-
சினமன்ட் கிராண்ட் குண்டுத்தாக்குதல் வழக்கில் 7ஆவது சந்தேக நபராக ரிஷாதின் பெயர்; வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
-
ஹிஷாலினி விவகாரத்திலும் கைது செய்யவுள்ளதாக மன்றுக்கு அறிவிப்பு
எம்.எப்.எம்.பஸீர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டு, அவர் தற்போது 100 நாட்களுக்கும் மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவரது வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய 16 வயதான ஹிஷாலினி உயிரிழந்த விவகாரத்திலும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் விவகாரம்:
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கவும் கட்டளையிட்டது. கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீன், ஏப்ரல் 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதிக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந் நிலையிலேயே தடுப்புக் காவல் விசாரணைகளின் நிறைவில் அவர், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் நேற்று முன்தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அமீர் அலி ஆகியோர் ஆஜராகினர்.
இந் நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவையில் 7 ஆவது சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை முன்னிலைப்படுத்துவதாக சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு அறிவித்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய, குண்டுதாரியான இன்சாப் அஹமட் என்பவருக்கு, இந்த சந்தேக நபர் (ரிஷாத்) எப்படி உதவி செய்தார் என்பது தொடர்பில் வெளிப்பட்டதாகவும் அதற்கமையவே சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை செய்து மன்றில் ஆஜர் செய்வதாகவும் சி.ஐ.டி.யினர் குறிப்பிட்டனர்.
சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் விஜேசூரிய விடயங்களை முன்வைத்தார்.
“ சினமன் கிராண்ட் தற்கொலைதாரியான இன்சாப் அஹமட்டுக்கு குளோசஸ் எனும் செப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இருந்தது. அந்த நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி சந்தேக நபர் செப்பு உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியுள்ளார். செப்பு தொடர்பிலான உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, சந்தேக நபர் பதவி வகித்த அமைச்சின் கீழ் இருந்த நிறுவனம் ஊடாக முன்னர் மூலப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய குளோசஸ் நிறுவனத்துக்கு அமைச்சின் கீழுள்ள நிறுவனம் ஊடாக செப்பு மூலத் திரவியங்களை வழங்க முடியாது. அதனை மீறி அந் நிறுவனத்துக்கு அந்த மூலப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை குறித்த அமைச்சின் மேலதிக செயலராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவர் வழங்கியுள்ளார். சந்தேக நபரின் (ரிஷாத்) தலையீட்டுடன் அது வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான நிதி பிரதானமாக குளோசஸ் நிறுவனத்தின் வருமானம் ஊடாகவே பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந் நிறுவனத்துக்கு தனியார் வங்கியொன்றின் கொழும்பு – புறக்கோட்டை கிளையில் ஒரு கணக்கு உள்ளது. அந்த கணக்குக்கு டொலர்களில் வரும் நிதி, ரூபாவுக்கு மாற்றப்பட்டு அதே வங்கியில் உள்ள பிறிதொரு நடைமுறைக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. (இதன்போது குறுக்கிட்ட நீதிவான் அந்த கணக்குகள் யாருடையது என கேள்வி எழுப்பினார். அவை குளோசஸ் நிறுவனத்தினுடையது என சி.ஐ.டி.யினர் பதிலளித்தனர்)
அவ்வாறு அவ்வங்கிக்கணக்கிலிருந்து மீளப் பெறப்பட்ட 120 இலட்சம் ரூபா பணத்தை தற்கொலைதாரியின் மனைவியான உம்மு ரசீனா என்பவரிடம் இருந்து நாம் மீட்டுள்ளோம். தற்கொலைதாரியின் சகோதரி ஒருவரிடம் இருந்து ஒரு தொகை பணமும், அந்த பணத்தை வங்கியிலிருந்து கொண்டு செல்ல பயன்படுத்திய உறையையும் கைப்பற்றியுள்ளோம்.
