கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்றவவானினும் நனி சிறந்ததே”.
இலங்கை முஸ்லிம்களின் புலம்பெயர்வு அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மண்ணிலேயே கட்டுண்டு அந்த மண்ணுக்கே விசுவாசமாகக் கிடந்த ஒரு சமூகம் 1915இல் நடைபெற்ற சிங்கள- முஸ்லிம் இனக்கலவரத்திற்குப் பிறகும்கூட வெளிநாடு சென்று குடியேற வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மாறாக இலங்கையுடனுள்ள இறுக்கம் மேலும் கடினமாக வளரலாயிற்று. இது தமிழினத்துடன் ஒப்பிடும்போது ஒரு முக்கியமான வேறுபாடு. தமிழருக்கெதிரான ஒவ்வொரு இனக்கலவரத்தின் பின்னும் நுற்றுக்கணக்கான தமிழர்கள் புலம்பெயரலாயினர். அந்த இனத்துக்கெதிராக 1983ல் அரசாங்கத்தினாலேயே தொடக்கப்பட்ட இனச்சுத்திகரிப்புக் கலவரமும், அதனைத் தொடர்ந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும், அதன் இறுதித் தோல்வியும் புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்காக உயர்த்திவிட்டன. இன்று ஏறத்தாழ 500,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா என்றவாறு பல்வேறு நாடுகளிற் குடியேறி கண்ணியமாக வாழ்கின்றனர். இவர்களுடன் ஒப்பிடும்போது புலம்பெயர் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இதுவரை இவர்களின் மொத்த எண்ணிக்கையை யாரும் மதிப்பீடு செய்யவில்லையாயினும், உலகெங்கும் நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ள இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை தமிழர்களின் தொகையில் பத்து வீதத்தையும் எட்டியிருக்காது என்றே கூறவேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறவேண்டும் என்ற எண்ணம் மிகவும் காலம் தாழ்த்தியே ஏற்பட்டதும், வெளிநாடுகள் விரும்பும் கல்வித் தகைமைகளும் தொழில் திறமைகளும் முஸ்லிம்களிடையே குறைவாகக் காணப்பட்டதும் இதற்கான காரணங்களாக அமையும். இது ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒரு விடயம்.
புலம்பெயர் முஸ்லிம்களின் தொகை சிறிதாக இருந்தாலும் இன்று இலங்கை இருக்கும் நிலையில் அவர்களால் அவர்களை உருவாக்கிவிட்ட தாயகத்துக்கும் அங்கு வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் முஸ்லிம் இனத்துக்கும் எவ்வாறு துணையாகச் செயற்படலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கும் ஒரு கடமை இப்போது அவர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தமது உறவினர்களுக்கு இவர்களெல்லாருமே தத்தம் வசதிக்கேற்ப ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலே சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட ஒரு படி மேலேறி இலங்கை முஸ்லிம் இனத்துக்கும் தாய்நாட்டுக்கும் எவ்வாறு உதவலாம் என்பதே அவர்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினை. அதே பிரச்சினைதான் புலம்பெயர் தமிழர்களையும் எதிர்கொண்டுள்ளது. அதற்காக அவர்கள் பலவழிகளிலும் செயற்படத் தொடங்கிவிட்டனர். எனினும் இக்கடமை பற்றிய பின்வரும் சிந்தனைகள் இரு இனங்களுக்கும் பொருத்தமானவை.
இன்று இலங்கையைப் பீடித்திருக்கும் மிகக்கொடிய பிணி பொருளாதார நெருக்கடியோ கொரோனா கொள்ளை நோயோ அல்ல, இலங்கையில் நிலவும் மனிதாபிமானமற்ற இனவாத அரசாட்சியே. பொருளாதார நெருக்கடியும் கொள்ளைநோயும் மற்ற நாடுகளையும்தான் பீடித்துள்ளன. ஆனால் அந்த நாடுகளில் நீதித்துறை சுயமாக இயங்குவதாலும் இனத்துவேஷம் திட்டமிட்ட முறையில் வளர்க்கப்படாமல் மக்களனைவரும் சமமான பிரஜைகளே என மதிக்கப்பட்டு அரசு விளைவிக்கும் நன்மையோ தீமையோ அவை யாவும் எல்லா மக்களையும் சமமாகச் சென்றடைகின்றதாலும் பொருளாதாரப் பிணியையும், கொள்ளை நோயின் கொடுமையினையும் தாங்கிக்கொண்டு மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்.
