உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் வழக்கு ஆரம்பம்

25 பிர­தி­வா­திகள் மீது 23270 குற்­றச்­சாட்­டுக்கள்!

0 3,972
  • மூன்­ற­டுக்கு பாது­காப்­புக்கு மத்­தியில் நடந்த நீதி­மன்ற அமர்வு
  • குற்­றப்­பத்­தி­ரி­கையை தமிழில் வழங்க கேட்ட பிர­தி­வா­திகள்
  • தமிழ் தெரிந்த சட்­டத்­த­ர­ணி­களை தமக்­காக நிய­மிக்­கு­மாறும் கோரிக்கை
  • தாக்­குதல் தொடர்பில் தக­வல்கள் இருந்தும் நட­வ­டிக்கை எடுக்­கா­தோ­ருக்கு என்ன தண்­டனை?
  • தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கும் மதத்­துக்கும் சம்­பந்­த­மில்லை என்­கி­றது சட்­டமா அதிபர் திணைக்­களம்

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கில் கடந்த திங்­க­ளன்று (4) பிர­தி­வா­தி­க­ளுக்கு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டது. பிர­தான பிர­தி­வா­தி­யாக அரச தரப்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அபு செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நௌபர் அல்­லது நௌபர் மௌலவி உட்­பட 24 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டது. குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள 25 பேரில் 15 ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள அபு ஹினா எனப்­படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன் கொரோனா தொற்று கார­ண­மாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் நீதி­மன்­றத்­துக்கு அழைத்து வரப்­ப­ட­வில்லை. அதனால் அவ­ருக்கு மட்டும் இன்னும் குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

விசா­ர­ணையும் கைது­களும் :
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதற்கு முன்னர் நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் 881 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் திணைக்­களம் அண்­மையில் அறி­வித்­தி­ருந்­தது. இதில் 724 பேர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் ஏனையோர் தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான பல்­வேறு அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கடந்த ஜூன் மாதம் அறி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட அல்­லது அதற்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய நபர்­களின் 356 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பணம், அசையும், அசையா சொத்­துக்கள் இது­வரை அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 168 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

இந்த தாக்­கு­தல்கள் தொடர்பில் சுமார் 10 ஆயி­ரத்தை அண்­மித்த வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. சுமார் ஒரு இலட்சம் தொலை­பேசி இலக்­கங்கள் வரை பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சுமார் 1000 ஏக்கர் வரை­யி­லான நிலம் பௌதீக ரீதி­யாக பொலிஸ் பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன என பொலிஸ் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யில்தான், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் (8 சம்­ப­வங்கள்) தொடர்பில், இன்னும் தெளிவாக சொல்­வ­தானால் 268 பேரின் மரணம், 594 பேரின் படு­கா­யங்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் என்ற ரீதியில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. இந்த வழக்­கி­லேயே கடந்த திங்­க­ளன்று குற்றப் பத்­தி­ரிகை 24 பேருக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் விதி­வி­தா­னங்கள் பிர­காரம் சதி, தாக்­கு­த­லுக்கு தயா­ரா­னமை, உதவி மற்றும் ஊக்­கு­வித்தல், வெடி­பொ­ருட்கள் மற்றும் ஆயு­தங்கள் சேக­ரிப்பு, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற 23270 குற்­றச்­சாட்­டுக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த குற்றப் பத்­தி­ரிகை காணப்­ப­டு­கி­றது.

வழக்கு விசா­ரணை ஆரம்பம் :
இந்த குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜ மற்றும் நவ­ரத்ன மார­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற குழாம் முன்­னி­லை­யி­லேயே இந்த வழக்கு இவ்­வாறு விசா­ர­ணைக்கு வந்­தது.

பாது­காப்பு பலப்­ப­டுத்தல்:
கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், நீதி­மன்றின் பாது­காப்பு முன்­னொ­ரு­போதும் இல்­லாத அளவில் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. நீதி­மன்­றுக்கு உள் நுழையும் பிர­தான பாதையில் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மேல் நீதி­மன்ற வளா­கத்­துக்குள் நுழையும் அத்­தனை பேரும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். பொலி­சாரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் குவிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குண்டு செய­லி­ழக்கச் செய்யும் பிரி­வி­னரும் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் நேரடி கண்­கா­ணிப்பில் 3 சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் ஸ்தலத்­தி­லி­ருந்து பாது­காப்பு பணி­களை முன்­னெ­டுத்­தனர்.
குறிப்­பாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்த கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் மூன்றாம் தரப்­பினர் உள் நுழைய அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற செய்­தி­யா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே சோதனை செய்­யப்­பட்ட பின்­ன­ரேயே நீதி­மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

24 பேர் மன்றில் ஆஜர்
இந் நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­களும் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் இருந்து 24 பேர் அழைத்து வரப்­பட்­டனர். ஒரு­வ­ருக்கு கொவிட் தொற்று உறு­தி­யா­ன­தாக பின்னர் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டி­ருந்த பிர­தி­வா­திகள், ஒரே இடத்­தி­லேயே அமர வைக்­கப்­பட்­டிருந்த நிலையில், நீண்ட நாட்­களின் பின்னர் சந்­தித்­துக்­கொள்ளும் சந்­தோ­சத்தை தமக்­கி­டையில் பகிரும் வண்­ண­மாக ஒரு­வ­ருக்கு ஒருவர் கைலாகு கொடுத்­துக்­கொண்­ட­தையும் நீதி­மன்றில் அவ­தா­னிக்க முடிந்­தது.

வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­திகள்:
வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்ட போது ஒவ்­வொரு பிர­தி­வா­தியின் பெயரும் வாசிக்­கப்­பட்டு, பிர­தி­வாதி கூண்­டுக்கு அவர்கள் அழைக்­கப்­பட்­டனர். அவ்­வாறு பெயர் கூறப்­படும் போதும் எத்­த­னையாம் பிர­தி­வாதி என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்த அவர்­க­ளிடம் அதற்­கான இலக்­கங்கள் கைய­ளிக்­கப்­பட்­டன. அதன்­படி முதல் பிர­தி­வா­தி­யாக நௌபர் மௌலவி அறி­விக்­கப்­பட்டு கூண்டில் ஏற்­றப்­பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஒவ்­வொ­ரு­வ­ராக பெயர் கூறி அழைக்­கப்­பட்­டனர். மூன்­றா­வது பிர­தி­வா­தி­யாக அபு சிலா அல்­லது ஹயாத்து மொஹம்­மது மில்ஹான் என பெயர் கூறி அழைக்­கப்­பட்ட போது, “ நோ அபு சிலா, ஒன்லி மில்ஹான்“ (அபு சிலா இல்லை, மில்ஹான் மட்­டுமே) என பெயர் அறி­வித்த நீதி­மன்ற அதி­கா­ரியை நோக்­கி­ய­வாறு கடும் தொனியில் தெரி­வித்த வண்ணம் அவர் கூண்டில் ஏறி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.

பிர­தி­வா­தி­களின் பெயர்கள் முறையே:
1. அபு செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நௌபர் அல்­லது நௌபர் மௌலவி
2. அபு ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபு சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்
4. அபு உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்
5. அபு பலாஹ் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6. அபு தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிப்கான்
7. அபு மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சுர் மொஹம்மட் சனஸ்தீன் அல்­லது தைபு
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தௌஸ்
9. அபு நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மௌலவி
10. ஷாபி மௌலவி அல்­லது அபு புர்கான் எனப்­படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12. அபு தாவுத் எனப்­படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபு மொஹம்மட் எனப்­படும் மொஹம்மட் இப்­திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்­றாஹீம்
15. அபு ஹினா எனப்­படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
16. அபு நன் ஜியார் எனப்­படும் மொஹம்மட் முஸ்­தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவுப்
18. ராசிக் ராசா ஹுசைன்
19. கச்சி மொஹம்­மது ஜெஸ்மின்
20. செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்­தபா மொஹம்மட் ரிஸ்வான்
22. அபு சனா எனப்­படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆய­துல்லாஹ்
24. மொஹம்மட் அன்­சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹ்கம்

குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிப்பு :
இந் நிலையில் மன்றில் குற்றப் பத்­தி­ரி­கைகள் பிர­தி­வா­தி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டன. 23 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான குற்­றச்­சாட்­டுக்கள் அதில் அடங்­கி­யி­ருந்த நிலையில், நேற்­றைய தினம் அவற்றை முழு­மை­யாக எடுத்துச் செல்ல முடி­யா­தோ­ருக்கு, அவற்றை நீதி­மன்­றி­லி­ருந்து எடுத்துச் செல்ல ஒரு மாத கால அவ­காசம் வழங்­கு­வ­தாக தலைமை நீதி­பதி தமித் தொட்­ட­வத்த திறந்த மன்றில் அறி­வித்தார்.

