கொவிட் ஜனாஸா அடக்க அனுமதிக்காக காத்திருக்கும் கிண்ணியா மையவாடி

0 409

ஏ.ஆர்.ஏ.பரீல்

கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 9.9 ஏக்கர் அரச காணியில் கடந்த 6 ஆம் திகதி முதல் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு இரா­ணுவம் கிண்­ணியா பிர­தேச சபை தவி­சாளர் கே.எம்.நிஹாரை வேண்­டி­யி­ருந்­தது. இதற்கு அமை­வா­கவே பிர­தேச சபை தவி­சாளர் மூலம் உத­விகள் கோரப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இரா­ணுவம் கடந்த 6ஆம் திகதி ஜனா­ஸாக்­களை அடக்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்த போதும் சுகா­தார அமைச்சின் அனு­மதி வழங்­கப்­ப­டாமை கார­ண­மாக தாமதம் ஏற்­ப­டு­வ­தா­கவும், இதன் பின்­ன­ணியில் அர­சியல் செல்­வாக்கு தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கள விஜயம்
கிண்­ணியா வட்­ட­ம­டுவில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள கொவிட் 19 மைய­வாடி காணியின் அபி­வி­ருத்தி தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அகில இலங்கை ஜனாஸா சங்கம் உட்­பட சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கிண்­ணி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை இம்­மாதம் 1ஆம் திகதி மேற்­கொண்­டி­ருந்­தனர். இவ்­வி­ஜ­யத்தில் அகில இலங்கை ஜனாஸா சங்கத்தின் உறுப்பினர் அப்துல் ரஷீட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேர­வையின் தேசிய தலைவர் சஹித் எம்.ரிஸ்மி, யட்டி நுவர பிர­தேச சபை உறுப்­பினர் வசீர் முக்தார், ஸம்ஸம் அமைப்பின் பணிப்­பாளர் கியாஸ் ரவூப், கண்டி தேசிய வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்தி குழு உறுப்­பினர் முஹம்மத் ரிஸ்வி, பஸ்லான் பாரூக் பௌண்­டேசன் தலைவர் பஸ்லான் பாரூக் மற்றும் அப்துல் ஹாலிக் ஆகியோர் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

கிண்­ணியா வட்­ட­மடு பிர­தே­சத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட காணியை குழு­வினர் பார்­வை­யிட்­ட­துடன் இத்­திட்­டத்­திற்கு பொறுப்­பா­க­வுள்ள இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளுடன் இத்­திட்­டத்தின் அபி­வி­ருத்தி தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். அத­னை­ய­டுத்து குழு­வினர் கிண்­ணியா பிர­தேச சபைக்கும் விஜயம் செய்­தனர். அங்கு பிர­தேச சபையின் தவி­சாளர் மற்றும் பிர­தேச செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டனர்.
இந்தக் கலந்­து­ரை­யா­டலில் திட்­டத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் அனைத்து பங்­கு­தா­ரர்­க­ளுடன் அபி­வி­ருத்தி பணிகள் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்து திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக செயல் திட்­ட­மொன்­றினை ஆரம்­பிப்­ப­தாக இணக்கம் காணப்­பட்­டது.
கிண்­ணியா பிர­தேச சபைத் தவி­சா­ளரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க வட்­ட­மடு காணியை ஜனாஸா அடக்கம் செய்யும் வகையில் செப்­ப­னிட்டு மைய­வா­டி­யாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு கள­வி­ஜயம் மேற்­கொண்ட சிவில் சமூக அமைப்­புகள் பொறுப்­பேற்றுக் கொண்­டன. இதற்­கென 43 இலட்சம் ரூபா செலவில் திட்­ட­மொன்று வடிவமைக்கப்பட்டது.

டாக்டர் அன்வர் ஹம்­தானி
கொவிட் 19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் பிர­தம இணைப்­ப­தி­காரி டாக்டர் அன்வர் ஹம்­தா­னியை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு கிண்­ணியா வட்­ட­மடு கொவிட் 19 மைய­வாடி தொடர்பில் வின­வி­யது. அவர் கருத்துத் தெரி­விக்­கையில், ‘இந்த மைய­வா­டிக்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தொழில் நுட்ப குழுவின் சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­காக சுகாதார அமைச்சுக்கு ஆவ­ணங்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இது வரை சிபா­ரிசு செய்­யப்­ப­ட­வில்லை.

