ஸ்திரமற்ற நாடு! பாதுகாப்பற்ற மக்கள்!!

0 446

நாட்டின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ஸ்திர­மற்ற நிலை­மைகள் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து கொண்டே செல்­கின்­றன. நாட்டை நிர்­வ­கிக்கும் அமைச்­ச­ர­வையில் பாரிய கருத்து முரண்­பா­டுகள் தோற்றம் பெற்­றுள்­ளன. அமைச்­ச­ர­வைக்குத் தெரி­யா­ம­லேயே யுக­த­னாவி மின்­சக்தி நிலை­யத்தின் பங்­கு­களை அமெ­ரிக்க நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­ய­தாக ஆளும் தரப்பின் பங்­காளிக் கட்­சிகள் குற்­றம்­சு­மத்தத் தொடங்­கி­யுள்­ளன. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குறித்த ஒப்­பந்­தத்தின் பிர­தியை பாரா­ளு­மன்றில் வெளி­யிட்­டதன் பின்­னரே அது பற்றித் தாம் அறிந்து கொண்­ட­தாக அமைச்­ச­ர­வையில் உள்­ள­வர்­களே கூறு­கின்­றமை வேடிக்­கை­யா­க­வுள்­ளது. ஜனா­தி­ப­தியை ஆட்­சிக்குக் கொண்­டு­வரப் பாடு­பட்­ட­வர்­களே இன்று அவ­ருக்கு எதி­ராக ஊட­கங்­களில் தோன்றி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்கத் தொடங்­கி­யுள்­ளனர். ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி. ஜய­சுந்­த­ரவை உட­ன­டி­யாக பதவி விலக்­கு­மாறு அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்­சர்­களும் போர்க் கொடி தூக்­கி­யுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வ­ளவு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலும் ஜனா­தி­பதி தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சிங்­கப்பூர் சென்­றுள்ளார்.

மறு­புறம் நாட்டில் விலை­வாசி உயர்வு மக்­களைக் கடு­மை­யாக வருத்தத் தொடங்­கி­யுள்­ளது. நாட்டில் மலி­வாகக் கிடைத்து வந்த மரக்­க­றி­களின் விலை இப்­போது வானு­யர அதி­க­ரித்­துள்­ளன. இதனால் உணவுப் பொருட்­களின் விலைகள் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன. மீண்டும் எரி­வாயு சிலிண்­டர்­க­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. சமையல் எரி­வா­யுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அதன் தரம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­ததால் திருப்பி அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் எதிர்­வரும் நாட்­களில் எரி­வாயு தட்­டுப்­பாடு மேலும் மோச­மாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சிலிண்­டர்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யா­ததன் கார­ண­மாக பல ஹோட்­டல்கள் மூடப்­பட்­டுள்­ளன. சிலிண்டர் விற்­பனை செய்யும் கடை­களில் இன்று விற­குகள் விற்­கப்­ப­டு­கின்­றன. மக்கள் சுமார் 10 ஆயிரம் ரூபா வரை கொடுத்து மண்­ணெண்ணெய் அடுப்பை வாங்கிச் செல்­கின்ற நிலை வந்­துள்­ளது.

சமையல் எரி­வாயுக் கசி­வினால் வெடிப்புச் சம்­ப­வங்கள் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. கடந்த ஆறு வாரங்­களில் மாத்­திரம் 727 வெடிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் திணைக்­கள அறிக்­கைகள் கூறு­கின்­றன. இவற்றுள் 24 சம்­ப­வங்கள் எரி­வாயு கசி­வுடன் சம்­பந்­தப்­பட்­டவை என்றும் ஏனை­யவை அடுப்­பு­களில் உள்ள குறை­பா­டுகள் கார­ண­மாக ஏற்­பட்­டவை என்றும் பொலிஸ் அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. துர­திஷ்­ட­வ­ச­மாக கடந்த வாரம் குண்­ட­சா­லையில் வீடொன்றில் ஏற்­பட்ட எரி­வாயுக் கசிவு வெடிப்புச் சம்­ப­வத்தில் நான்கு பிள்­ளை­களின் தாய் ஒருவர் பரி­தா­ப­க­ர­மாக மர­ணித்­துள்ளார்.

அதே­போன்று நேற்று முன்­தினம் குரு­விட்ட பகு­தியில் வெடிப்புச் சம்­ப­வத்­தி­லி­ருந்து தப்­பு­வ­தற்கு மாடி­யி­லி­ருந்து குதித்த பெண் ஒருவர் கடும் காயங்­க­ளுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று வரு­கிறார். எனினும் இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக குரல் கொடுக்­கவோ, தர­மற்ற எரி­வாயு சிலிண்­டர்­களை சந்­தைக்கு விடு­வித்த நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவோ எவ­ரையும் காண முடி­ய­வில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கும் பாகிஸ்­தானில் பிரி­யந்த குமார கொல்­லப்­பட்­ட­தற்கும் குண்­ட­சா­லையில் எரி­வாயுக் கசிவு விபத்தில் பெண் ஒருவர் உயி­ரி­ழந்­த­தற்கும் இடையில் எந்த வேறு­பா­டு­களும் இல்லை. முன்­னைய இரண்டு சம்­ப­வங்­க­ளையும் முன்­வைத்து நீதி கோரு­வது போன்றே நாம் எரி­வாயுக் கசிவு சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும் குரல் கொடுக்க முன்­வ­ர­வேண்டும்.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு வழங்­குவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்ச முன்­வைத்த முத­லா­வது வரவு செல­வுத்­திட்­டத்தில் மக்­க­ளுக்கு எந்­த­வித விமோ­ச­னமும் இல்லை. வரவு செல­வுத்­திட்ட விவாதம் நடந்து கொண்­டி­ருக்கும் போதே அவர் இந்­தி­யா­விடம் கடன் கேட்டுச் சென்றார். இப்­போது தனிப்­பட்ட விஜ­ய­மாக ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்குச் சென்­றுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி ஒரு மாத காலத்­திற்கு ஒத்­தி­வைத்­தி­ருக்­கிறார். நாட்டில் எவ்­வ­ளவோ முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த பிரச்­சி­னைகள் இருக்­கத்­தக்­க­தாக, அது பற்றிப் பேசித் தீர்வு காண வேண்­டிய பாரா­ளு­மன்­றமே நீண்ட காலத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று 50 க்கும் மேற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வருட இறுதி விடு­மு­றையில் வெளி­நா­டு­க­ளுக்கு சுற்றுப் பயணம் செல்லத் தயா­ராகி வரு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது.

இலங்கைத் தேசத்தின் பெருந்­துயர் இதுதான். தம்மை வாக்­க­ளித்து பாரா­ளு­மன்றம் அனுப்­பிய மக்­களை நட்­டாற்றில் விட்­டு­விட்டு தாம் சுகம் அனு­ப­விக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள்தான் இந்த நாட்டில் உள்­ளனர். மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி எந்­த­விதக் கவ­லையும் அவர்­க­ளுக்கு இல்லை.

அடுத்த வருட முற்­ப­கு­தியில் நாட்டில் பாரிய பஞ்சம், பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை வரும் என்றும் அரசாங்கம் அதனை அடக்குவதற்கு இராணுவ பலத்தைப் பிரயோகிக்கலாம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆக, அடுத்து வரும் நாட்கள் நம்பிக்கையற்றதாகவே உள்ளன. நிலைமை கைமீறிச் செல்லுமானால் தோல்வியடைந்த ஒரு தேசமாக நாம் வரலாற்றில் பதியப்படுவோம். அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்கப் பிரார்த்திப்போம். நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்வோம்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.