14 பிர­தி­வா­தி­க­ளுக்கு மட்டும் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜர் :
குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­படும் போது மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்த 24 பிர­தி­வா­தி­களில், 14 பிர­தி­வா­தி­க­ளுக்­காக மட்­டுமே சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், சட்­டத்­த­ர­ணி­க­ளான சுனங்க பெரேரா, ஜி.ஏ. கரு­ணா­சே­கர, பாஹிம் உள்­ளிட்ட 6 சட்­டத்­த­ர­ணிகள் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரா­கினர். 11 ஆவது பிர­தி­வா­திக்கு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட கசுன் லிய­னகே எனும் சட்­டத்­த­ரணி ஆஜ­ரா­ன­துடன் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரான பிர­தி­வா­தி­களின் எண்­ணிக்­கையில் அதுவும் உள்­ள­டங்­கு­கி­றது.

நௌபர் மௌல­விக்கு சட்­டத்­த­ர­ணிகள் இல்லை:
இந் நிலையில் பிர­தான பிர­தி­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட நௌபர் மௌலவி, தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் ஆயுதப் பிரிவை வழி நடாத்­தி­ய­தாக கூறப்­பட்ட மில்ஹான் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்­காக எந்த சட்­டத்­த­ர­ணி­களும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­காத பிர­தி­வா­திகள் அனை­வ­ருக்கும் அரசின் செலவில் சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிப்­பது தொடர்பில் விருப்­பமா எனவும் இல்­லையேல் கட்­டணம் செலுத்தி சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிக்க சந்­தர்ப்பம் வேண்­டுமா எனவும் தலைமை நீதி­பதி தமித் தொட்­ட­வத்த நீதி­மன்ற உரை பெயர்ப்­பா­ளரின் ஊடாக பிர­தி­வா­தி­க­ளிடம் வின­வினார்.
இதன்­போது பிர­தி­வா­திகள் ஒவ்­வொ­ரு­வ­ராக, தமக்கு தமிழ் தெரிந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரை அர­சாங்க செலவில் நிய­மிக்­கு­மாறு கோரினர்.

இந் நிலையில், முழு­மை­யாக சிங்­கள மொழியில் இருந்த குற்றப் பத்­தி­ரிகை தொடர்­பிலும் தலைமை நீதி­பதி பிர­தி­வா­தி­க­ளிடம் வின­வினார்.
அதன்­போது, 7 பிர­தி­வா­தி­களைத் தவிர ஏனைய 17 பிர­தி­வா­தி­களில் 16 பேர் தமக்கு குற்றப் பத்­தி­ரிகை தமிழில் வேண்டும் எனவும் 25 ஆவது பிர­தி­வா­தி­யான மொஹம்மட் அக்ரம் அஹ்கம் தமக்கு ஆங்­கில மொழியில் குற்றப் பத்­தி­ரிகை வேண்டும் எனவும் கோரினர்.

இத­னை­ய­டுத்து, பிர­தி­வா­திகள் சார்பில் ஆஜ­ரா­வ­தற்­காக தமிழ் தெரிந்த சட்­டத்­த­ர­ணி­களின் பட்­டி­ய­லொன்­றினை மன்­றுக்கு சமர்ப்­பிக்­கு­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரி­ஸுக்கு, நீதி­மன்றம் அறி­வித்­தது.
அத்­துடன் பிர­தி­வா­திகள் கோரும் குற்றப் பத்­தி­ரி­கையின் தமிழ் மற்றும் ஆங்­கில வடி­வங்­களை அவர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, சட்ட மா அதிபர் தரப்­புக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

மன்றில் ஆஜ­ரான சட்ட மா அதிபர் தரப்பு:
இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்­பாக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் தலை­மையில் சட்­ட­வா­திகள் குழு ஆஜ­ரா­கி­றது. இந்த குழுவில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா சிரேஷ்ட அரச சட்­ட­வா­தி­க­ளான கசுன் சரத் சந்ர, ஜய­லக்ஷ்மி டி சில்வா, லக்­மாலி திஸா­நா­யக்க,சத்­துரி விஜே­சு­ரிய, சஜித் பண்­டார ஆகியோர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்­பிலும் சட்­டத்­த­ர­ணிகள் குழு:
இவ்­வ­ழக்கில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்­காக, அதா­வது பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்­தினால் சார்­பிலும் சட்­டத்­த­ர­ணிகள் குழு பிர­சன்­ன­மா­னது.
ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நெவில் அபே­ரத்ன தலை­மையில் அக்­குழு மன்றில் ஆஜ­ரா­னது. குறித்த குழுவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரனி ஷமில் பெரேரா, சட்­டத்­த­ர­ணி­க­ளான வருண சேனா­தீர, கௌசல்யா அபே­ரத்ன டயஸ்,இந்­திக பண்­டார, அமிந்த சில்வா உள்­ளிட்டோர் அடங்­கு­கின்­றனர்.

மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரி­யாவின் உணர்­வு­புர்­வ­மான வாதம்:
பிர­தி­வா­தி­க­ளுக்கு குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்ட பின்னர், மன்றில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர, வழக்­குடன் தொடர்­பு­பட்ட விட­யங்­களை உணர்­வு­புர்­வ­மாக மன்றில் முன் வைத்தார்.
“இன்று இந்த நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்ட 25 பேரில், 24 பேருக்கு அவை கைய­ளிக்­கப்­பட்­டன. இவ்­வ­ழக்கு தொடர்பில் சிறு ஞாப­க­மூட்டல் ஒன்­றினை செய்ய வேண்டும்.

கிறிஸ்­த­வர்­களின் புனித தினங்­களில் ஒன்­றான உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று, நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய, கொழும்பு – கொச்­சிக்­கடை, மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­ல­யங்­க­ளுக்கு புதிய உடை­களை உடுத்­துக்­கொண்டு தமது பெற்­றோரின் கைகளில் தொங்­கிய வண்ணம் சென்ற சிறார்கள் ஒரு போதும் தாம் மீண்டும் திரும்­ப­மாட்டோம் என நினைத்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

தமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­துக்­காக கட­வு­ளிடம் மன்­றாடச் சென்ற பெற்­றோர்கள், தாம் மன்­றாடும் ஔிம­ய­மான எதிர்­காலம் அவர்­களை விட்டு நிரந்­த­ர­மாக சென்­று­விடும் என ஒரு கண­மேனும் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

கட­வுளை வணங்கச் சென்ற தமது சகோ­தர சகோ­த­ரி­களை அடை­யாளம் காணாமல், உடற்­பா­கங்­க­ளையே காண நேரிடும் என உற­வுகள் ஒரு­போதும் நினைத்­தி­ருக்க வாய்ப்பே இல்லை. கட­வுளை வணங்கச் சென்ற தமது உற­வுகள் கொல்­லப்­பட்­டதால், அவர்­க­ளிடம் தமது உற­வுகள் தொடர்­பி­லான நினை­வு­களும், பயங்­க­ர­வாதம் தொடர்­பி­லான கொடூ­ரமும் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்கும்.

சமா­தானம், நல்­லி­ணக்கம், சகோ­த­ரத்­து­வத்­துக்கு பாரிய அடி:
ஆம், இந்த நிலைமை மிகப் பயங்­க­ர­மா­னது. கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மத அடிப்­ப­டை­வாத குழு­வொன்று 8 இடங்­களில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடாத்­தி­யது. இவ்­வா­றான ஒரு விடயம் இலங்­கையில் நினைத்துக் கூட பார்க்க முடி­யா­தது. 30 வருட யுத்­தத்தின் பின்னர் இந் நிலைமை மிக மிலேச்­சத்­த­ன­மா­ன­தாக இருந்­தது.
2019 ஏப்ரல் 21 கிறிஸ்­த­வர்­களின் முக்­கிய நாள். அன்று அடிப்­ப­டை­வா­திகள் உயிர்­களை மட்டும் பறிக்­க­வில்லை. சிர­மத்­துடன் இலங்­கையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட சமா­தானம், நல்­லி­ணக்கம், சகோ­த­ரத்­து­வத்­தையும் சேர்த்து ஒரே நொடியில் பறித்­து­விட்­டனர்.
இந்த அடிப்­ப­டை­வா­திகள், தமது அடிப்­ப­டை­வாத கருத்தை உல­குக்கு தெரி­யப்­ப­டுத்­தவே, இந்த விஷேட நாளில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை இலக்­காகக் கொண்­டி­ருக்க வேண்டும்.

