லத்தீப் பாரூக்
முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்புக்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் தற்போது உணரத் தொடங்கி உள்ளனர். அதேபோல் அகில இலங்கை ஜம் மிய்யத்துல் உலமா என்ற சமய ரீதியான அமைப்பும் இஸ்லாத்தை விட்டுக் கொடுக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு படுகொலைத் தாக்குதலின் பின்னணியில் இருக்கின்ற உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் இணைந்து அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற தேவையையும் முஸ்லிம்கள் தற்போது வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் தான் முஸ்லிம் சமூகம் குற்றமற்றது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்ட முடியும் என்பதையும் முஸ்லிம்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு கோரச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரிகளுக்கு, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மோதவிட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற தேவையும் ஆசையும் இருந்தது என்பதே இன்று பலரும் உணர்ந்துள்ள ஒரு விடயமாகும். ஆனால் அத்தகைய ஒரு அழிவு வராமல் தடுத்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில தனிநபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலே தவிர முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அவர் சரியான சந்தர்ப்பத்தில் துணிச்சலோடும் நிதானத்தோடும் தமது மக்கள் மத்தியில் விடுத்த அறிவிப்பு, சந்தர்ப்பவாதிகள் எதிர்பார்த்திருந்த ஒரு பாரிய மோதலைத் தவிர்த்தது என்றால் அது மிகையாகாது.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் ஒட்டு மொத்த மூன்றாம் உலக நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரப்பாடு மற்றும் இன நல்லிணக்கம் என்பனவற்றுக்கு ஒரு மின்னும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று அது உலகிலேயே மிக மோசமாக முகாமைத்துவம் செய்யப்பட்ட ஊழல்கள் மலிந்து போன பொருளாதார ரீதியாக உருக்குலைந்த வங்குரோத்தின் விளிம்பு நிலைக்கு வந்துள்ள தேசமாக மாறியுள்ளது. 1948 முதல் தலைவிரித்தாடிய இனவாத அரசியல் தான் இன்றைய இழி நிலைக்கு பிரதான காரணமாகும்.
இனவாத யுத்தத்தின் பின் முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்த அரசை முழுமையாக ஆதரித்தனர். யுத்தத்தின் மூலம் உரிய பாடங்களை அரசு கற்றுக் கொள்ளும் என அவர்கள் எதிர்பார்த்தனர். இனங்களை அரவணைத்துக் கொண்ட பொதுவான நல்ல விடயங்களை நோக்கி இந்த நாடு நடைபோடும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அரசு எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக இனவாத அரசியல் கொள்கை முஸ்லிம்களை இலக்கு வைக்கத் தொடங்கியது. அதற்கு சாதகமாக இந்தியாவில் இனவாதத்தில் ஊறிப்போன பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரமாணம் செய்து கொண்டுள்ள இஸ்ரேல் என்பனவற்றுக்கு அரசாங்கம் நாட்டின் கதவுகளை தாராளமாகத் திறந்து விட்டது.
இலங்கை என்ற தேசத்தைப் பற்றி இந்த சக்திகளுக்கு எந்த விதமான கரிசனையோ அக்கறையோ கிடையாது. அவர்களது ஒரே தீய இலக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தான்.
அளுத்கமை, தர்கா நகர், பேருவளை ஆகிய இடங்கள் உட்பட இன்னும் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கெல்லாம் முஸ்லிம்களின் சொத்துக்கள் உட்பட பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. சில இடங்களில் முஸ்லிம்களின் புனித வேதநூலான அல்குர்ஆனையும் எரித்து அதன் மேல் சிறுநீர் கழித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட எவருமே இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
மைத்திரி- ரணில் ஆட்சியிலும் கூட முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத ஆத்திரமூட்டல்கள் தொடர்ந்தன. இந்தச் சம்பவங்களின் உச்ச கட்ட விளைவுதான் உயிர்த்த ஞாயிறு படுகொலைகள். ஒரு சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு இந்தச் சம்பவத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இனவாதிகளின் திட்டமிடல் படி அவர்களின் வன்முறைத் தாக்குதல்களுக்கு முழு சமூகமும் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. முஸ்லிம்களுக்கு எதிரான வெறித்தனமும் வன்முறைகளும் தொடர்ந்தன.
