கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
பாகிஸ்தானின் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமாரவை அத்தொழிற்சாலையில் வேலைசெய்த முஸ்லிம் தீவிரவாதக் கும்பலொன்று காட்டுமிராண்டித்தனமாய் அடித்துத் தீயிட்டுக் கொழுத்திக் கொலை செய்ததை மனிதாபிமானமுள்ள எந்த ஒரு ஜீவனும் மன்னிக்க முடியாது. மன்னிக்கவும் கூடாது. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அக்கும்பலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதி கூறி இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். பிரியந்தவை இழந்த அவரின் மனைவி பிள்ளைகளுக்கும் அவரது உறவினருக்கும் அத்துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் அருளவேண்டும் என நாம் எல்லாரும் பிரார்த்திப்போமாக.
காட்டுமிராண்டிச் செயல்களும் காட்டுமிராண்டித்தனமான மக்களும் பாகிஸ்தானுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. அப்படிப்பட்ட செயல்களையும் அதனைச் செய்பவர்களையும் எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் காணலாம். உதாரணமாக, இலங்கையிலேற்பட்ட இனக்கலவரங்களையும் அக்கலவரங்களில் எத்தனை அப்பாவி மக்கள் எவ்வாறான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுச் செத்து மடிந்தார்கள் என்பதையும் வரலாறு மறக்கவில்லை. கொட்டாரமுல்லையில் இரு வருடங்களுக்குமுன் ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவரை எப்படி சிங்கள பௌத்த வெறியினர் அடித்துக் கொன்றார்கள் என்பதை எப்படி மறக்கலாம்? அதற்காக ஒன்றுக்கொன்று சமன் என்ற அடிப்படையில் பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவத்தை நாம் மன்னித்து மறந்துவிட முடியாது. அதிலும் அக்கொலை சம்பந்தமாக முஸ்லிம்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை விளக்க விரும்புகிறது. வழமைபோன்று இவ்விளக்கம் பலருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
முதலாவதாக அந்தக் கொலை நடைபெறக் காரணமென்ன? இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி பிரியந்த அந்தத் தொழிற்சாலையின் ஓர் உயர் அதிகாரி. வெளிநாட்டுக் குழுவொன்று அத்தொழிற்சாலைக்கு சமுகமளிப்பதாக இருந்ததால் அக்குழு வருவதற்குமுன்னர் அத்தொழிற்சாலை இயந்திரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒட்டிகளை அகற்றுமாறு அந்த அதிகாரி கட்டளையிட்டுள்ளார். அந்த ஒட்டிகளில் என்ன அச்சிடப்பட்டிருந்தனவோ? அதன் வார்த்தைகள் பெரும்பாலும் உருது அல்லது அரபி மொழியிலேயே அச்சிடப்பட்டிருக்கலாம். அது இலங்கையரான பிரியந்தவுக்கு விளங்கி இருக்காது. மேலும் அந்த வார்த்தைகள் அல்லது வசனங்கள் திருக்குர் ஆனின் வசனங்களாகவோ நபிபெருமானாரின் போதனைகளாகவோ இருந்திருக்கலாம். அப்படியானால் முஸ்லிம் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அவை பரிசுத்தமானவை. அவற்றை நீக்குதலோ அழித்தலோ அவமானப்படுத்தலோ தெய்வநிந்தனைக் குற்றமாகும். ஆதலால் அவர்களின் பார்வையில் அப்பரிசுத்த ஒட்டிகளை நீக்குமாறு கட்டளையிட்ட முஸ்லிமல்லாத உயர் அதிகாரி தெய்வநிந்தனைக் குற்றவாளி. தெய்வ நிந்தனைக் குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானின் சட்டம் சிறை அல்லது மரண தண்டனை. எனவே இந்த மதஅறிவிலிகள் அவர்மீது தெய்வநிந்தனையாளன் எனக் குற்றஞ்சுமத்தி அவர்களே குற்றவாளியெனக் கண்டு தண்டனையும் கொடுத்து அல்லாஹ்வின் நீதிபதிகளாகி தூக்கிலிடும் சேவகர்களுமானார்கள். ஏற்கனவே அந்த அதிகாரியின் கட்டுப்பாடுகளை விரும்பாத சில தொழிலாளிகளுக்கு ஒட்டிகளை அகற்றும் கட்டளை வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததுபோல் இருந்து இந்தக் கொலையை நடத்தத் தூண்டியிருக்கலாம். ஆனாலும் இத்தனைக்கெல்லாம் அடிப்படையாக இன்னுமொரு காரணம் உண்டு. அதனை ஆராய்வதே இக்கட்டுரை.
