மீண்டும் கொவிட் பரவல் அபாயம்; பொறுப்புடன் நடந்து கொள்க
சுகாதார வழிகாட்டல்களை மீற வேண்டாம் என்றும் உலமா சபை கோரிக்கை
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்ற நிலையில், முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் தற்போதைய கட்டத்தில் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்றி நடப்பதும் மிகவும் அவசியமானதாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, மரண வீடுகளிலும், திருமண வைபவங்களிலும் பொது இடங்களிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், பௌதீக இடைவெளி பேணுதல், அநாவசியமாக வெளியில் செல்லாதிருத்தல் போன்ற விடயங்களில் நாம் மிகக் கவணமாக இருத்தல் வேண்டும்.
சுகாதார அமைச்சின் 2021.07.28 ஆம் திகதிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை அனுமதிக்கப்படும் நோயளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக் குறையும் ஏற்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது எமது அன்றாட விடயங்களை மேற்கொள்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் மரண வீடுகளிலும், திருமண வைபவங்களிலும், பொது இடங்களிலும் மேற்படி தரப்பட்டிருக்கும் வழிகாட்டல்களுக்கும் நிபந்தனைகளுக்கும் மாற்றமாக செயற்படுகின்ற விடயம் அன்றாடம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இவ்விடயங்களில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் சுகாதார அமைச்சு, வக்பு சபை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியன வழங்கியுள்ள வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற ஊக்குவிக்கும் விதமாகவும், கவனயீனமாக செயற்படும் போது ஏற்படும் விபரீதங்களை எடுத்துக்காட்டியும் இவ்வார குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கையின் மொத்த கொவிட் 19 உயிரிழப்புகளில் முஸ்லிம்களிள் வீதம் 40 ஆக உயர்ந்துள்ளதாக முஸ்லிம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார். இலங்கையில் 10 வீத சனத் தொகையைக் கொண்ட முஸ்லிம்கள் கொவிட் மரணத்தில் 40 வீதமாக உள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் மத்தியில் நீரிழிவு, இதய நோய்கள், உடல் பருமன் அதிகரிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதிகரித்து காணப்படுவதால் கொவிட் தொற்றினால் மரணிக்கும் அபாயம் அதிகம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்கயில் அதிகம் ஒன்றுகூடுவதை முடிந்தளவு தவிர்த்து வீடுகளில் அமல்களில் ஈடுபடுவது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் 1850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதற்கமைய இது வரையில் 303 682 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 273 496 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 25 928 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று முன்தினம் 63 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 35 ஆண்களும் , 28 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4258 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் ஓட்டமாவடி மஜ்மா நகரில் 12 கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதுடன் நேற்று மாலை வரை மொத்தமாக 1182 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli