ஆங்கிலத்தில்: சானிகா சிறியானந்த
தமிழில்:ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கைக்கு விஜயம் செய்து பிரியந்தவின் மனைவி மற்றும் மகன்கள் இருவரையும் சந்தித்து பாகிஸ்தானின் அனைத்து மக்களினதும் கவலையைத் தெரிவிப்பதற்கு நான் எதிர்பார்த்திருக்கிறேன். அவரது உயிரை என்னால் காப்பாற்ற முடியாமற்போனமை எனக்கு பெரும்வேதனையாக இருக்கிறது என பாகிஸ்தான் சியால்கோட்டின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணியாற்றிய பிரியந்த குமார என்ற இலங்கையரை வன்முறைக் கும்பலிடமிருந்து பாதுகாக்கப் போராடிய மலிக் அத்னான் டெய்லி எப்.டி. பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார். மலிக் அத்னானுக்கு பாகிஸ்தானின் இரண்டாவது உயர் சிவில் விருதான ‘தம்கா இ சுஜாத்’ விருது வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். அதன்படி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த தாக்குதல் சம்பவத்தின்போது நான் ஓர் பாகிஸ்தானிய பிரஜை என்ற ரீதியிலும் முஸ்லிம் ஒருவர் என்ற ரீதியிலும் ஒரு மானிடன் என்ற ரீதியிலும் உடனடியாக சில தீர்மானங்களை மேற்கொண்டே பிரியந்த குமாரவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சியால்கோட் ராஜ்கோ இன்டஸ் ரீஸ் தொழிற்சாலை பணியாளர்கள் அவரை கொலை செய்துவிட்ட சம்பவத்தின் சோகத்தில் தான் தொடர்ந்தும் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவருடனான விசேட நேர்காணலின் தமிழாக்கம் வருமாறு:.
Q: உங்களைப் பற்றியும் ராஜ்கோ இன்டஸ்ரீஸ் நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றுகிறீர்கள் என்றும் கூறமுடியுமா?
எனது வாழ்விடம் சியால் கோட் ஒலாக் அவான் விவசாய கிராமம். எனது வயது 40. எனது குடும்பத்தில் என்னுடன் நால்வர். ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். 2020 இல் எனது தந்தை காலமாகி விட்டார். கடந்த 16 வருடங்களாக நான் இந்த ராஜ்கோ தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். தற்போது இந்த நிறுவனத்தில் உதவி முகாமையாளராகப் பணியாற்றி வருகிறேன். நான் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளேன்.
Q: பிரியந்த குமாரவுக்கும் தொழிற்சாலையின் பணிப்பாளர்களுக்குமிடை யிலான தொடர்புகள் எவ்வாறு இருந்தது?
அவர் பணியாளர்களுடன் மிகவும் கருணையுள்ளவர். ஆனால் கடமை நேரத்தில் மிகவும் கண்டிப்பாக பணியாற்றிய ஒருவர். கடினமான பொறுப்புடன் கடமையாற்றினார். தொழிற்சாலை ஊழியர்களும் தன்னைப்போல் பொறுப்புடன் கடமையுணர்வுடன் வேலை செய்வார்கள் என்று எப்போதும் எதிர்பார்ப்பவர்.
Q: தொழிற்சாலை ஊழியர்கள் அவர் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?
ஊழியர்கள் அவருக்கு கீழ்ப்படிந்து செயற்பட்டார்கள். அவர் தொடர்பில் ஊழியர்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருந்தன. என்றாலும் அந்த முரண்பாடுகள் முகாமையாளர்களிடம் பகிரங்கமாக தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சாலையில் பணியாளர்கள் 2,200 பேர் வேலை செய்கிறார்கள். மேலும் 100 முகாமையாளர்கள் கடமையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்கிறோம்.
Q: அந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தினால்…?
பிரியந்த குமார தொழிற்சாலையில் அவரது காரியாலயத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று காலை 10.00 மணியளவில் தொழிற்சாலை ஊழியர்கள் போஸ்டர்கள் சிலவற்றை ஒட்டியிருந்தார்கள். போஸ்டர் ஒட்டியிருப்பதை அவர் விமர்சித்தார். அத்தோடு போஸ்டர்களை கழற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அச்சந்தர்ப்பத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு குழப்ப நிலை உருவானது. தங்களது மத நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரியந்த குமார மீது குற்றம் சுமத்தினார்கள். ஊழியர்கள் அவரை ஏசிக்கொண்டு பிரியந்த குமாரவின் காரியாலயத்திற்குச் சென்றார்கள். சப்தமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். குழப்பம் விளைவித்தார்கள். அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக பிரியந்த தொழிற்சாலையின் கூரைப்பக்கம் ஓடினார். ஊழியர்கள் சப்தமிட்டுக் கொண்டு அவரைத் துரத்தி பின்னால் ஓடினார்கள்.