முதலாவதாக, அந்த ஒட்டிகள் ஏன் இயந்திரங்களில் ஒட்டப்பட்டன? இந்த வினாவுக்கு விடையளிக்க பல ஆண்டுகளுக்குமுன் நான் இலங்கையில் வாழ்ந்தபோது என் கண்முன்னே நடைபெற்ற ஒரு சம்பவத்தை வாசகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து ஒரு மௌலானா கண்டிக்கு அவரது சீடர்களைச் சந்திப்பதற்காக வந்திருந்தார். அவரைப்பார்க்க என் உறவினர்களுள் இருவர் என்னையும் பேராதனை வளாகத்திலிருந்து இழுத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பெரியாரைச் சந்திக்கவந்த வேறொருவர் (அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும்) மௌலானாவிடம் சென்று தனது உழவு யந்திரம் அடிக்கடி பழுதுபடுவதாகவும் அதனால் பலத்த நட்டம் ஏற்படுவதாகவும் முறையிட்டார். உடனே அந்தப் பெரியார் ஒரு துண்டுத் தாளில் எதையோ எழுதி (அரபு மொழியிலாக இருக்கலாம்) அச்சீடரிடம் கொடுத்து அதனை அந்த இயந்திரத்தில் ஒட்டுமாறு கூறினார். அதைப் பார்த்த என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. ஏதோ கிறுக்கப்பட்ட கடதாசித் துண்டொன்று எப்படி ஒரு இயந்திரக் கோளாறை நீக்கலாம்? ஆனால், அதனைப் பெற்றுக்கொண்டவர் மனதில் அந்தத் தாளும் அதிலுள்ள எழுத்துக்களும் தெய்வீகமாகிவிட்டன. அதனை யாரும் நிந்தித்ததால் அவர் மனம் பொறுக்குமா?
இதுதான் பாகிஸ்தானிலும் நடந்துள்ளது. ஒட்டிகளிலுள்ள திருவாக்கியங்கள் பாமர முஸ்லிம்கள் பார்வையில் தெய்வீகமாகிவிட்டதால் அதனை அகற்றச் சொன்னவரை தெய்வநிந்தனை செய்தவர் என முடிவுகட்டி அப்பாமரர்களே அதற்குரிய தண்டனையையும் வழங்கியுள்ளனர். இதுதான் முல்லாக்கள் வளர்த்துவிட்ட இஸ்லாம். இதைத்தான் அல்லாமா இக்பால் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஓயாது கண்டித்தார். இதற்கும் குர்ஆன் போதிக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இந்த விடயத்தைப்பற்றி சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னரே கவிஞர் அப்துல் காதர் லெப்பை நாம பூஜை என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு குறிப்பை அவருடைய பூரண வாழ்வு என்ற நூலில் நான் வெளியிட்டேன். அக்குறிப்பை வாசகர்முன் நிறுத்துவது பொருத்தமாய் இருக்கும்.
“சுவர்களில் எழுதுதல், தூண்களிற் செதுக்குதல், மரங்களில் வெட்டுதல், படங்களில் அமைத்தல், அலங்காரச் சித்திரங்களிற் தீட்டுதல், உலோகங்களில் வடித்தல், அணிகலன்களிற் பதித்தல், சீலைகளிற் சித்திரித்தல், பாத்திரங்களிற் பதித்தல் என்றவாறு விக்கிரகவணக்கக்காரர் கடவுளுருவங்களை என்னென்ன வகைகளில் வெளிப்படுத்தியுள்ளார்களோ அத்தனை வகைகளிலும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற நாமத்துக்குரிய எழுத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உருவச் சின்னத்துக்குப் பதில் எழுத்துச் சின்னம். அல்லாஹ்வைப்பற்றியோ, அவன் போதனைபற்றியோ, அவன் சேவைபற்றியோ எந்தவகையான அறிவுமற்று அவன் நாமத்தை மட்டும் எழுத்துருப்படுத்திப் பக்திகொள்ளும் நிலை எவ்விதம் வந்தது? இதே நிலைதான் அவன் வேதமாகிய குர்ஆனுக்கும் ஏற்பட்டுள்ளது. மந்திரமாகவும், அலங்காரச் சித்திரச் சின்னங்களாகவும் அதன் வசனங்கள் ஆக்கப்பட்டுள்ளன. நெஞ்சிலும் வாழ்க்கையிலும் இடம் பெறவேண்டிய அல்லாஹ்வும் குர்ஆனும் அலங்காரச் சின்னங்களாகவும் பக்திச் சின்னங்களாகவும் விக்கிரகம் இருந்த இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தப் போக்கு வளர்ந்து நபி, சஹாபாக்கள் நாமங்களையும் பிடித்துவிட்டன. (பாமரத்துவ நிலையில் இது அங்கீகரிக்கப்பட்டதென்பர் தத்துவ, உளநூல் விற்பன்னர்.)”
