈற்றில் குரங்கு அப்பம் பிரித்த கதை­யாக முடியும். முஸ்­லிம்­களின் இப்­போ­துள்ள மனோ­நிலை தமிழ் போராட்டக் குழுக்­கள்­ மீது ஏற்­பட்ட வெறுப்­பினால் தனக்கு மூக்குப் போனாலும் எதி­ரிக்குச் சகு­னப்­பிழை என்ற நிலையில் செயற்­ப­டு­வ­தாக உணர முடி­கி­றது. இதன் நீண்­ட­கால விளை­வுகள் பார­தூ­ர­மா­ன­வை­யாக அமையும் என்­பதை இக்­கட்­டுரை எச்­ச­ரிக்க விரும்­பு­கி­றது. கிழக்­கிலே முஸ்­லிம்கள் இப்­போது வழு­கின்ற பிர­தே­சங்­களை ஆகா­ய­வெ­ளியில் நின்று படம்­பி­டித்தால் அவை ஒரு ஒடுங்­கிய ஒழுங்­கை­யா­கவே தெரியும்.

கடற்­க­ரை­யி­லி­ருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்­துக்­குள்­ளேதான் முஸ்­லிம்­களின் சிறு பட்­டி­னங்கள் அமைந்­துள்­ளன. தனி­யான கிழக்கு மாகாணசபையில் இவை விரிவடைவது எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படியாயின் இன்னும் இருபது வருடங்களில் காத்தான்குடி, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பட்டினங்கள் பெரும் சேரிகளாகவே பரிணமிக்கும். அவைகளுக்கு மத்தியிலோ அருகாமையிலோ விகாரைகளும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றுபட்ட கிழக்கும் வடக்கும் இணந்த ஒரு மாகாணசபையில் இந்த ஆபத்து குறைவு. அதற்கேற்றவாறான உடன்பாடுகளுடன் முஸ்லிம்கள் தமிழருடன் இணைய வேண்டும்.

தமிழினத்தின் போராட்டத்தின் தத்துவங்களை முஸ்லிம்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. அதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்களே. ஆனால் ஒன்று. இந்தக் கவலைகள் எதுவும் எழமாட்டா ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாப் பிரஜைகளையும் இலங்கை என்ற ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாக நினைத்து ஜனநாயக அடிப்படையில் அனைவரையும் சமமாக நடத்துமாக இருந்தால். அப்படியான எண்ணங்களுடன் சிங்கள மக்களிடையே தலைவர்கள் இன்று உருவாகியுள்ளனர். அவர்களின் கைகளையாவது பலப்படுத்த முஸ்லிம்கள் தயங்குவதேன்? அதைப்பற்றி இன்னுமொரு கட்டுரையில் விரைவில் அலசுவோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.