(ஏ..ஆர்.ஏ.பரீல்)
இலங்கை பொற்றோலிய களஞ்சிய டர்மினல் லிமிடட் (CPSTL) நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான உவைஸ் மொஹமட் தனது பதவியினை கடந்த 21ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். உவைஸ் மொஹமட் தனது பதவியினை இராஜினாமா செய்து கொள்ளும்படி எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவினால் கடந்த 20 ஆம் திகதி கோரப்பட்டிருந்தார். இந்தப் பதவிக்கு அமைச்சரின் சிபாரிசின் கீழ் ஒருவர் நியமிக்கப்படுவதற்காகவே உவைஸ் மொஹமட் இராஜினாமா செய்யும்படி அமைச்சரினால் கோரப்பட்டிருந்தது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தான் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதிக்கு கையளித்துள்ள இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எனது பதவிக்கு அமைச்சர் உதய கம்மன்பில தான் தெரிவு செய்யும் ஒருவரை நியமிக்கவுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது ஜன பெரமுன கட்சி என்போர் நான் எனது கடமையினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு ஒத்துழைத்தமைக்காக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நிறுவனத்தின்அபிவிருத்திக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய ஊழியர்கள் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, அமைச்சின் பணிப்பாளர்கள், அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் எனது பதவிக் காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli