நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாப்பு ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமலும் நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காமலும் செயற்படுவாரானால் எதிர்வரும் 17ஆம் திகதி பாரிய நீதிக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும். 13ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த போராட்டமே இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.
மேலும் நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டும். அவ்வாறே எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சாதகமான நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் , நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படாவிட்டால் கடும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என்றார்.
அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சட்டவிரோதமாக ஆட்சிபலத்தை கைப்பற்றிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நான்கு தடவைகள் நிறைவேற்றியுள்ளோம். அந்த விடயங்கள் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோன்று பிரதமர் பணிபுரிவதற்காகத் தடைவிதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது காணப்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லை என்றே மஹிந்த தரப்பு நினைத்துக்கொண்டு உள்ளது. ஆனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் எங்களின் பெரும்பான்மை பலத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம். ஆகவே நாளைய தினம் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு பாராளுமன்றத்தில் 113 க்கும் அதிகமான பெரும்பான்மை ஆதரவுள்ளது என்பதை நிரூபிப்போம்.
மேலும் 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்தது சட்டத்துக்குப் புறம்பானது என்பது இன்று தெளிவாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் நீதிமன்றங்களுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக நீதியான தீர்ப்பினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம். பாராளுமன்றத்தில் எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது என பலமுறைகள் நிரூபித்துள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்களின் பின்னரும் 225 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கபெற்றாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாதென ஜனாதிபதியால் குறிப்பிட முடியாது.
எனவே, நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னர் 19 ஆவது சீர்திருத்தத்தின் உண்மையினை புரிந்துகொண்டு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட வேண்டிய அவசியம் ஏற்படும். காரணம் 19 ஆவது சீர்த்திருத்தம் அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் இந்த சீர்த்திருத்தம் தொடர்பில் தான் பெருமையடைவதாகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ஆகவே தொடர்ந்து அவரால் 19 ஆவது சீர்த்திருத்தத்தை மீறி செயற்பபட முடியாது.
பாதுகாப்புத்துறை மீதான தாக்குதல்கள், டட்லி சேனநாயக்கவை பற்றி உயர்வாகப் பேசுபவர்களே அவர்களால் உருவாக்கப்பட்ட அபிவிருத்திகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துதல் எனப் பல்வேறுபட்ட அராஜக நிலைகள் உருவாகியுள்ளன. ஜனாதிபதியின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அடிப்படை கொள்கைகள் அற்றதாகவே காணப்படுகின்றன. இதற்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். இதுவரையில் நாட்டில் எழுந்துள்ள அனைத்து இழப்புகளுக்கும் ஜனாதிபதியின் தன்னாதிக்க செயற்பாடே காரணமாகும்.
அவ்வாறே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாபதி தேர்தலே இடம்பெறவேண்டும். ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் தமது கருத்தினை வெளியிட அவர்களுக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறே பிரதமரை தெரிவு செய்வதற்கு 113 பெரும்பான்மையும் தேவைப்படாது. பாராளுமன்றத்தில் அதிக ஆசனமுள்ள கட்சியின் தலைவரே பிரதமராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
அவ்வாறே எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிக்கான போராட்டமொன்றினை முன்னெடுக்கவும் தயாராக இருந்தோம். நாளை ரணில் விக்கிரமசிங்கவை பிதமராக நியமிக்கக் கோரி பிரேரரணை பிரேரிக்கப்பட்டதன் பின்னரே இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்தோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னர் யாப்புரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படாவிட்டால் நீதிக்கான பாரிய போரட்டம் இடம்பெறும் என்றார்.
-Vidivelli