இஷாலினி விவகாரத்தில் திட்டமிட்ட பொய்ப் பிரசாரம்
நீதிமன்றில் நிரூபிப்போம் என்கிறார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்
ஏ.ஆர்.ஏ. பரீல்
ரிசாத் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணித்த இஷாலினியின் மரணம் தொடர்பில் ஆரம்பத்தில் சாதாரண விசாரணைகள் இடம்பெற்றன. ஆனால் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தற்போது விசாரணைகள் வேறு திசைக்குத் திரும்பியுள்ளது.
இஷாலினியின் தாயாரின் பின்னணியில் சில சக்திகள் இதற்காக செயற்படுகின்றன. அவர்கள் யார் என்பதை நாம் இனங்கண்டுள்ளோம். நீதிமன்றில் நாம் அவர்களை உறுதிப்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
ஊடகவியளாலர் சமுதித்தவுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலே அவர் இவ்வாறு கூறினார்.
ரிசாத் பதியுதீனுடனான உங்கள் தொடர்புகள் என்ன? நீங்கள் அவரது உறவினரா?
நான் பல்வேறு வகையில் ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புபட்டுள்ளேன். நான் அவரது அரசியல் கட்சியின் சட்ட ஆலோசகர். அவரது குடும்பத்தின் சட்ட ஆலோசகர். இஷாலினியின் மரணம் தொடர்பான சட்டத்தரணிகள் குழுவில் நானும் ஒரு உறுப்பினர். ரிஷாத் எனது உறவினரல்ல. ரிசாத் பதியுதீனை 2002 லிருந்து எனக்குத் தெரியும். அவரது கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறேன்.
ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இறந்தார் எனக் கூறப்படுகிறது. சமூகத்தில் பேசப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது விசாரணையின் பின்பே தெரியவரும். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
இஷாலினியின் மரணம் தொடர்பில் ஆரம்பத்தில் சாதாரண விசாரணைகள் நடத்தப்பட்டன. சம்பவம் இடம்பெற்ற ஜூலை 3ஆம் திகதி பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணையின் போது குற்றவியல் விசாரணைப்பிரிவினரும் வந்தனர். கைரேகை அடையாள நிபுணர்கள் வந்தனர். இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகள் வந்தார்கள். இந்த விசாரணைகள் சம்பவம் நடந்த தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.
அன்றிலிருந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டாலும் சில தினங்களின் பின்பு விசாரணை வேறு திசைக்கு திரும்பியது. இரண்டு தினங்களின் பின்பு இந்நிலை ஏற்பட்டது. விசாரணை அரசியலுக்கு திருப்பப்பட்டது. அரசியல் நோக்குடன் சிலர் இதில் தலையிட்டார்கள். பொரளை பொலிஸ் நிலையத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் திகாம்பரம் சென்றார். மனோ கணேசன் சென்றார். வடிவேல் சுரேஷ், இராதாகிருஷ்ணன் என்போர் ஆர்ப்பாட்டங்களில் தொடர்புபட்டனர். இவர்களுக்கிடையில் அரசியல் போட்டியேற்பட்டது. இந்த விவகாரத்தை யார் சரியாக செய்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்துவதற்காக அவர்களுக்குள்ளேயே போட்டியேற்பட்டது.
தற்போதைய விசாரணைகள் தொடர்பில் உங்களுக்கு சந்தேகமுள்ளதா?
விசாரணை நடத்தப்படும் முறை தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. சந்தேகமுள்ளது. ஆரம்ப விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டது என்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது. அதன்பின்பு நடைபெறும் விசாரணைகளில் சில தரப்பினர் சமூக ஊடகங்கள் என்பன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். ஊடகங்களில் கருத்து தெரிவிக்குமாறு என்னை ரிஷாத் பதியுதீன் வேண்டிக்கொள்ளவில்லை. ரிஷாதின் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், கட்சியின் ஆதரவாளர்களே என்னை வேண்டிக்கொண்டார்கள். இவ்விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பது மக்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.
சிறுமியின் மரணத்தின் பின்பு ரிசாத் பதியுதீனை சந்தித்தீர்களா? ரிசாதை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சிக்கப்படுகிறதா?
