அரசியல், மார்க்க, சிவில் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்கள் சகல வழிகளிலும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமானதே தலைமைத்துவ நெருக்கடியாகும்.
இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல், மார்க்க மற்றும் சிவில் தலைமைத்துவங்கள் கடந்த காலங்களைப் போன்று சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் மீது அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் பொய்ப்பிரசாரங்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றமனப்பாங்கும் இவற்றுக்குக் காரணமாகும். இத் தாக்குதல் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்ற போதிலும் இந்த குற்றமனப்பாங்கிலிருந்து வெளிவர முடியாத நிலையிலேயே இன்றும் முஸ்லிம் சமூகமும் அதன் தலைமைத்துவமும் உள்ளது.
இருந்தபோதிலும் இத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இன்று இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் உணரத் தொடங்கியுள்ளனர். இத் தாக்குதலினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் அவர்களது மத தலைவர்களும் கூட இதனை அடிக்கடி பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஆட்சி பீடமேறியுள்ளதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந் நிலையில் முஸ்லிம் சமூகமும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பழிகளைக் களைந்தெறிவதற்கு துணிச்சலுடன் முன்வர வேண்டியுள்ளது. இத் தாக்குதல் தொடர்பில் சுமார் 325 பேர் வரை இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 25 பேர் மீது மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறு குழுவினர் தொடர்பில் வழக்குகள் நடைபெற்று குற்றமிழைத்துள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படலாம். அதற்கு ஒருபோதும் முஸ்லிம் சமூகம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை.
இந்த உண்மையை முஸ்லிம் சமூகம் முதலில் உணரத் தலைப்பட வேண்டும். பிற சமூகத்தவர்களே இன்று உண்மையை உணர்ந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் இன்னமும் தலைகுனிந்து நிற்பதும் பௌத்த கடும்போக்கு சக்திகளின் அச்சுறுத்தல்களை சாத்வீக வழியில் எதிர்கொள்ளத் திராணியற்றிருப்பதும் கவலைக்குரியதாகும்.
இன்று நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலை அதிகரிப்பு, விவசாயிகளின் பிரச்சினைகள், ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு என பாரிய போராட்டங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில் அவற்றிலிருந்து திசைதிருப்புவதற்காக மீண்டும் இனவாதத்தை தூண்ட சில தீய சக்திகள் முற்படுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல், மார்க்க மற்றும் சிவில் தலைமைகள் தைரியத்துடன் சமூக விவகாரங்களைக் கையாள முன்வர வேண்டும். இன்று முஸ்லிம் இளைஞர்கள் தமக்கு சரியான தலைமைத்துவம் இல்லையே என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமக்காக குரல் கொடுப்பதற்கு பிற சமூகங்களின் பிரதிநிதிகளை நாடி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என அங்கலாய்க்கின்றனர். இவ்வாறு விரக்தியுற்றுள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு சரியான தலைமைத்துவம் வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடாத்துவதற்கான நேர்மைமிக்க குழுவொன்று முன்வர வேண்டும். காலத்திற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும்.
இன்று அரசியல், மார்க்க மற்றும் சிவில் தலைமைத்துவங்களாகிய மூன்று தரப்பினரும் தமக்குள் பிளவுபட்டு, பலவீனப்பட்டு தனித்தனியாக இயங்கி வருவதை காண்கிறோம். இந் நிலை மாற்றப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு சமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும். சமூகம் நெருக்கடியிலுள்ள இன்றேனும் சரியான தலைமைத்துவத்தை வழங்க தவறுமிடத்து எதிர்காலத்தில் மேலும் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நாம் எதிர்நோக்க வேண்டி வரலாம். அதற்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.- Vidivelli