இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் இலங்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக மாற்றமடைந்தால் குறித்த மாகாணங்களில் மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில்,
குறித்த தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் மழை வீழ்ச்சி 75 மில்லி மீற்றர் அல்லது அதனை விடவும் அதிகரிக்கக் கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் இவ்வாறு மழை வீழ்ச்சி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தயாலத்திற்கு 40 கிலோ மீற்றரை விடவும் அதிகரிக்கக் கூடும்.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அதிகரித்த மழை வீழ்ச்சியுடன் பலத்த காற்று, இடி மின்னலும் காணப்படும்.
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்தார்.
-Vidivelli