கடந்த 2019 மார்ச் 28 ஆம் திகதி குளோசஸ் நிறுவனம் 260 தொன் எடை கொண்ட 3 மில்லி மீற்றர் கம்பிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி கோரி, சந்தேக நபரின் அமைச்சின் மேலதிக செயலர் பாலசுப்ரமணியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்ட சி.ஐ.டி. அதிகாரிகள், அன்றைய தினமே சந்தேக நபரான ரிஷாத் பதியுதீனும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் மேலதிக செயலர் பாலசுப்ரமணியத்துக்கு அழைப்பொன்றினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் மறுநாள் 2019 மார்ச் 29 ஆம் திகதி மேலதிக செயலர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், தற்கொலை குண்டுதாரியான இன்சாப் அஹமட்டையும் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
அதன்படி அதன் பின்னர் 6 தடவைகள் குளோசஸ் நிறுவனம் செப்பு கம்பிகளை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், அதில் இரு ஏற்றுமதிக்கான பணம், புறக்கோட்டையில் உள்ள தனியார் வங்கிக் கணக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த பணமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகவும் சி.ஐ.டி.யினர் கூறினர்.
இதன்போது இவ்வளவுதானா சந்தேக நபருக்கு எதிரான சாட்சியம்? என நீதிவான் பிரியந்த லியனகே சி.ஐ.டி.யிடம் வினவினார். அதற்கு பதிலளித்த சி.ஐ.டி. பொலிஸ் அத்தியட்சர் ரந்தெனிய ஆம் என்றார்.
இதனையடுத்து குறித்த நிதிக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பு என்ன என நீதிவான் மீளவும் வினவினார்?
அதற்கு பதிலளித்த பொலிஸ் அத்தியட்சர் ரந்தெனிய, 3 மில்லி மீற்றர் கம்பி ஏற்றுமதியினால் கிடைத்த நிதியே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஏற்றுமதிக்கான வாய்ப்பை இந்த சந்தேக நபரின் தலையீட்டுடனேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் பலசுப்ரமணியம் எனும் மேலதிக செயலர் தற்போது நாட்டில் இல்லை எனவும் அவர் வெளிநாடொன்றில் உள்ளதால் அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர் விடயங்களை தெளிவுபடுத்தினர். ஒரு அமைச்சர் தனது, அமைச்சின் மேலதிக செயலாளருக்கு தொலைபேசியில் அழைத்தது குற்றமா என சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து இதனை மேலும் தெளிவுபடுத்திய சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், “சி.ஐ.டி.யினர் கூறும் இந்த குளோசஸ் நிறுவன விவகாரம் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவும் விசாரித்துள்ளது. சாட்சிப் பெறுமதிமிக்க அவ்வாணைக்குழு அறிக்கையில் அது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிகத் ெதளிவானவை. ஏன் அவற்றை சி.ஐ.டி. மன்றுக்கு முன் வைப்பதில்லை.
செப்பு வழங்காமைக்காக குளோசஸ் நிறுவனம் ஊடாக ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி கேள்விக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த செப்பு தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் கலந்துரையாடலுக்கு முன்னைய தினம், அப்போதைய ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலர் சாந்த பண்டார, மேலதிக செயலர் பாலசுப்ரமணியத்துக்கு குளோசஸ் நிறுவனத்துக்கு 500 மெட்ரிக் தொன் வழங்க பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளார். எனினும் அமைச்சு அதனை வழங்கவில்லை.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில், சந்தேக நபரான ரிஷாத் கலந்துகொள்ளவில்லை. அங்கு அமைச்சின் செயலர் மற்றும் மேலதிக செயலர் ஆகியோரே கலந்துகொண்டனர். (இதன்போது மேலதிக செயலர் என்பவர் ரிஷாத் பதியுதீனின் தனிப்பட்ட பணிக் குழுவின் உறுப்பினரா என நீதிவான் வினவினார். அதற்கு சி.ஐ.டி.யும் ரிஷாத்தின் சட்டத்தரணிகளும் இல்லை. அவர் அமைச்சின் மேலதிக செயலர். எஸ்.எல்.ஏ.எஸ். அதிகாரி. தற்போது ஓய்வுபெற்றுள்ள அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என தெரிவித்தனர்)
குளோசஸ் நிறுவனத்துக்கு ரிஷாத்தின் அமைச்சின் ஊடாக மட்டும் செப்பு விநியோகிக்கப்படவில்லை. ஆகக் கூடுதலான செப்பு ரெலிகொம் நிறுவனத்தினாலேயே அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் இந்த செப்பு அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சானது குளோசசுக்கு மட்டும் செப்பு விநியோகிக்கவில்லை. மேலும் பல நிறுவனங்களுக்கு செப்பு மூலத் திரவியங்களை விநியோகித்துள்ளது.
