உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று ஆராய்வு
பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியது. ராதிகா குமாரசுவாமி, நிமல்கா பெர்ணான்டோ, சகுந்தலா கதிர்காமர், சுளானி கொடிக்கார, ரேஹப் மமூர், யாமினி ரவீந்திரன், தியாகி ருவன்பத்திரண, குமுதினி சாமுவேல், ஷ்ரீன் சறூர், அம்பிகா சற்குணநாதன் மற்றும் முகத்தஸா வாஹித் ஆகியோரே இந்த விஜயத்தில் பங்குபற்றியவர்களாவர். இது தொடர்பில் இத் தூதுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இதன் கீழ் கையொப்பமிடும் நாம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு துயருறும் வேறுபட்ட சமூகங்களின் தற்கால நிலையினை உறுதி செய்யும் நோக்கில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டக்களப்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் என்பனவற்றின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஏற்படுத்திய தீய தாக்கங்கள் எவராலும் மறுக்கப்பட முடியாதனவாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வரும் இக்காலப்பகுதியில் அவர்களை சந்திப்பதும் அவர்களின் அனுபவங்கள் பற்றி விசாரிப்பதும் அவர்களை மீள அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதனை நாம் உறுதியாக மனதில் நிலைநிறுத்தியிருந்தோம்.
குறிப்பாக, பல எண்ணிக்கையான குழுக்கள் மற்றும் தனி நபர்கள் அவர்களைச் சந்தித்து அது பற்றி உரையாடியுள்ள நிலையில் இவ்விடயம் விசேடமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். எனவே, நாம் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடனும் பணிகளில் ஈடுபடும் நபர்களுடனும்ன் நாம் உரையாடல்களை மேற்கொண்டோம். இந்த கலந்துரையாடல்களின் போது கிறிஸ்தவ சமூகம் தமது மத நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் உரிமையை சுதந்திரமாக மற்றும் பயமின்றி பிரயோகிப்பதில் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்வதை எம்மால் அறிய முடிந்தது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அரசு மேற்கொள்ளும் தலையீடுகள், அத்துடன் இந்து சமுதாயம் மற்றும் கத்தோலிக்க திருச்சபை என்பன ஏற்படுத்தும் பாகுபாடுகளே இந்நிலைக்கு காரணங்களாக அமைகின்றன. ஹிந்துத்துவா போன்ற கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் குழுக்களின் பிரசன்னம் மற்றும் அவை இந்தியாவின் சிவசேனை அமைப்புடன் கொண்டுள்ள இணைப்புகள் கிறிஸ்தவ சமூகத்தை இலக்கு வைப்பதாக அறிய முடிகின்றது.
கிறிஸ்தவ சமூகத்துக்கு ஏற்படுத்தப்படும் பாகுபாடுகள், ஓரங்கட்டல் மற்றும் தொந்தரவுகளில் மத வழிபாட்டுத்தலங்களை ஸ்தாபிப்பதற்கு அனுமதி மறுக்கப்படல், பொது மயானங்களை பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படல், அவர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படல், தொழுகை ஆராதனைகளுக்கு வன்முறை பிரயோகம் உள்ளடங்களாக இடையூறு ஏற்படுத்தப்படல் மற்றும் அருட்தந்தைகளுக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்படல் என்பனவும் உள்ளடங்குகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படும் வேளை அவர்களின் செயற்படா நிலை காரணமாக முறைப்பாடுகளால் எந்த வித பிரயோசனமும் விளைவதில்லை என எமக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலனாய்வு முகவர் அமைப்புகள் தேவாலயங்களுக்கு வருகை தந்து ஆராதனைகளில் பங்குபற்றுவோர் விபரங்களை கோருவதாக தெரிய வருகின்றது, இதற்குரிய காரணம் ஆராதனைகளில் பங்கேற்காதவர்கள் தேவாலயங்களுக்கு வருகை தராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இது பற்றி கருத்துக்களை வெளியிட்ட அருட்தந்தைகள் அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றும் மக்களையும் வரவேற்கும் உள்வாங்கும் கொள்கைளை தாம் பின்பற்றும் வேளை இவ்வாறான நடவடிக்கைகள் அவ்வாறு வர விரும்பும் நபர்களுக்கு அச்சுறுத்துலாக அமையும் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனைவிகள் மற்றும் தாயார்களை எம்மால் சந்திக்க முடிந்தது. கைது செய்யப்பட்ட நபர்கள் பொதுவாக வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக காணப்படுவதால் இளம் பிள்ளைகளுடன் காணப்படும் அவர்களின் மனைவிகள் தீவிர சமூக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அது அவர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சேதம் விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல கைதுகள் வரலாற்று ரீதியாக இடம்பெற்று வரும் எதேச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தலை மீள உறுதி செய்கின்றன. உதாரணமாக, பல நபர்கள் விசாரணைக்கு முன்னர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக்காவல் ஆணைகள் மூலம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு எதிரான சான்றுகள் எவையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் விடுதலையாகும் வேளை அவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்படல், நற்பெயருக்கு