தற்­போது ஓட்­ட­மா­வ­டியில் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு இட­மி­ருக்­கி­றது. இந்­நி­லை­யிலே கிண்­ணி­யா வட்­ட­மடு மற்றும் புத்­த­ளத்தில் காணிகள் மைய­வா­டிக்­காக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன’ என்றார்.

வை.எம்.எம்.ஏ. பேர­வையின் தேசிய தலைவர்
வை.எம்.எம்.ஏ. பேர­வையின் தேசிய தலைவர் சஹீத் எம்.ரிஸ்மி வட்­ட­மடு பிர­தே­சத்­துக்கு கள­வி­ஜயம் மேற்­கொண்டு மைய­வா­டிக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள காணியை பார்­வை­யிட்­டமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ‘கிண்­ணியா பிர­தேச சபையின் தவி­சா­ளரின் அழைப்­புக்­கி­ணங்­கவே வை.எம்.எம்.ஏயும் ஏனைய சிவில் சமூக அமைப்­பு­களும் கள விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டன. தவி­சாளர் மைய­வா­டிக்­கான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களைச் செய்து தரு­மாறு எங்­களைக் கோரி­யி­ருந்தார். இரா­ணு­வத்தின் அனு­மதி கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக எமக்குத் தெரி­விக்­கப்­பட்­டது.

பொது­வான வேலை­க­ளுக்கு எம்­மிடம் உதவி கோரினால் நாம் உத­விகள் செய்­வது வழக்கம். இந்த மைய­வா­டிக்கு அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அனு­மதி கிடைத்த பின்பே நாம் உத­விகள் வழங்­குவோம். பிர­தேச செய­லாளர் இன்னும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறினார். அனு­மதி வழங்­கப்­ப­டா­விட்டால் எம்மால் உத­விகள் செய்ய முடி­யாது.

மேலும் அவர் கிண்­ணியா பிர­தேச சபை வரு­மானம் இல்­லாத சபை. அத்­தோடு இச்­ச­பைக்கு அர­சாங்­கத்தின் நிதி ஒதுக்­கீ­டு­களும் இல்லை. தற்­போது அர­சாங்­கத்­திடம் பணம் இல்லை என்று தெரி­வித்தார். இந்­நி­லையில் மைய­வா­டிக்கு அனு­மதி வழங்­கப்­பட்டால் நாம் நிச்­சயம் உத­விகள் வழங்­குவோம்.

அத்­தோடு ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியைத் தவிர இறக்­காமம், புத்­தளம் உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் மைய­வா­டிகள் அமைக்­கப்­பட வேண்டும். ஒவ்வோர் மாகா­ணத்­திலும் காணிகள் இனங்­கா­ணப்­பட்டு கொவிட் 19 மைய­வா­டிகள் அமைக்­கப்­பட வேண்டும். இவ்­வி­வ­கா­ரத்தில் எமது சமூகம் அர­சியல் சுய­இ­லாபம் தேடக்­கூ­டாது.
கிண்­ணியா வட்­ட­மடு மைய­வாடி அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டால் வை.எம்.எம்.ஏ. உட்­பட சிவில் அமைப்­புகள் நிச்­சயம் உத­விகள் வழங்கும்’ என்றார்.

பிர­தேச சபை உறுப்­பினர் வசீர் முக்தார்.
கடந்த 1ஆம் திகதி கிண்­ணியா வட்­ட­ம­டு­வுக்கு கள விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்ட யட்­டி­நு­வர பிர­தேச சபை உறுப்­பினர் வசீர் முக்­தாரை விடிவெள்ளி தொடர்பு கொண்டு கிண்­ணியா வட்­ட­மடு கொவிட் 19 மைய­வாடி தொடர்­பான மேல­திக விப­ரங்­களைப் பெற்றுக் கொண்­டது. அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,

‘சவூதி தூத­ர­கத்தில் பணி­யாற்றும் கிண்­ணி­யாவைச் சேர்ந்த ஒருவர் கிண்­ணியா வட்­ட­மடு மைய­வாடி பணி­க­ளுக்கு உத­விகள் தேவைப்­ப­டு­கி­றது என அகில இலங்கை ஜனாஸா சங்­கத்தின் தலைவர் நியாஸ்தீன் சத்­தாரை வேண்­டி­யுள்ளார். அவர் சங்­கத்தின் கண்டி பிர­தி­நிதி அப்துல் ரஷீடை தொடர்பு கொண்ட நிலையில் அவர் பண உத­விகள் ஏற்­பாடு செய்வோம் என என்­னிடம் தெரி­வித்தார்.