பிர­தி­வா­திகள் எந்த மதத்­தையும் சாரா­த­வர்கள்:
அடிப்­ப­டை­வாத, பயங்­க­ர­வாத வலை­ய­மைப்பு பரந்­து­பட்­டது. இந்த அடிப்­ப­டை­வா­திகள் எந்த, மத, இன குழு­வி­ன­ரையும் சார்ந்­த­வர்கள் என நினைக்­க­வில்லை. இவர்கள் ஒரு மதத்தின் உண்­மை­யான விட­யங்­களை திரி­பு­ப­டுத்தி அதனை பின்­பற்­றி­ய­வர்கள். எனவே இவர்­க­ளுக்கு என ஒரு மதம் இல்லை.

இவ்­வா­றான ஒரு சிலரின் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களால் நாம் கஷ்­டப்­பட்டு கட்­டி­யெ­ழுப்­பிய சமா­தானம், நல்­லி­ணக்கம், சகோ­த­ரத்­து­வத்தை இன்று இழந்து நிற்­கிறோம்.
இவை­ய­னைத்­தையும் கருத்தில் கொண்டே இந்த குற்றப் பத்­தி­ரி­கையை சட்ட மா அதிபர் திணைக்­களம் தயா­ரித்து முன் வைத்­துள்­ளது.

இந்த குற்றப் பத்­தி­ரிகை மிக விஷே­ட­மா­னது. இலங்கை வர­லாற்றில் இது­வரை கேள்­விப்­ப­டா­தது. காரணம் 23270 குற்­றச்­சாட்­டுக்கள் இங்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 268 பேர் தொடர்­பிலும் காய­ம­டைந்த 594 பேர் தொடர்­பிலும், அந் நிலை­மைக்கு கார­ண­மா­ண­வர்கள் என பிர­தி­வா­திகள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு பாராட்டு:
இந்த குற்றப் பத்­தி­ரி­கையை முன் வைக்க, சிறந்த முறையில் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் உள்­ளிட்ட அனைத்து விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் அவர்­க­ளது திற­மை­க­ளையும் நான் மெச்­சு­கிறேன். சில விசா­ரணை மற்றும் சாட்சி பகுப்­பாய்­வு­க­ளுக்­காக அமெ­ரிக்கா மற்றும் அவுஸ்­தி­ரே­லிய குற்ற விசா­ர­ணை­யா­ளர்­களின் உதவி கூட பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இது மிக பரந்­து­பட்ட ஒரு விசா­ர­ணை­யாக அமைந்­தி­ருந்­தது. குண்டு வெடிப்­புக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட உப­க­ர­ணங்­களை கண்­ட­றிதல், வாக­னங்­களை கண்­ட­றிதல், குண்­டு­தா­ரி­களும் பிர­தி­வா­தி­களும் பதுங்­கி­யி­ருந்த பாது­காப்பு இல்­லங்­களை கண்­ட­றிதல் உள்­ளிட்ட பகுப்­பாய்வு சாட்சித் தேடல்கள் முறைப்­பாட்­டாளர் தரப்­புக்கு மிக்க சவா­லாக அமைந்­தன.

நாட்டின் இறை­யாண்மை, தேசிய பாது­காப்பு, பிராந்­திய ஒரு­மைப்­பாட்டை பாது­காக்க சட்­டமா அதிபர் திணைக்­களம் முழு மூச்­சுடன் செயற்­படும் நிலையில், அதன் பிர­தி­ப­ல­னாக கடும் உழைப்­புக்கு மத்­தியில் இத்­த­கைய பாரிய குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தை முன் வைக்க எமது திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இலங்­கையை பயங்­க­ர­வாதம் இல்­லாத நாடாக மாற்ற, சட்ட மா அதிபர் திணைக்­களம் எந்த எல்­லைக்கும் சென்று செயற்­பட தயார்.“ என மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து பிர­தி­வா­திகள் சிலர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் மன்றில் சில விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினார்.