இலங்கையிலோ அரசின் திட்டமிட்ட மனிதாபிமானமற்ற இனத்துவேஷக் கொள்கைகளால் பெரும்பான்மை இனம் மிகப்பெரும்பாலான நன்மைகளையும் அதேசமயம் மிகக் குறைவான இழப்புகளையும் அனுபவிக்க, சிறுபான்மை இனங்களோ மிகக் குறைவான நன்மைகளையும் அதே சமயம் மிகக் கூடுதலான இழப்புகளையும் அனுபவிக்கின்றன. அதற்குக்காரணம் பெரும்பான்மை இன மக்களல்ல. மாறாக, சிறுபான்மையினங்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்ற ஒரு மனோபயத்தையும் வெறுப்பையும் அவர்களது நெஞ்சிலே நஞ்சாக ஊட்டிவிட்ட அரசியல்வாதிகளும் அவர்களின் அடியாட்களுமே. இது சுமார் எழுபது வருடங்களாக அரசியலால் வளர்க்கப்பட்ட ஒரு தீராத வியாதி. இங்கே அநீதி தலைவிரித்தாடுகிறது. பாரதி கூறியதுபோன்று இங்கே பேய் அரசாட்சி செய்கிறது.
இந்த நிலையில் இன்று முஸ்லிம்களுக்கும் தமிழினத்துக்கும் முக்கியமாகத் தேவைப்படுவது நீதியே அன்றி வேறெந்தச் சலுகைகளும் அல்ல. அந்த நீதியின் ஆட்சியே நாட்டினது தேவையுமாகும். நாடு செழிப்பதைத் தடுக்கிறது அநீதி. ஆகவே நீதியை நிலைநாட்ட எவ்வாறு ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்கலாம்? அவ்வாறு நிர்ப்பந்திக்கப் புலம்பெயர் தமிழர்களும் முஸ்லிம்களும் யாது செய்யலாம் என்பதே இன்று இவர்களை எதிர்நோக்கும் கேள்வி.
தூரமும் நேரமும் குறுகி தொடர்புகளும் விரிவடைந்துள்ள இன்றைய உலகம் ஒரு பாரிய கிராமமாக மாறிவிட்டதென்று கூறுவர். அதனால் எந்த ஒரு நாட்டிலும் எந்த இனமக்களுக்கும் எதிராக வன்முறைகளும் அநியாயங்களும் அவிழ்த்துவிடப்படுகையில் அதனை உலகின் கண்களிலிருந்து மறைக்க முடியாது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுள் அவ்வாறான தீமைகளைத் தடுப்பதும் ஒன்றாகும். ஐ. நா. சபையிலும் பல குறைபாடுகள் உள்ளன என்பதை மறுக்கவில்லை. இருந்தபோதும் அந்நிறுவனத்தின் பல அங்கங்களாக இயங்கும் தாபனங்களினூடாக அநீதி இழைக்கும் அரசுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவ்வரசுகளின் கொள்கைகளிலும் போக்கினிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஐ.நாவின் மனித உரிமைச் சபை கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றிய இலங்கைக்கெதிரான பிரேரணை அந்த நோக்கில் எடுக்கப்பட்டதொன்றே. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளமையும் அந்த நோக்கத்தினாலேயே. இந்த நடவடிக்கைகளின் பின்னால் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்கள் இருந்தன என்பதும் இப்போது உறுதியாகிவிட்டது. அதனாலேதான் அவர்களுடன் தமிழர்களின் பிரச்சினைகளைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த இணங்குவதாக ஐ.நாவின் செயலாளரிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதிமொழி அளித்துள்ளார். இது உண்மையிலேயே நடைபெறுமா என்பது வேறு விடயம். ஆனாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல வெளியே இருந்து அழுத்தங்கள் மாறிமாறி எழும்போது ஆட்சியாளர்கள் தொடர்ந்து அவ்வழுத்தங்களை உதாசீனம் செய்துகொண்டிருக்க முடியாது. இந்த ரீதியில் புலம்பெயர் முஸ்லிம் சமூகம் எவ்வாறு செயற்படலாம்?
