விடுதலையானார் அஹ்னாப்!
‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளம் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியாழக்கிழமை மாலை சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டார்.
இவரை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது. எனினும் சில சட்ட நடைமுறைகள் காரணமாக 24 மணி நேரத்துக்கும் அதிகமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில், அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்ய வில்சன் ஜயசேகர, சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கத்துடன் ஆஜராகி முன் வைத்த விடயங்களை மையப்படுத்தி, அவரை உடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு தொலை நகல் ஊடாக கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே, கடந்த வியாழன் மாலை 4.15 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியேறி தனது குடும்பத்தினருடன் இணைந்தார். அதனூடாக இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமின் 579 நாள் சிறை வாழ்வு நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணை உத்தரவை வழங்கினார். இதனையடுத்து சிறைச்சாலை நடைமுறைகளை முடித்துக் கொண்ட பின்னர் மாலை 4.30 மணியளவில் சட்டத்தரணிகளான சஞ்சய மற்றும் சுவஸ்திகா ஆகியோர் தமது காரில் அஹ்னாபை அழைத்து வந்து அவரது குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
அஹ்னாபின் தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அவரை அழைத்துச் செல்வதற்காக கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். அதற்கு முன்தினம் புத்தளத்தில் வைத்து அஹ்னாப் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் அன்றை தினமே அவரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் தயாராக வந்திருந்தனர். எனினும் அன்று சட்டச்சிக்கல்கள் காரணமாக அவர் விடுவிக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து மறுநாள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட சமயம், புத்தளத்திலிருந்து அங்கு வருகை தந்த குடும்பத்தினர் தமது மகனின் விடுதலைச் செய்தியை அறிந்து கொள்வதற்காகவும் அவரை அழைத்துச் செல்வதற்காகவும் ஏக்கத்துடன் காத்திருந்தனர். இந் நிலையிலேயே அவர் அன்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
579 நாட்களின் பின்னர் மகனை சந்திக்கக் கிடைத்தமை குறித்து பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டனர். தமது மகனின் விடுதலைக்காக ஒரு ரூபாய் கூட கட்டணம் அறவிடாது கடந்த ஒன்றரை வருடங்களாக போராடிய சட்டத்தரணிகளை கட்டியணைத்து அஹ்னாபின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். “ நீங்கள் எனது மகனை மீட்டுத் தர ஒரு ரூபாவைக் கூட கேட்கவில்லை. இதற்கு நாங்கள் எப்படி கைம்மாறு செய்வது. எங்களிடம் உங்களுக்குத் தருவதற்கு அன்பையும் பிரார்த்தனையையும் தவிர வேறொன்றும் இல்லை” என அங்கு நின்றிருந்த சட்டத்தரணிகளிடம் அஹ்னாபின் தாயார் உணர்ச்சி ததும்ப கூறினார்.
கடந்த 2020 மே16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அஹ்னாப் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம், ஒவ்வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் மு.ப. 9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையே, புத்தளம் -பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்த நீதிமன்றம், அஹ்னாபுக்கு கடவுச் சீட்டு ஒன்று இதுவரை இல்லை என்ற விடயம் மன்றுக்கு முன் வைக்கப்பட்டதையடுத்து, அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மையப்படுத்தி அவருக்கு கடவுச் சீட்டு விநியோகிப்பதை தடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது அத்துடன் கடவுச் சீட்டு இல்லை என்பதை அடுத்த வழக்குத் தவணையின் போது சத்தியக் கடதாசி மூலம் மன்றுக்கு அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.- Vidivelli