இந்த இனவாத பிரசாரங்களின் தொடராகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான பௌத்த அரசு பதவிக்கு வந்தது. 2019 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 69 இலட்சம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அன்று முதல் இன்று வரை இந்த அரசும் முஸ்லிம்களுக்கு பொதுவாக பாதக நிலையை உருவாக்கும் பல நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளனர்.
இவற்றின் நடுவே அலி சப்ரி என்ற ஒரு முஸ்லிம் சட்டத்தரணியை அரசாங்கம் நீதி அமைச்சராக நியமித்தது. இந்த நாட்டில் ஜனநாயகத்தை செயலிழக்கச் செய்து சிங்கள பௌத்த சர்வாதிகாரத்துக்கு வழியமைக்கும் அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தத்தை அவர்தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய பல முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவோடு இந்த திருத்தம் அமோகமாக நிறைவேற்றப்பட்டது. 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தம்மை ஏமாற்றி தாம் சார்ந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்பதே மக்களின் பொதுவான நிலைப்பாடாகும்.
அலி சப்ரி என்ற முஸ்லிம் சட்டத்தரணியைப் பயன்படுத்தி அரசாங்கம் பௌத்த சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொண்டது.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க அண்மையில் தெஹிவளை பள்ளிவாசலுக்குள் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் அலி சப்ரி உரையாற்றி உள்ளார்.
பள்ளிவாசல்கள் அரசியல் நோக்கங்களுக்கு உரியதல்ல என்ற வகையில் இந்நிகழ்வு பல முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒருவருக்கு தான் விரும்பும் எந்தவொரு அரசியல்வாதியையும் ஆதரிக்கும் உரிமை உள்ளது. ஆனால் தமது அரசியல் நோக்கங்களுக்காக இறைவனின் புனித இல்லமான பள்ளிவாசல்களை பாவிப்பதும் அரசியல்வாதிகளைப் புகழும் பதாதைகளையும் ஏனைய அறிவிப்புக்களையும் பள்ளிவாசல்களுக்குள் காட்சிப்படுத்துவதையும் யாரும் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது. இவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயங்கள். இந்த சம்பவம் காரணமாக உலமா சபையும் அதன் சர்ச்சைக்குரிய தலைமைத்துவமும் மீண்டும் ஒரு தடவை சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக கண்டனத்துக்கு ஆளாகி உள்ளன.
இது சம்பந்தமாக மௌலவி இம்தியாஸ் யூசுப் வெளியிட்டுள்ள ஒரு விஷேட காணொளியில் ஊழல், குற்றச்செயல்கள், நீதியற்ற நிலைமை என்பன தலைவிரித்தாடும் அரசியல் நோக்கங்களுக்காக பள்ளிவாசல்களைப் பயன்படுத்துவதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அந்தச் சம்பவம் பள்ளிவாசலுக்குள் அரசியல் பதாதைகளோடு நடந்துள்ளது. நாம் வாழும் இதே பிரபஞ்சத்தில் தான் அமைச்சர் அலி சப்ரியும் வாழுகின்றார் எனின், 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய சில முஸ்லிம் வியாபாரிகளும் அதே அளவு சர்ச்சைக்குரிய உலமா சபை தலைவரும் இணைந்து பள்ளிவாசலுக்குள் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தியமை இது முதற் தடவை அல்ல. ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முதலாம் ஆண்டு பதவி நிறைவை முன்னிட்டு ஒரு வைபவம் கொள்ளுபிட்டி ஜும்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளை முஸ்லிம் அல்லாதவர்களும் நன்கு அவதானித்து வருகின்றனர். அண்மையில் ஒரு பௌத்த பிக்கு இவ்வாறான ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள காணொளியில் அது எந்த வகையிலும் இஸ்லாமிய போதனைகளோடு தொடர்புடைய ஒன்றல்ல என்பதை தாங்கள் அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 22 வருடங்களுக்கு மேலாக ஓரங்க நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் உலமா சபை செய்யும் பணி இதுதானா? தவறுகளுக்கு மேல் தவறுகள், குழப்பங்களுக்கு மேல் குழப்பங்கள், சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகள் என பணியாற்றும் உலமா சபை இன்று வரை சரியான இஸ்லாமிய கருத்துக்களையும், சிந்தனைகளையும், பாடங்களையும் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு வழங்கத் தவறி வந்துள்ளது.
