இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதத்தின் நகல் வரைபு மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது
ஒப்பமிடவில்லை என மு.கா., அ.இ.ம.கா. தெரிவிப்பு
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதத்தின் வரைபே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அதில் இன்னும் ஒப்பமிடவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய கடிதத்தின் நகல் மாத்திரமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது இறுதி செய்யப்படுவதற்கு முஸ்லிம் கட்சிகளும் தமது ஆலோசனைகளை முன்வைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் காங்கிரஸ்
இது தொடர்பில் அ.இம.கா.வின் தலைவர் ரிஷாட் பதியுதீன் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மை கட்சிகளுக்கிடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே நாம் முதன் முதலாக கலந்துகொண்டிருந்தோம். பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதத்தின் நகல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நகலை முன்வைத்து இன்றைய தினம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எமது கட்சியின் ஆலோசனைகளை முன்வைப்போம். இங்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதன் மூலம் இரு சமூகத்தின் நலன்களை பேனும் விதமாகவும் நாட்டில் பலமானதொரு தரப்பாகவும் மாற முடியும். எமக்கிடையில் பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன. அது விடயமாக இணங்கி செயற்பட முடியும். கடந்த கால அனுபங்கள் அடிப்படையில் எமக்கான தனிப்பட்ட பிரச்சினைகளும் உள்ளன. அவற்றையும் நாம் முன்வைப்போம் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ்
இதேவேளை, அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்த புதிய வரைபை தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து வரைந்துள்ளதுடன், குறித்த கடிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இறுதி செய்யப்பட்ட பின்னரே குறித்த கடிதத்தில் ஒப்பமிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டில், இறுதி வடிவமான தமிழ் பேசும் கட்சிகள் சார்பான ஆவண நகல் தயாரிக்கப்பட்டு தற்போது கட்சி தலைவர்களின், இறுதி உடன்பாட்டுக்காக அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்பாட்டின் இந்த கட்டத்தின் உண்மை நிலை என்பதை கூற விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்” என இருந்த நிலையில், தற்போது “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்” என மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செயலாளர் நிஸாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீல் அலி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், உதயகுமார், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.-Vidivelli