இரண்டு வழிகளுண்டு. அவை இரண்டுமே சாத்தியப்படக்கூடியவை. ஒன்று, புலம்பெயர் தமிழருடன் புலம்பெயர் முஸ்லிம்களும் இணைந்து தனியே தமிழர்களின் பிரச்சினைகளில் மட்டும் வெளிநாட்டு அரசுகளையும் சர்வதேச தாபனங்களையும் கவனம் செலுத்துவதை மாற்றி சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைப்பற்றி உலக அரங்கினில் குரலெழுப்புமாறு செய்வது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இந்தப்பரவலான நோக்கைத்தான் உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையருள் சிங்கள சமூகமொன்றும் இப்பொழுது உருவாகியுள்ளதையும் மறத்தலாகாது. அந்தச் சமூகமும் தாயகத்தில் நடைபெறும் அரசியல் பொருளாதார சமூக ரீதியான சீர்கேடுகளையும் அநியாயங்களையும் வெறுப்புடன் கண்டித்து மாற்றம்கோரியும் இனவாதத்தை எதிர்த்தும் இயக்கரீதியாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இது ஓர் அண்மைக்கால வரவேற்கத்தக்க வளர்ச்சி. ஆட்சியினரையும் அவர்களின் அடிவருடிகளையும் தவிர வேறு யாருக்குமே அந்த நாட்டில் அமைதியாக வாழமுடியாது என்பதையே புலம்பெயர் சிங்களச் சமூகம் எடுத்துக்காட்டுகிறது. ஆதலால் புலம்பெயர் முஸ்லிம் சமூகம் மற்ற இனங்களின் அமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதே பொருத்தமானது. அவ்வாறு கூட்டாகச் செயற்படுதல்மூலம் தமது நோக்கம் முஸ்லிம் இனத்தைமட்டும் பற்றிய ஒரு குறுகிய நோக்கமல்ல, மாறாக முழு நாட்டையும் அதன் சர்வமக்களையும் உள்ளடக்கிய விரிவான நோக்கு என்பதை உலகுக்கு உணர்த்த முடியும். உலகில் எங்கெல்லாம் புலம்பெயர் இலங்கையர் இலங்கையின் இன்றைய அரசுக்கெதிராகக் குரலெழுப்புகின்றனரோ அங்கெல்லாம் புலம்பெயர் முஸ்லிம்களின் குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும். இது முதலாவது வழி.