“இந்த விவ­கா­ரத்தில் சட்ட மா அதிபர் வர­லாற்றில் பதி­வாகும் வண்ணம் 23270 குற்­றச்­சாட்­டுக்கள் உள்ள குற்றப் பத்­தி­ரி­கையை முன் வைத்­துள்ளார். எனினும் இந்த பிர­தி­வா­திகள் அனை­வரும் தமிழ் மொழி பேசக்­கூ­டி­ய­வர்கள் என தெரிந்தும் குற்றப் பத்­தி­ரி­கையை தமிழில் முன்­வைக்­கா­தது சட்ட மா அதிபர் செய்­துள்ள மிகப் பெரிய தவ­றாகும்.
தக­வல்கள் இருந்தும் நட­வ­டிக்கை எடுக்­கா­தோரே கொலைக்கு கார­ண­மா­ன­வர்கள் :
குண்டுத் தக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்கள், காய­ம­டைந்­த­வர்கள் தொடர்பில் எமக்கும் ஆழ்ந்த கவலை உள்­ளது. எனினும் சட்ட மா அதிபர் சார்பில் அவர்­களின் உயி­ரி­ழப்பு, காயங்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் என வகுப்­புக்­களில் பங்­கேற்­ற­வர்கள் போன்றோர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர். எனினும், தாக்­குதல் தொடர்பில் தக­வல்கள் கிடைத்தும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காது மக்கள் கொல்­லப்­படும் வரை பார்த்­துக்­கொண்­டி­ருந்­தோரே கொலை­யா­ளிகள் என மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் மற்­றொரு சட்­டத்­த­ரணி, பிர­தி­வா­தி­களில் சட்­டத்­த­ர­ணிகள் இல்­லா­த­வர்­க­ளுக்கு அடுத்த தவணை வரை சட்­டத்­த­ரணி ஒரு­வரை அமர்த்த சந்­தர்ப்பம் வழங்­கு­மாறும், அதன் பின்­னரும் சட்­டத்­த­ரணி ஒருவர் இல்­லையேல் அவர்­க­ளுக்கு அரச செலவில் சட்­டத்­த­ரணி ஒரு­வரை நிய­மிக்­கு­மாறும் கோரினார். அதற்கும் நீதி­மன்றம் அனு­ம­தித்­தது.

குற்­றச்­சாட்­டுக்­களை வாசித்துக் காட்ட 6 மாத­மா­வது தேவைப்­படும் :
இத­னை­ய­டுத்து வழக்கில் 23 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளதை சுட்­டிக்­காட்­டிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றம், அவற்றை மன்றில் ஒவ்­வொரு பிர­தி­வா­திக்கும் வாசித்துக் காட்ட முனைந்தால் குறைந்த பட்சம் அதற்கு மட்டுமே 6 மாதங்களாவது தேவைப்படும் என சுட்டிக்காட்டியது.

எனவே ஒவ்வொரு பிரதிவாதிக்கும் தொடர்புடைய குற்றச்சாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து அப்பகுதியை மட்டும் அவர்களுக்கு வாசித்து காட்டுவது கால நேரத்தை மிச்சப்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியவுக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்து இது குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு நடக்கும் ஒவ்வொரு நாளிலும் பிரதிவாதிகளை மன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு முடியாத சுழலில் மின்னியல் தொழில்நுட்ப உதவியுடன் அவர்களை மன்றில் ஆஜர் செய்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் அடுத்த தவணையில் 15 ஆவது பிரதிவாதியை மன்றில் ஆஜர் செய்யவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
இந் நிலையில், பிரதிவாதிகள் அனைவரும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வழக்கின் பின்னரான நிலைமை:
இவ்வாறு வழக்கு விசாரணையின் ஆரம்ப அமர்வு நிறைவடைந்ததும், குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட 24 பிரதிவாதிகளும், நீதிமன்றின் கைவிரல் ரேகை பெறப்படும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களது கைவிரல் ரேகை பதிவுகள் பெறப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் தத்தமது சிறைச்சாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதன்போது பலர், தமக்கு கையளிக்கப்பட்ட குற்றப் பத்திரிகைகளையும் தாமாக சுமந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நீதிமன்ற அறைக்குள், பிரதிவாதிகளின் உறவினர்கள் எவரும் அனுமதிக்கப்பட்டிராத நிலையில், அவர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு வௌியே பாதை ஓரமாக கவலையுடன் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. சிறு பிள்ளைகளுடன், அவர்கள் பாதையில் பிரதிவாதிகள் சிறைச்சாலை பஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படுவதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.