இஷாலினியின் மரணத்தின் பின்பு நான் ரிஷாத் பதியுதீனை சி.ஐ.டி.க்குச் சென்று சந்திக்கவில்லை. அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு சென்றேன். ஆனால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடன் தொலைபேசியூடாகவாவது பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இஷாலினியின் சம்பவத்தில் ரிசாதை சம்பந்தப்படுத்தி அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டும். பாராளுமன்றத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பலர் இருக்கிறார்கள். அத்தோடு அவருடன் குரோதமாக செயற்படுபவர்கள் உள்ளார்கள். சமயத்துக்கு எதிரான தரப்பினர் இருக்கிறார்கள்.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். அமைச்சர்கள் உள்ளார்கள். அவர்கள் இதுபற்றி பேசியும் உள்ளார்கள். குரோதமாக அவர்கள் பேசுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ரிசாதின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்ததும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்ததும் நாடகமொன்றா?
ரிஷாத்தின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக கையுயர்த்தியதும் கம்மன்பிலவின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததும் நாடகமல்ல. அவர்களுக்கு சுயாதீனமாக செயற்பட முடியும். அவர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு வாக்களித்த மக்கள் இவர்களுக்கு எதிராகவே பேசியுள்ளார்கள். கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
ரிஷாத் பதியுதீனை நான் சி.ஐ.டி.யில் இரு தடவைகள் சந்தித்துள்ளேன். அப்போது ரிஷாத் பதியுதீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தீர்மானத்தை எழுத்து மூலம் அறிவிக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். கட்சியின் தீர்மானத்தை மீற வேண்டாம் என்று அறிவிக்கும்படியும் கூறினார். கட்சியின் அரசியல் உயர் பீடம் அவர்களுக்கு அறிவித்த போதும் அவர்கள் கட்சியின் தீர்மானத்தையும் மீறி வாக்களித்தார்கள்.
இஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?
இஷாலினியின் மரணம் தொடர்பில் அவர் வாழ்ந்த சூழல் பற்றி ஆராய்ந்து கூறவதென்றால் இது ஒரு கொலையல்ல. குறிப்பாக பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்ற அறிக்கையின்படி இது கொலையல்ல. சிலர் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததன் பின்பே விசாரணைகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இஷாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது வாக்குமூலமொன்று டாக்டருக்கு வழங்கியுள்ளார். அதில் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். அதனாலேயே பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெறாமல் இருந்திருக்கலாம். இஷாலினி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக டாக்டரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மூடி மறைக்க முயற்சிக்கப்படுகிறதா?
ரிஷாத் பதியுதீன் தரப்பினரோ அல்லது நானோ இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு ஒருபோதும் முயற்சிக்கவுமில்லை. சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் நிலைமையே இன்றும் உள்ளது.
இஷாலினியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளாமை சந்தேகத்துக்குரியதாக உள்ளதல்லவா?
இஷாலினி தீக்காயங்களுக்குள்ளாகி மரணிக்கும் வரை 12 நாட்களுக்குள் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெறாமை சந்தேகத்துக்கு இடமென்றால் அது தொடர்பில் விசாரணை நடத்தலாம். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக டாக்டரின் வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டில் அட்டையுள்ளது. B அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் கண்டேன். அவ்வறிக்கையிலும் அவர் அனுமதியின்போது சுயநினைவுடன் இருந்ததாகவும் பேசக்கூடிய நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் 6.20க்கு இடம்பெற்றுள்ளது. ஆனால் வைத்தியசாலைக்கு 8.30க்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஏன் இந்த தாமதம்-?
இந்தச் சம்பவம் 6.20க்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவது தவறு. 6.45க்கே இடம்பெற்றுள்ளது. அதற்கு சி.சி.ரி.வி. பதிவு ஆதாரமாக உள்ளது. 7.01க்கு 1990க்கு (அம்புலன்ஸ்) அழைப்பு விடுக்கப்பட்டது. 7.10க்கு அம்பியுலன்ஸ் வந்தது. ஆனால் 8.30க்கே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவது தவறான பிரசாரமாகும். 1990ஐ அழைத்த பதிவு உள்ளது. அம்பியுலன்ஸ் அறிக்கை உள்ளது. இவற்றை எவராலும் மறைக்க முடியாதல்லவா? இது தொடர்பில் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. என்றாலும் ஊடகங்கள் எதிர்தரப்பின் கருத்துக்களையே பிரசாரம் செய்கின்றன.
ரிசாதின் மாமனார் இஷாலினியின் பெயரை வைத்தியசாலைக்கு இஷானி என்று ஏன் வழங்கியுள்ளார்?
இஷாலினியின் பெயரை இஷானி என வைத்தியசாலைக்கு ரிசாதின் மனைவியின் தந்தை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பெயர் வைத்தியசாலையில் எவ்வாறு எழுதப்பட்டது என்பது எமக்குத் தெரியாது. பெயரில் ஒரு எழுத்து தவறவிடப்பட்டுள்ளமையா இங்குள்ள பாரிய பிரச்சினை? ரிசாத் வீட்டில் இஷானி என்றே அழைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரே வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.
சிறுமிக்கு ரிஷாதின் வீட்டில் அநியாயங்கள் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப் பட்டுள்ளதே?
இஷாலினிக்கு ரிசாத்தின் வீட்டில் ரிசாத்தின் மனைவியினால் அநியாயங்கள் செய்யப்பட்டதாகவும், அவரது தலை கழிவறை கொமட்டுக்குள் திணிக்கப்பட்டதாகவும் யார் கூறினார்கள்? அதை கண்டவர்கள் யார்? அந்தப் பிள்ளை இருந்த அறை பற்றி தவறான கருத்தே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறை நாய் கூண்டு என்று கூற முடியுமா? பத்திரிகைகளிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாலினியின் அறை வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்ததா?
இஷாலினியின் அறை வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கவில்லை. ரிசாதின் வீடு சுற்றுவர மதில் கட்டப்பட்டதாகும். வீட்டின் சமையலறைக்கும் இஷாலினியின் அறைக்குமிடையில் மத்தியில் கதவு ஒன்று உள்ளது. இதனாலேயே வீட்டுக்கு வெளியே அந்த அறை உள்ளதாகக் கூறுகிறார்கள். அறையில் காற்றாடி இருக்கவில்லை, மின் இணைப்பு இருக்கவில்லை என்று கூறப்படுவது முழுமையாக பொய்யானதாகும். ஊடகங்களே இவ்வாறு பொய் பிரசாரம் செய்கின்றன.
வீட்டுக்குள் மண்ணெண்ணெய் இருந்ததாகவும், லைட்டர் இருந்ததாகவும் பெரிது படுத்தப்படுகிறது. வீடுகளில் இவை பாவிக்கப்படுகின்றன. மண்ணெண்ணெயை ரிசாத் வீட்டாரால் மறைத்திருக்க முடியுமல்லவா? அவ்வாறு இடம்பெறவில்லையே.
ரிசாதின் வீட்டில் தனக்கு அடிப்பதாக சிறுமி தொலைபேசியூடாக தாயாருக்கு தெரிவித்துள்ளார்.தாயார் 3 நாட்களில் வருவதாக கூறியுள்ள நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது சந்தேகத்துக்கு உரியதல்லவா?
இஷாலினி தனக்கு ரிசாதின் வீட்டில் அடிப்பதாக தனது தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்தபோது தாயார் தான் அங்கு வருவதாக தெரிவித்து 3 நாட்களில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று கூறுவது சந்தேகத்துக்கு உரியது தான். நாமும் சந்தேகப்படுகிறோம். இதற்கு சுயாதீன விசாரணை நடத்தப்பட் வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த தொலைபேசி உரையாடல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தனக்கு அடிக்கிறார்கள் என்று கூறியிருந்தால் அதுவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பிள்ளையின் தாயார் ஆரம்பத்தில் பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்று அளித்துள்ளார். ஆனால் தற்போது அவர் ஊடக மாநாடுகளில் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்த ஊடக மாநாடுகளை யார் நடாத்துகிறார்கள்? என்பதை நாம் நீதிமன்றில் தெரிவிப்போம்.
இஷாலினி தற்கொலை செய்து கொண்டாரா? அதற்கான காரணம் என்ன? அது தொடர்பான சுயாதீன விசாரணையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் சந்தேகம் ஏற்படுவது சாதாரணமானதாக இருக்க வேண்டும்.
இஷாலினியின் தாயார் இப்போதே சந்தேகங்களை வெளியிடுகிறார். ஆரம்பத்தில் வெளியிடவில்லை. தாயாரின் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களை இனங்காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறானவர்களை என்னால் இப்போது பெயரிட்டு கூறமுடியாது.
ரிசாதை மாத்திரமல்ல எவரையும் சந்தேகிக்க முடியும். பல வழக்குகளில் பலர் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவ்விவகாரத்தில் ரிசாத் சந்தேக நபராக குறிப்பிடப்படவில்லை.
ரிசாதின் வீட்டிர் 11 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள். இருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவிக்கிறார்களே?
ரிசாதின் வீட்டில் 11 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுவது எப்படியென்று தெரியவில்லை இதை பொலிஸாரே தெரிவிக்க வேண்டும். இதனை நான் முழுமையாக மறுக்கிறேன். தரகர் சங்கரின் மகளும் ரிசாதின் வீட்டில் வேலை செய்துள்ளார். இந்த வீட்டில் பணிபுரிந்த எவரும் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகவில்லை. இருவர் கொலை செய்யப்பட்டார்கள் என்றால் அவர்கள் எங்கு? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட வேண்டும். ஊடகங்களே தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. ஊடகங்களுக்கு இவ்வாறான தவறாக பிரசாரங்களை வழங்க சில தரப்பினர் உள்ளனர். அனுசரணை வழங்குகிறார்கள். இது சூழ்ச்சியாகும். இவர்கள் யார் என்பதை நாம் வெளிப்படுத்துவோம். அதற்கான சாட்சியங்கள் உள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது இவை வெளிப்படுத்தப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்குபவர்கள் இருக்கிறார்கள். தகவல்கள் எம்மிடம் உள்ளன.
ரிசாதின் சகோதரர் மொஹமட் ஹனீப் 2007 இலிருந்து 2016வரை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன அல்லவா?
ரிசாதின் மொஹமட் ஹனீப் என்ற சகோதரர் 2007 இலிருந்து 2016 வரை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஊடகங்கள் தெரிவிப்பது பச்சைப் பொய்யாகும். ரிசாதுக்கு இந்தப் பெயரில் சகோதரர் ஒருவர் இல்லை. இது தவறான செய்தியாகும். டாக்டர் ஷாபியின் கருத்தடை விவகாரம் போன்ற பொய்யான பிரசாரமே இது. இப்படி பொய்யான செய்திகள் வெளியிடுவது தவறு. இதற்காக நாம் நீதிமன்றம் செல்வோம். அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.
இஷாலினியின் தாயார் தனது மகள் எவருடகும் தொடர்பு வைத்திருக்கவில்லை எனக் கூறியுள்ளாரே?
எந்தவொரு தாயாரும் தனது மகள் எவருடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றே கூறுவார். இதற்கு இஷாலினியின் தாயார் விதிவிலக்கல்ல. அனைத்து விடயங்களும் பூரண விசாரணைகளின் பின்பே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சுயாதீனமான சாதாரணமான விசாரணை நடாத்தப்பட வேண்டும். ஆனால் இஷாலினியின் தாயார் ஊடக மாநாடுகளில் முஸ்லிம்கள் பற்றியே கூறுகிறார். பிரேத பரிசோதனை நடத்தியவர் முஸ்லிம் என்கிறார். முஸ்லிம்கள் என்பதால் தனக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவிக்கிறார்.
ஊடகங்கள் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ரிசாத்திடமோ, மனைவியிடமோ சட்டவிரோதமான காணி உறுதிகள் இல்லை. சட்டவிரோதமாக அவர் காணிகளைப் பெற்றுக் கொள்ளவுமில்லை.
ரிசாத் பதியுதீனும் அவரது சகோதரர் ரியாஜும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதல்லவா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிசாத் பதியுதீனுக்கும், ரியாஜ் பதியுதீனுக்கும் எந்த தொடர்புமில்லை. நான் பொறுப்புடன் கூறுகிறேன். இத்தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை வாசித்துப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக இவ்வாறு குற்றம் சுமத்த முடியாது.
இவர்கள் இருவரையும் விட இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் இருக்கிறார்கள். ஆணைக்குழு அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள். சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்காகவே ரிசாத், ரியாஜ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. – Vidivelli