கீத் நொயார் விவகாரம்: விசாரணைகள் நிறைவடைந்ததாக சி.ஐ.டி. நீதிமன்றத்துக்கு அறிவிப்பு

0 613

‘த நேஷன்’ பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்ட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சி.ஐ.டி. நிறைவு செய்துள்ளதாக நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் கான்ஸ்டபிள் சில்வா மேலதிக அறிக்கை ஊடாக இதனை நீதிவானுக்கு அறிவித்தார்.

நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைதாகி  பிணையிலுள்ள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்தவை தவிர ஏனைய சந்தேக நபர்களான  எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார, சி. ஜயசூரிய, இராணுவ புலனாய்வுப்  பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகர ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த சி.ஐ.டி. விசாரணைக் குழு அதிகாரி சில்வா,  இதுகுறித்த விசாரணைகளை நிறைவுசெய்து சட்டமா அதிபருக்கு சீ.ஆர்./ 85/2018 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணைக் கோவையை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விசாரணைகள் 10 வருடங்களின் பின்னர் நிறைவடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியதுடன், சந்தேக நபர்கள் நீதிமன்ற அறிவித்தல் கிடைத்தால் மட்டும் மன்றுக்குவர உத்தரவிட வேண்டுமெனக் கோரினர்.

எனினும், இதன்போது கருத்து தெரிவித்த சி.ஐ.டி. அதிகாரி, சட்டமா அதிபர் ஆலோசனை கொடுத்ததும் அவர் மேலதிக விசாரணைகள் தொடர்பில் குறிப்பிட்டால் அது தொடர்பில் அவதானம் செலுத்தபப்டும் எனவும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என சுட்டிக்கடடினார்.

இந்நிலையில் சந்தேக நபர்களின் கோரிக்கை தொடர்பில் அடுத்த தவணையின்போது ஆராய்வதாகக் கூறிய நீதிவான், வழக்கை எதிர்வரும் 2019 ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.