இணைந்து செயற்படுதல் முதல் வழி என்றால் அந்த வழியின் ஒரு கூறாகவே இரண்டாவது வழி அமைதல் வேண்டும். அதாவது, புலம்பெயர் தமிழர்களுக்கும் புலம்பெயர் சிங்களவர்களுக்கும் இல்லாத ஓர் அரிய வாய்ப்பு புலம்பெயர் முஸ்லிம்களுக்கு உண்டு. அதனை யதார்த்தத்துடன் புரிந்துகொள்வது அவசியம். தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுவதால் சிங்கள இனம் தாய்லாந்துடனும் மியன்மாருடனும் இணைந்துள்ளது. இந்துமதத்தைப் பின்பற்றுவதாலும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டதனாலும் தமிழினம் தமிழ் நாட்டுடன் நெருக்கம் கொண்டுள்ளது. ஆனால் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் ஐம்பத்தேழு நாடுகளுடன் தொடர்புறுகின்றனர். இதைப்பற்றி அளவுகடந்து புகழாமல் இந்தத் தொடர்புமூலம் ஏற்படும் ஓர் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி புலம்பெயர் முஸ்லிம் சமூகம் இலங்கைக்கும் அங்கு வாழும் தம் இனத்தவர்க்கும் எவ்வாறு உதவலாம் என்பதையே சிந்தித்துப் பார்த்துச் செயற்படல் வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையைப் பீடித்துள்ள மிகக்கொடிய பிணி அநீதியின் ஆட்சி. இந்த அநீதியினால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும், இனத்துவேஷம் தூண்டப்பட்டும், ஜனநாயக சுதந்திரங்கள் பறிக்கப்பட்டும், இராணுவ அடக்குமுறை வலுப்படுத்தப்பட்டும் வருவதனால் நாட்டின் பொருளாதாரம் வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டு எல்லா இன மக்களுமே அவதியுறுகின்றனர். ஆனால் ஆட்சியினரும் அவர்களின் பாதுகாவலர்களும் இத்தனைக்குமான பழியை முஸ்லிம்களின்மேல் சுமத்தி மக்களைத் திசைதிருப்ப முனைகின்றனர். கொவிட் கொள்ளை நோயைக்கூட முஸ்லிம்களே கொண்டுவந்தனர் என்றும் அவ்வாட்சியினரின் விஷமிகள் ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்தனர். ஆகவே அநீதியின் ஆட்சி ஒழிக்கப்பட்டாலன்றி நாட்டுக்கும் அங்கே வாழும் முஸ்லிம்களுக்கும் விடிவில்லை என்பது தெளிவாகிறது.
பொருளாதாரம் சீரழிந்து செல்கையிலே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் விரிவடைவது திண்ணம். ஏற்கனவே பாரிய கடன் சுமையுடன் பரிதவிக்கும் ஆட்சியினர் பிச்சை எடுத்தாவது பொருளாதாரத்தை வளர்க்க முனைகின்றனர். அதற்காக முஸ்லிம் நாடுகளின் உதவியை நாட முன்வந்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தை புலம்பெயர் முஸ்லிம் சமூகம் ஒரு துரும்பாகப் பயன்படுத்தி தமது தாயகத்தில் நீதியை நிலைநாட்டப் பாடுபடலாம். எவ்வாறு?
ஐம்பத்தேழு முஸ்லிம் நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பே உலக முஸ்லிம் கூட்டுறவுத்தாபனம். அண்மையில் அது நிறைவேற்றிய இலங்கைக்கெதிரான பிரேரணையே புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களை அதன் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தூண்டியது. முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை வரவேற்கும் அதேநேரம் அந்த உதவியை சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்பதையே புலம்பெயர் முஸ்லிம்கள் உலக முஸ்லிம் கூட்டுறவுத்தாபனத்தினூடாக முஸ்லிம் அரசுகளின் செவிகளுக்கு எட்டவைக்க வேண்டும். அந்த நிபந்தனைகள் ஐ.நாவின் மனித உரிமைச் சபை சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகளுடன் ஒத்ததாகவும் இருக்க வேண்டும். இந்த அழுத்தத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்களையும் சிங்களவர்களையும்விட முஸ்லிம்களுக்கே அதிக வாய்ப்புண்டு. முஸ்லிம் நாடுகளின் பத்திரிகைகளிலும் மற்றும் ஊடகங்களிலும் இலங்கையின் யதார்த்த நிலைபற்றியும் முஸ்லிம்களின் அனுபவங்களைப்பற்றியும் உண்மைகளை வெளியிட வேண்டியது அவசியம். புலம்பெயர் முஸ்லிம்களே அதைத் துணிவுடன் செய்ய முடியும். தாம் பிறந்த தாயகத்துக்குச் செய்யும் ஒரு மகத்தான பணியாக இவற்றை மேற்கொள்ளுதல் அம்முஸ்லிம்களின் தலையாய கடமை.-Vidivelli