கடந்த 6ஆம் திகதி கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் 19 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக இரா­ணுவம் அறி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. நான் கிண்­ணியா பிர­தேச சபைத் தலை­வரை தொடர்­பு­கொண்டு கிண்­ணியா வட்­ட­ம­டு­வுக்கு 6ஆம் திகதி ஜனா­ஸாக்கள் அடக்­கத்­துக்­காக கொண்டு வரப்­படும் என இரா­ணுவம் தெரி­வித்­தி­ருந்தால் நாம் அங்கு வரு­வ­தற்கு அழைப்­பிதழ் அனுப்­புங்கள் என வேண்­டினேன். எனக்கு அழைப்­பி­தழும் அனுப்­பப்­பட்­டது. எமது குழு­வி­ன­ரையும் அழைத்­துக்­கொண்டு அங்கு வரும்­படி தெரி­விக்­கப்­பட்­டது.

நாம் கடந்த 1ஆம் திகதி வட்­ட­ம­டு­வுக்கு சென்ற போது இரா­ணுவ அதி­கா­ரி­களும் அங்­கி­ருந்­தார்கள். நாம் மைய­வாடிக் காணியைப் பார்­வை­யிட்டோம். அங்கு பிர­தேச செய­லா­ளரும் வந்து சேர்ந்தார்.

நாம் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கதைத்தோம். 6ஆம் திகதி ஜனா­ஸாக்கள் அடக்­கத்­துக்­காக இங்கு கொண்டு வரப்­படும். இந்தக் காணியை மைய­வா­டிக்­காக பூர­ணப்­ப­டுத்தித் தாருங்கள் என அவர்கள் வேண்­டி­னார்கள்.

9.9 ஏக்கர் மைய­வாடி காணியை 5 கட்­டங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்து தரு­வ­தாக நாம் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் உறு­தி­ய­ளித்தோம். அவர்கள் ஏற்றுக் கொண்­டார்கள். இந்த மைய­வா­டியின் அனைத்து நிர்­வாகப் பொறுப்­பு­க­ளையும் இரா­ணு­வமே ஏற்றுக் கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில் நான் சுகா­தார அமைச்சின் கொவிட் 19 பிர­தம இணைப்­பாளர் டாக்டர் அன்வர் ஹம்­தானி மற்றும் பிர­தேச செய­லா­ள­ருடன் கதைத்தேன். இது­வரை சுகா­தார அமைச்சின் அனு­மதி கிடைக்­க­வில்லை என அவர்கள் கூறி­னார்கள். இரா­ணுவ பிரி­கே­டி­யரின் உத்­த­ர­வின்­ப­டியே மைய­வாடி பணிகள் இடம்­பெ­று­கி­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நான் கேர்­ண­லு­டனும் கதைத்தேன். சுகா­தார அமைச்சின் அனு­ம­தி­யின்றி எம்மால் பொது நிதி மூலம் இங்கு பணிகளைச் செய்ய உதவி வழங்க முடியாது என்று நான் கூறினேன்.

நான் திருகோணமலை அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு மையவாடி அனுமதி தொடர்பில் வினவினேன். சம்பந்தப்பட்ட ஆவணங்களை சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவிட்டதாகவும் இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கடந்த 3 ஆம் திகதியும் திருகோணமலை அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டேன். கடந்த 2ஆம் திகதி காலையிலே ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அடுத்த வாரமளவில் அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த மைய­வா­டிக்­கான அனு­ம­தியைக் கோரி அதற்­கான ஆவ­ணங்கள் சுகா­தார அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்டும் இது­வரை அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. பிர­தேச செய­லாளர் இரு தட­வைகள் ஞாப­க­மூட்­டியும் அனு­மதி தாம­திக்­கப்­ப­டு­கி­றது. இதன் பின்­ன­ணியில் அர­சியல் செல்­வாக்கு இருப்­ப­தாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.