தீங்கு ஏற்படல் என்பன ஏற்கனவே அவர்களுக்கு நடந்து முடிந்த விடயங்களாக அமைவதுடன் அவர்கள் தீவிர உளவியல் அதிர்ச்சிக்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல கைதுகள் சட்டத்தினால் குற்றம் என குறிப்பிடப்படும் குற்றங்களுக்காக அல்லாமல் அனுமானிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றங்களை இழைக்காத, அவற்றுக்கு உதவாத அல்லது ஒத்தாசை புரியாத நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. உதாரணமாக, ஸஹ்ரானினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பலவந்தப்படுத்தப்பட்டு அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கலந்து கொண்ட பையன்கள் மற்றும் இளம் ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பலர் இன்றுவரை பரீட்சைகளை எழுத முடியாதவர்களாகவும் தடுப்புக்காவலில் அல்லலுறும் நிலையிலும் உள்ளனர். தடுப்புக்கு காவலுக்கு விதந்துரைக்கப்பட்ட காலப்பகுதியான 18 மாதங்களுக்கும் அதிகமாக தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் பற்றிய கரிசனைகளும் இங்கு காணப்படுகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு குறித்த நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறிப்பிடப்படவில்லை கைது செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள் கைது இடம்பெற்று பல நாட்கள் கழிந்த பின்னரே வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் இன்னொரு தடுப்புக்காவல் இடமொன்றுக்கு எப்போது மாற்றப்பட்டார் என்ற தகவல்களும் அவ் ஆவணங்களில் உள்ளடக்கப்படவில்லை. இன்று வரை கைதுகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களால் விலக்கப்படுகின்றன, தப்பிப் பிழைப்பதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தை இன்னும் கடினமாக்குகின்றது. அவ்வாறான குடும்பங்களுக்கு புலனாய்வு முகவர் அமைப்புகள் வருகை தரல் மற்றும் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்படல் என்பன இக்குடும்பங்களை சமூகத்தில் இருந்து இன்னும் தூரமாக்குகின்றன, அது அக்குடும்பங்கள் இன்னும் சந்தேகத்துடன் நோக்கப்படுவதற்கு ஏதுவாகின்றது. அதே நேரத்தில், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு உதவும் நபர்களும் பாதுகாப்பு முகவர் அமைப்புகளால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனர், இது அக்குடும்பங்களுக்கு மற்றவர்கள் உதவுவதையும் தடுக்கின்றது. இவ்வாறான பெரும்பாலான குடும்பங்களின் ஒரேயொரு நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பல தாக்கங்களை சமாளிக்கத் திணறும் குடும்பங்களுக்கு உதவிகள் தடுக்கப்படுவது இக்குடும்பங்கள் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றது. இந்தக் குடும்பங்களிடம் சட்ட விழிப்புணர்வு இல்லை அத்துடன் சட்ட பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள எந்த வித வழியுமில்லை, எனவே இக்குடும்பங்கள் ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சுரண்டல்களால் பாதிப்புறும் நிலை காணப்படுகின்றன.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்த பின்னர் சமூகங்களுக்கு இடையான மற்றும் சமூகங்களினுள் காணப்படும் பதற்றங்கள் முறையாகக் கையாளப்படாததால் அவை நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அவை மீண்டும் வெளிப்பட்டுள்ளதுடன் அது ஏற்கனவே காணப்படும் பிளவுகளை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகின்றது. தற்பொழுது புதிய குழுக்கள் தோற்றம் பெற்றுள்ளதுடன் அவை பாகுபாடு, ஓரங்கட்டல் என்பவற்றுக்கான புதிய இலக்குகளை கண்டறிந்துள்ளதுடன் அதன் மூலமாக பாதிப்புறும் ஏதுநிலையில் உள்ள சனத்தொகைகளுக்கு பாதுகாப்பின்மை மற்றும் முரண்பாடு என்பவற்றுக்கான புதிய மையங்களை உருவாக்குகின்றன.
ஒரு சமூகத்தலைவர் இரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிட்டார் “எங்கெல்லாம் பெரும்பான்மை காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சிறுபான்மைகள் ஒடுக்கப்படுகின்றன. இப்பிளவுகளை அகற்ற சமூக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கம் அவற்றுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக தனது செயற்பாடுகள் அல்லது செயற்படா நிலை மூலம் அவற்றுக்கு குந்தகம் விளைவிப்பதையே முன்னெடுக்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய பாதுகாப்பை அனைவருக்குமான பாதுகாப்பு என நோக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்து அச்சுறுத்தாத பாதுகாப்பு வடிவம் ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறன்றி, குறிப்பிட்ட சமூகங்களை மாத்திரம் இலக்கு வைப்பது ஏற்கனவே பாதிப்புறும் சனத்தொகைகள் மேலும் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படலுக்கு உட்படுத்தப்பட வழி வகுப்பதன் மூலம் சமூக பிணைவு மற்றும் ஒற்றுமைக்கு சேதம் ஏற்படுத்தும்.
இந்த விஜயம் பற்றிய விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.- Vidivelli