பூகோள ரீதியாக இஸ்லாமோபோபியா சக்திகள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அவை முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், மில்லியன் கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்து வருகின்ற நிலையில், அவர்களின் தீய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையில் இன்னும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களை அகதி முகாம்களுக்குள் அடக்கி வைத்துள்ள நிலையில் இவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையிலான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதே சக்திகள் இந்த நாட்டிலும் இனவாத ஊடகங்களைப் பயன்படுத்தி சிங்கள மக்களின் உள்ளங்களில் நச்சு விதைகளை தூவும் முயற்சிகளை ஏற்கனவே அமுல் செய்து வருகின்றன.
ஆனால் இன்றைய நிலையில் அதிர்ஷ்டவசமாக நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவமானங்கள், பாதிப்புக்கள் என்பனவற்றை சிங்கள மக்களில் பலரும் அவர்களின் சமயத் தலைவர்களும் நன்கு உணர்ந்து கொள்ளும் நாட்களாகவே கடக்கின்றன.
இவ்வாறான ஒரு சாதகமான பின்னணியில் முஸ்லிம் சமூகம் அதன் தலையெழுத்தை தீர்மானிக்கும் பொறுப்பை ஊழலும் வஞ்சகமும் மிக்க அரசியல்வாதிகளிடமோ அல்லது அவர்களுக்கு நிகரான சமயத் தலைமைகளிடமோ ஒப்படைத்து விட்டு, அவர்கள் அதில் சுகபோகம் அனுபவிப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
தேசிய கட்சிகள் ஊடாக அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளான முஜிபுர் றஹ்மான், மரிக்கார், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர் ஹாஷிம், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தம்மால் முடிந்தளவு பணியாற்றி வருகின்றனர். இவர்களோடு முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இஸ்லாமே இல்லாத, முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை இழந்த முஸ்லிம் கட்சிகளினதும் அவற்றின் தலைமைத்துவங்களிடம் இருந்தும் அவற்றின் பிரதிநிதிகளிடம் இருந்தும் முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.
அதேபோல் உறக்க நிலையில் இருக்கும் சிவில் சமூக அமைப்புக்களும் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. நிலைமைகளை சீராக்கும் ஒழுங்குகளை மேற்கொள்ளும் பணியில் அவர்கள் இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் என எல்லோருக்கும் சொந்தமானது என்ற எண்ணக்கருவோடு செயற்படும் பெரும்பான்மை அமைப்புக்களோடு கைகோர்த்து செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது.
இந்தத் தீவகத்தில் சுமார் 1200 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இனவாதம் அற்ற சிங்கள மன்னர்கள் தலைமையில் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் அவர்கள் தமது பங்களிப்புக்களை வழங்கி உள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த இனவாத அரசுகள் முஸ்லிம்களின் உரிமைகளையும் இருப்பையும் மறுத்தாலும் கூட முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் தனியானதோர் வரலாறு உள்ளது என்பதே யதார்த்தமாகும்.
முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களும் செய்த தியாகங்களும் இல்லாவிட்டால் இன்று இலங்கை ஒரே நாடாக இருந்திருக்க முடியாது என்ற உண்மை நிலையை இனவாத சக்திகள் உணர மறந்துள்ளமை வேதனை மிக்கதாகும்.-Vidivelli