அமைச்சர் தனது அமைச்சின் மேலதிக செயலருக்கு தொலைபேசியில் கதைப்பதை எப்படி குற்றமாக காணலாம். அமைச்சரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் அப்போது அமைச்சரின் பிரத்தியேக செயலராவார். எனவே அவர்கள் மேலதிக செயலருடன் தொலைபேசியில் கதைப்பது எந்த வகையில் குற்றமாகும். என்ன கதைக்கப்பட்டது என்ற உள்ளடக்கத்தை வௌிப்படுத்தாமல் வெறுமனே தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டது என்பதற்காக கைது செய்து குற்றம் சுமத்துவது அநீதியாகும் என குறிப்பிட்டார்.
இதனையடுத்து மீளவும் மன்றுக்கு விடயங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட், சந்தேக நபர் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது இரு தடவைகள் இருதய மாரடைப்பு ஏற்பட்டதாகவும் எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணையளிக்க நீதிவானுக்கு அதிகாரம் இல்லாததால், விளக்கமறியல் உத்தரவை விடுக்கும் போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்ட உத்தரவையும் பிறப்பிக்குமாறு கோரினார்.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, முதலில் சி.ஐ.டி. சமர்ப்பித்த அறிக்கையில் சந்தேக நபரை பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் ஆஜர் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்து, அது தவறு எனக் கூறி அத்தியாயத்தை 7 (2) என திருத்தி முன் வைக்க ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சந்தேக நபரான ரிஷாத்தை சிறைச்சாலைகள் வைத்தியசாலையின் வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி தேவையான மருத்துவ உதவிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு பணித்ததுடன், முறைப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய அவரை வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இவ்வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஹிஷாலினி மரண விவகாரம் :
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த திங்கட்கிழமை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதனை மன்றுக்கு விடயங்களை முன் வைக்கும் போது இரு வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார்.
அத்துடன் நீதிவானின் ஆலோசனைக்கு அமைய, சிகிச்சைகளினிடையே தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக ஹிஷாலினி ெவளிப்படுத்தியதாக கூறப்படும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தற்போது வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாக கூறப்படும் வைத்தியர் ரந்திக்கவிடம் விஷேட வாக்கு மூலத்தினை பதிவு செய்யவுள்ளதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினதும் பிணைக் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டது.
இந் நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொகுப்பை மன்றில் முன் வைத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வாதங்களை முன் வைத்தார்.
“ இவ்விவகாரத்தில், ஹிஷாலினியின் சடலம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி நுவெரெலிய நீதிவான் முன்னிலையில் 2 ஆம் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. இதன்போது அங்கு ஹிஷாலினியின் தாயார், தந்தை, சகோதரர் உள்ளிட்டவர்கள் ஆஜராகி, சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியிருந்தனர்.
சடலம் மீது பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சடலம் எம்.ஆர்.ஐ., சி.ரி.ஸ்கேன் பரிசோதனைகளுக்கு முதலில் உட்படுத்தப்பட்டது. மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகள் மிக விரைவில் கிடைக்கவுள்ளன.
அதன் பின்னர், தற்போதும் சட்ட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக்கினால் வழங்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பீடு செய்து விஷேட அறிக்கை மன்றுக்கு வழங்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் தீலீப பீரிஸ் தெரிவித்தார்.
வழக்கின் முதல் சந்தேக நபரான தரகரே இந்த கடத்தல் அல்லது சுரண்டல் விவகாரத்தில் முக்கிய நபராவார். அவரே டயகமவிலிருந்து பெண்களை அழைத்து வந்து அங்கு சேவைக்கு அமர்த்தியவராவார்.
சி.ஐ.டி. தடுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அவர் இந்த தரகரை தனக்கு தெரியாது என கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் அளிக்கும் போது தெரிவித்துள்ளார். அத்துடன் பணிப் பெண்கள் தொடர்பில் தனது மாமனாரே பொறுப்பாக செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஹிஷாலினியுடன் விஷேடமாக கதைத்து பழகிய ஞாபகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ அவரது வாக்குமூலம் தொடர்பில் விசாரணை நடக்கிறது. மிக விரைவில் அவரையும் இந்த கூட்டில் ஏற்றுவோம் என்றார்.
இவ்வாறான நிலையில் இவ் வழக்கில் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாதின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோருக்கு பிணை வழங்க கோரி முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்புகள் காரணமாக விசாரணைகளில் தலையீடு செய்யவோ, சாட்சிகளை காணாமல் ஆக்கவோ முடியும் என தெரிவித்தும், பொது மக்கள் கொந்தளிப்பை காரணம் காட்டியும் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.அதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.- Vidivelli