Q: அந்த போஸ்டர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது. பிரியந்தவுக்கு உருது மொழி வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருந்ததா?
போஸ்டர்களில் என்ன எழுதியிருந்தது என்பதை என்னால் இப்போது விளக்க முடியாது. ஆனால் அவருக்கு உருது மொழியில் எழுதுவதற்கோ வாசிக்கவோ முடியுமாக இருக்கவில்லை.
Q: உருது மொழியில் எழுதப்பட்டிருந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவரால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்திருந்தால் அவர் எப்படி அந்தப் போஸ்டர்கள் விமர்சித்திருக்க முடியும்-?
போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தவற்றை அவரால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. என்றாலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம்.
Q: அவர் கூரைப்பகுதியை நோக்கி ஓடும்போது நீங்கள் அவருடனா இருந்தீர்கள்?ஆம், அவருடன் தான் இருந்தேன். இந்த குழப்பமான நிலையிலிருந்து அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக நானும் அவருடனே இருந்தேன். குழப்பமான நிலைமை அதிகரித்த வேளையில் தொழிற்சாலையின் இரண்டாவது வாயிலினூடாக மக்கள் உள்ளே வருவதற்கு ஆரம்பித்தார்கள். எங்களது தொழிற்சாலை ஊழியர்கள் மாத்திரமல்ல வேறு தொழிற்சாலைகளின் ஊழியர்களும், கிராமவாசிகளும் இரண்டாவது வாயிலினூடாக உள்ளே நுழைந்தார்கள். ஆத்திரமடைந்தவர்கள் அநேகர் பிரியந்தவை தாக்கும்போது நான் அவர்களுக்கு மத்தியில் பாய்ந்து பிரியந்தவின் சார்பாக பேசினேன். அவரை காப்பாற்றுவதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
என்றாலும் ஆத்திரமடைந்திருந்த குழுவினர் எவரது பேச்சையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. அவர்கள் கோபத்தின் உச்ச நிலையில் பிரியந்தவைத் தாக்கினார்கள். இறுதியில் பிரியந்தவை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது. தாக்குதலில் நானும் காயமடைந்தேன். ஆரம்பத்தில் 50–100 க்கும் இடைப்பட்ட ஊழியர்களே தாக்கினார்கள். என்னைப்போல் மேலும் சில ஊழியர்களும் அவரைத் தாக்க வேண்டாமெனக் கெஞ்சினார்கள். என்றாலும் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் நாம் கூறியதை செவிசாய்க்கவில்லை.
Q: தாக்குதலை மேற்கொண்டவர்களை நீங்கள் கண்டபோது உங்களுக்கு என்ன உணர்வு மேலிட்டது?
எப்படியாவது பிரியந்தவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலிட்டது. அவர் ஒரு சிறந்த தலைவர். நல்ல மனிதர்.நல்ல நண்பர். அவரைக் காப்பாற்றியிருந்தால் அதுபோன்ற மனநிறைவு எனக்கு எப்போதும் ஏற்பட்டிருக்காது. நாங்கள் இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அவர் தொழிற்சாலையில் எனது மேலாளர்.
Q:பாகிஸ்தான் மக்களுக்கு இது தொடர்பில் என்ன செய்தியைச் சொல்கிறீர்கள்?
இஸ்லாத்தின் போதனைகளின் உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொள்ளுங்கள் அந்தப்போதனைகளின் பெறுமதியை உள்ளத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
எவராவது ஒருவர், ஏதாவது வழியில் குற்றம் இழைத்திருந்தால் பாகிஸ்தானின் சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள். சட்டத்தை கையிலெடுப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
Q:பிரியந்தவின் கொடூரமான கொலை காரணமாக இன்னும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்களுக்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்?
இந்தச் சம்பத்தின் காரணமாக பாகிஸ்தான் மக்களுடன் நீங்கள் கொண்டுள்ள நட்புறவில் விரிசல்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தினால் நாம் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நிகழா வண்ணம் நாமனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு பாகிஸ்தானியராக உயிரைப் பயணம் வைத்து மனிதாபிமானத்துக்காக நான் ஆற்றிய செயற்பாட்டுக்காக எனக்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியுடன் இலங்கை வரவுள்ளேன்.
பிரியந்தவின் குடும்பத்தைச் சந்தித்து எமது கவலையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.- Vidivelli