இது ஓர் ஆழமான விடயம். குர்ஆன் இஸ்லாம், இமாம்கள் இஸ்லாம், அவாம்கள் இஸ்லாம் என்று மூன்று வகையாக இஸ்லாத்தை வகைப்படுத்தி இரண்டாவதும் மூன்றாவதும் சேர்ந்து உருவாக்கியதே நாமபூஜை. ஒரு கட்டுரையில் இதன் முக்கியத்துவத்தை விளக்கிவிட முடியாது. இஸ்லாத்தை சமூகவியலின் தத்துவங்களைக் கொண்டு விளங்குபவர்களுக்கு இதன் நடைமுறையான தாக்கங்களை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். நாமபூஜையை வளர்த்துவிட்ட பாமர இஸ்லாத்துக்கு எதையும் தர்க்கித்து விளங்கக்கூடிய சக்தி இல்லை. அது உணர்ச்சியின் அடிப்படையில் இயங்குவது. இதைத்தான் குருட்டுப்பக்தி என்றும் கூறுவர். இந்தக் குருட்டுப் பக்தியைத்தான் உலமாக்களும் வளர்த்துள்ளனர். அந்தப் பக்தியுடைய மக்களுக்கு தெய்வீகமென அவர்கள் கருதும் சின்னங்களுக்கும் எழுத்துக்களுக்கும் அடையாளங்களுக்கும் அவமானம் ஏற்படுமானால் அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ‘எடடா வாளை கொடியோன் தலை அறவே’ என்றவாறு ஆத்திரப்பட்டு இயங்குவர். பாகிஸ்தானில் இலங்கையருக்கு நடந்தது இந்த நாம பூஜை நடத்திய நரபலியே.
இதில் இன்னுமொரு ஆபத்தும் உண்டு. குருட்டுப்பக்தியுள்ள மக்களிடையேதான் மதத்தீவிரவாதமும் பரவ இடமுண்டு. இவர்களை பகடைகளாக வைத்துத்தான் முஸ்லிம் நாடுகளில் பல தீவிரவாத இயக்கங்கள் உருவாகியுள்ளன. ஐ.எஸ், தலிபான், போக்கோ ஹராம் போன்ற எத்தனையோ இயக்கங்களின் காலாட் படை வீரர்களாக இவர்கள் செயற்படுகின்றனர். பாகிஸ்தானிலும் பல இஸ்லாமிய இயக்கங்கள் பாமரத்துவ முஸ்லிம்களை அங்கத்தவர்களாகக்கொண்டு இயங்குகின்றன. அவ்வியக்கங்களின் தலைவர்கள் சொல்வதே இவர்களுக்கு வேதவாக்கு. எதையும் தர்க்கித்து விளங்கும் சக்தி இவர்களுக்கில்லை. இவர்களுக்கு குர்ஆன் ஒரு மந்திர நூல். அது ஓதுவதற்கு மட்டுமேயன்றி விளங்குவதற்கல்ல. இந்த வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என்பதைப்பற்றி இதுவரை எந்த ஒரு முஸ்லிம் நாட்டிலும் எந்த ஒரு உருப்படியான முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அந்நாடுகளின் அரசியல்வாதிகளும் அப்படிப்பட்ட மக்களிடையே அரசியல் செல்வாக்குத் தேட விரும்புவதே. இது ஒரு துர்ப்பாக்கிய நிலைமை.
பிரதமர் இம்ரான் கான் பிரியந்தவின் கொலைக்குக் காரணமாய் இருந்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்குவதாக உறுதிகூறி பாகிஸ்தான் சார்பாக இலங்கை மக்களுக்கும் பிரியந்தவின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து மன்னிப்பும் கோரியுள்ளது வரவேற்க வேண்டிய செயற்பாடுகள். ஆனால் அதற்கப்பாலும் சென்று இஸ்லாம் என்ற பெயரில் நாமபூஜையை வளர்க்கும் அறிவின்மையை ஒழிக்க அவரால் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி. இந்த இஸ்லாத்துக்காகவா ஜின்னாவும் இக்பாலும் பாகிஸ்தானை உருவாக்கினார்கள?- Vidivelli