இந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக சென்ற 222 இலங்கைப் பணியாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மாதவ தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மாத்திரம் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலும் இலங்கைப் பணியாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
கொலை, வாகன விபத்து, திடீர் மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயத்தைக் கருத்திற்கொண்டு இழப்பீடு பெற்றுக்கொடுப்பதற்கு, அந்தந்த நாடுகளின் முகவர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்காக, ஐந்து இலட்சம் ரூபா வரையில் இழப்பீடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, விபத்துக்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளாகி மேலும் சில இலங்கைப் பணியாளர்கள் அங்கவீனமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-Vidivelli