இலங்கையில் முஸ்லிம் சமூகம் மீது பாகுபாடு
2013 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ள வன்முறை, துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டு வருமாறு அரசாங்கத்தை கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கை
(எம்.ஐ.அப்துல் நஸார்)
2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருகிறது, இது சிறுபான்மைக் குழுவொன்றை வெளிப்படையாக இலக்கு வைக்கும் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் உச்சக்கட்டமாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
‘எரியும் வீடுகள் தொடக்கம் எரியும் உடல்கள் வரை – இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை’ எனும் தலைப்பிலான சுமார் 80 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் மற்றும் பாகுபாடு குறித்து விரிவான ஆய்வினை முன்வைத்துள்ளது.
சிங்கள-பௌத்த தேசியவாத எழுச்சியினிடையே 2013 தொடக்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு வளர்ச்சி கண்டுள்ளது. தண்டனையின்றி தப்பித்துக் கொள்ளும் கும்பல்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டும், கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்தல், நிகாப் மற்றும் மதரசாக்கள் இரண்டையும் தடை செய்வதற்கான தற்போதைய திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கக் கொள்கைகளினால் தோற்றம் பெற்றுள்ளது.
‘இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்புணர்வு என்பது புதிதான ஒன்றல்ல, எனினும் அண்மைய ஆண்டுகளில் சடுதியாக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள், அதிகாரிகளின் மறைமுக ஒப்புதலுடன் செய்யப்பட்டவை, ஆபத்தான கால இடை வெளியில் நிகழ்ந்துள்ளன. முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக விரோதமாக இருக்கும் பேச்சுக்கள் மற்றும் கொள்கைககளை தற்போதைய அரசாங்கம் கைக் கொண்டுள்ளதோடு இவ் விடயம் தொடர்புபட்டுள்ளது’ என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் கைல் வார்ட் தெரிவித்துள்ளார்.
‘இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை முடிவுக்குக் கொண்டுவந்து முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களுக்கு உள்ளாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும், குற்றவாளிகளை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்பதோடு முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும், துன்புறுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைககள் கைவிடப்பட வேண்டும்.’
முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் விரோதம்
முஸ்லிம்களுக்கெதிரன வன்முறை சம்பவங்கள் 2013 முதல் அடிக்கடி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் செயல்களுக்கு தண்டனையின்றி தப்பித்துக் கொள்வதாகும்.
இஸ்லாமிய விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, முஸ்லிம்களின் நுகர்வுக்கு அனுமதிக்கப்பட்ட உணவைக் குறிக்கும் உணவின் ஹலால் சான்றிதழை முடிவுக்கு கொண்டுவர சிங்கள-பௌத்த தேசியவாத குழுக்கள் வெற்றிகரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டபோது, அதிகரித்த விரோதம் தொடங்கியது. இந்த பிரச்சாரங்கள் காரணமாக பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற வழிவகுத்தது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் தண்டனையின்றி செய்யப்படலாம் என்பதை சமிக்ஞையாக காட்டும் வகையில் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறாமல் இருந்தனர்.
2014 இல், தெற்கு கடலோர நகரமான அளுத்கமவில் ஒரு சிங்கள-பௌத்த தேசியவாதக் குழு பேரணியொன்றினை நடத்திய பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பு கலவரம் தொடங்கியது. இங்கும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பவில்லை அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அதிகாரிகள் தவறிவிட்டனர்.
இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு 2015 இல் இருந்த அரசாங்கம் உறுதியளித்த போதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. தேர்தலுக்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு தெற்கு கடலோர நகரமான ஜிந்தோட்டயில் முஸ்லிம்-விரோத குழுவொன்று வன்முறையில் இறங்கியது, அதே நேரத்தில் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள திகன மற்றும் அம்பாரை ஆகிய நகரங்களில் இதேபோன்ற வன்முறைகள் 2018 இல் இடம்பெற்றன. குற்றவாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பொலிஸாரும் படையினரும் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை அல்லது வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான அதிகரிப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் அமைப்பெனக் கூறப்படும் உள்ளூர் இஸ்லாமியக் குழுவால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் மீதான விரோதம் கணிசமாக அதிகரித்தது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019 மே 13 அன்று, இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் முஸ்லிம்கள் புனித மாதங்களில் ஒன்றான ரமழானின் போது தாக்குதலுக்கு உள்ளாகினர். நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன மற்றும் சமூக வலைதளங்களில் ‘வெறுப்பு பேச்சு’ பதிவுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்கள் பதிவிடப்பட்டன. தாக்குதல்களுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை தன்னிச்சையாக கைது செய்ய அதிகாரிகளால் துரிதமாக அவசரகால விதிமுறைகளும் பயன்படுத்தப்பட்டன.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப முஸ்லிம் மக்களை குறிவைத்து பலிகடாவாக்கி வருகிறது.
கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இது தெளிவாகத் தெரிகிறது, இஸ்லாத்தில் தகனம் செய்யப்படுவது வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையிலும், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது நோய்த் தொற்றினை மேலும் பரவச் செய்யும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ சான்றுகள் இல்லாத போதிலும் அது செயல்படுத்தப்பட்டது.
முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு காரணமாக சர்வதேச அழுத்தத்திற்கு அரசு அடிபணிந்தது. கட்டாய தகனம் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், அதிகாரிகள் நிகாப் தடை மற்றும் மதரஸா மீதான தடை உட்பட பாரபட்சமான சட்டங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர். இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத் தில், இலங்கையின் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து சுதந்திரத்தை மீறுகின்ற செயலாக இருக்கும் என்பதோடு இலங்கையைக் கட்டுப்படுத்தும் சர்வதேச மனித உரிமை சட்டத்தையும் மீறும் செயற்பாடாகவும் இருக்கும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் (பிடிஏ) உட்பட, முஸ்லிம்களை இலக்கு வைப்பதற்காக, தற்போதுள்ள சட்டங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர், இது சந்தேக நபர்களை 90 நாட்கள் வரை குற்றச்சாட்டு இன்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க அனுமதிக்கும். இது ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடாகும், இது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டி இன அல்லது மத வெறுப்பை பரப்புவதைத் தடைசெய்யும் சட்டமாகும்.
15 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியும் செயற்பாட்டளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் தமிழ் மொழிக் கவிதை பற்றிய ஆதாரமற்ற கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு 2020 மே மாதம் 16 ஆந் திகதியன்று கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் ஆசிரியர் அஹ்னாப் ஜசீம் உட்பட தனிநபர்களை இலக்கு வைத்து இந்த சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பான பல சந்தர்ப்பங்களை இந்த இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.
‘பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரஸாக்கள் தடை வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமான பாரபட்சமான கொள்கை நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருகிறது. தற்போது பரிசீலனையில் உள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,’ எனவும் கைல் வார்ட் தெரித்தார்.-Vidivelli