நாடு மிக மோசமானதொரு மருத்துவ நெருக்கடியை நோக்கி நகர்வதாக கடந்த சில தினங்களாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்ற நிலையில் அதன் யதார்த்தங்களை நாம் இப்போது உணரத் தொடங்கியுள்ளோம். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள அரச வைத்தியசாலைகள் கொவிட் 19 தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சில தனியார் ஹோட்டல்களிலும் இதே நிலைமை அவதானிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3 ஆம் திகதி மாத்திரம் 82 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய தினம் 74 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நிலைமையின் பாரதூரத்தை விளக்குகிறது. கடந்த மாதத்தில் சராசரியாக தினமும் 50 மரணங்கள் பதிவான நிலையில் தற்போது திடீரென 70 முதல் 80 பேராக மரணங்கள் அதிகரித்துள்ளன. முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி மஜ்மா நகரிலும் கடந்த சில தினங்களாக அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் இணையவழியாக உரையாற்றிய ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ், அடுத்து வரும் மாதங்கள் இலங்கைக்கு ‘மிக அபாயமிக்கவை’ என எச்சரித்திருந்தார். தான் ஒரு இலங்கையன் என்ற வகையில் இதனைக் கூறுவது தனது பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது கூற்றுப்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் கொவிட் 19 டெல்டா திரிபின் பரவல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டெல்டா திரிபு ஏற்படுத்திய பாதிப்பினை நாம் ஊடகங்கள் வாயிலாக கண்டுள்ளோம். அதே நிலைமையின் சாயல்களை இப்போது இலங்கையில் காண முடிகிறது. வைத்தியசாலைகளில் கட்டில்களின்றி மக்கள் தரைகளிலும் வெளி ஓடைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாதாரண மருத்துவ விடுதிகளுக்கும் கொவிட் தொற்றாளர்களுக்கான விடுதிகளுக்குமிடையில் எந்தவித்தியாசமுமின்றி அனைவரும் ஒன்றாக தங்க வைக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஆபத்தான நிலையிலும் நாட்டில் சகல விதமான போக்குவரத்துகள், அரசாங்க மற்றும் தனியார் அலுவலக செயற்பாடுகள், வியாபாரங்கள், பாரிய ஆர்ப்பாட்டங்கள் என அனைத்தும் நடந்த வண்ணமே உள்ளன. சுமார் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசியேனும் செலுத்தப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையிலும் பெருமையிலும் அரசாங்கம் இருப்பது தெரிகிறது. எனினும் தடுப்பூசி ஏற்றுவதால் மாத்திரம் டெல்டா திரிபிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என நம்புவது அறியாமையாகும். தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் உரிய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதன் பலனைப் பெற முடியும். துரதிஷ்டவசமாக மக்கள் தற்போது இது விடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கின்றமை கவலையளிக்கிறது.
குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் ஒன்றுகூடல்களும் திருமண நிகழ்வுகளும் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களில் 100 பேர் மாத்திரமே தொழுகைக்காக ஒன்றுகூடலாம் என்ற விதிமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகள் கூறுகின்றன. இது குறித்து பாதுகாப்புத் தரப்பினால் வக்பு சபைக்கும் முறையிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பள்ளிவாசல்களை மூட வேண்டிய நிலை ஏற்படக் கூடும். எனவேதான் நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
நாம் முன்னர் பல தடவைகள் கூறியதைப் போன்று அரசாங்கம் கொவிட் 19 தொற்றிலிருந்து தனது மக்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது என்பதே யதார்த்தமாகும். தமது அரசியல் நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதிலும் எதிரிகளைப் பழிவாங்குவதிலும் சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டுவதிலும் காட்டிய அக்கறையை கொவிட் விடயத்தில் காட்டியிருந்தால் நிச்சயமாக இந்தச் சிறிய தீவை கொரோனா எனும் கொடிய நோயிடமிருந்து எப்போதோ பாதுகாத்திருக்க முடியும். எனினும் நாட்டின் தலைவர்களின் தூய்மையற்ற, நீதியற்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் அவர்களுக்கு அழிவுகளையே தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களை ஒருபுறம் வைத்துவிட்டு, இராணுவத்தின் கைகளில் மாத்திரம் கொவிட் தடுப்பு நிர்வாக பொறுப்புகளை ஒப்படைக்காது அனுபவம்வாய்ந்த சுகாதார நிபுணர்களையும் இணைத்துக் கொண்டு கொவிட் எனும் இந்தப் பாரிய சவாலிலிருந்து நாட்டை பாதுகாக்க முன்வர வேண்டும். இன்றேல் பேராசிரியர் பீரிஸ் எச்சரித்தது போன்று நாம் அனைவரும் பாரிய அனர்த்தம் ஒன்றுக்கே முகங்கொடுக்க வேண்டி வரும். அவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.- Vidivelli