மகளை வைத்து வியாபாரம் செய்த தாய்

பணம் கொடுத்து அனுபவித்த முக்கிய புள்ளிகள்

0 668

எம்.எப்.எம்.பஸீர்

மத, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்­களால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட இலங்­கையில், இன்று பதி­வாகும் சம்­ப­வங்கள் எமது சமூக கட்­ட­மைப்பை மீளாய்வு செய்ய வேண்­டிய நிலையை உணர்த்­து­கி­றது.

சமூ­கத்தின் பல்­வேறு மட்­டங்­களை சேர்ந்­தோரால், பல்­வேறு பதவி நிலை­களை கொண்­டோரால் 15 வயது சிறுமி ஒருவர் இரக்­கமே இன்றி பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவம் சமூக கட்­ட­மைப்பை மீளாய்வு செய்ய வேண்­டி­யதன் அவ­சி­யத்தை மீளவும் உணர்த்தி இருக்­கின்­றது.

சிறுவர் முதல் முதி­ய­வர்கள் வரை இணை­யங்­களில் காலத்தை கழிக்கும் இந்த கால கட்­டத்தில், அதே இணையத் தளத்தின் ஊடாக ஒரு சிறு­மியை பலரின் பாலியல் தேவைக்கு விற்­பனை செய்த மன­சாட்சி அற்­ற­வர்­களும், அச்­சி­று­மியை பணம் பெற்று வாங்கி பலாத்­காரம் செய்த கொடூ­ரர்­களும் இந்த சமூ­கத்தில் ஒரு­வ­ராக போலி முகத்­தி­ரை­க­ளுடன் வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள்.

பொலிஸ் விசா­ர­ணை­களின் ஊடாக அவர்­களின் முகத் திரை கிழிக்­கப்­பட்டு வரும் நிலையில், சமூக கட்­ட­மைப்பில் சிறு­வர்­க­ளுக்­கான பாது­காப்பு தொடர்பில் மீள யோசிக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. காரணம், இது­வரை முகத்­திரை கிழிக்­கப்­பட்­ட­வர்கள் பலர் சமூ­கத்தில் மதத் தலை­வர்­க­ளாக, பிர­பல வர்த்­த­கர்­க­ளாக, மக்­களை காக்கும் பொலி­ஸா­ராக, உயிர் காக்கும் வைத்­தி­யர்­க­ளாக வலம் வந்­த­வர்கள்.

அது ஒரு இணையத் தளம். பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெண்­க­ளையும் சிறு­மி­க­ளையும், கடையில் கொள்­வ­னவு செய்யும் பொருட்­களை போல விலை­யிட்டு விற்கும் ஓர் அசிங்­க­மான இடம்.

அவ்­வி­ணை­யத்­தளம் ஊடாக சிறுமி ஒருவர் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக கடந்த ஜூன் 7 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவல் ஊடாக அறிந்­துள்ளார் கல்­கிசை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி.

அந்த தக­வ­லுக்கு அமைய பொலிஸார் கல்­கிசை பகு­தியில் தொடர்­மாடி ஒன்றை சோத­னைக்கு உட்­ப­டுத்தி, அங்கு பாலியல் அடி­மை­யாக வைக்­கப்­பட்­டி­ருந்த 15 வய­தே­யான சிறு­மியை மீட்­டனர். இது தொடர்பில் ரஜீவ் எனும் சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­தனர்.

இலங்­கையில் பல்­வேறு சிறுவர் துஷ்­பி­ர­யோக, பாலியல் பலாத்­கார சம்­ப­வங்கள் இதற்கு முன்­னரும் பதி­வா­கி­யி­ருந்த போதும், இணையத் தளம் ஊடாக சிறுமி ஒருவர் பொது வெளி­யி­லேயே விற்­பனை செய்­யப்­ப­டு­கிறார் எனும் விடயம் அதிர்ச்­சி­க­ர­மாக இருந்­தது.

இந் நிலையில் கல்­கிசை பொலிஸார் கைது செய்த ரஜீவ் எனும் சந்­தேக நபரை மொறட்­டுவை நீதி­மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்க நட­வ­டிக்கை எடுத்த பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

எனினும் இந்த சம்­ப­வத்தின் பார­தூரத் தன்­மையை ஆரய்ந்த பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, இந்த விவ­காரம் தொடர்பில் ஆழ­மாக விசா­ரணை செய்­யு­மாறு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்­தி­யட்சர் தர்­ஷிகா குமா­ரி­யிடம் பொறுப்­ப­ளித்தார்.

தர்­ஷிகா குமாரி பல வரு­டங்கள் சி.ஐ.டி.யில் கட­மை­யாற்­றிய மிகச் சிறந்த விசா­ர­ணை­யா­ளர்­களில் ஒருவர். பல வரு­டங்­க­ளாக சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசா­ரணைப் பிரிவின் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை வழி நடாத்­தி­யவர். அதன்­போதும் பல்­வேறு ஆபாச, துஷ்­பி­ர­யோக இணை­யத்­த­ளங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுத்­தவர். இந் நிலை­யி­லேயே தனக்கு கைய­ளிக்­கப்­பட்ட இந்த 15 வயது சிறுமி விவ­கா­ரத்­தினை விசா­ரணை செய்­வ­தற்­கான குழுவை, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்­பி­ர­யோக தடுப்பு பணி­ய­கத்தின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மனோஜ் சம­ர­சே­க­ரவின் கீழ், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்­தி­யட்சர் தர்­ஷிகா குமாரி அமைத்தார்.

அந்த பொலிஸ் குழு தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது. முதலில் அப்­பொலிஸ் குழு பாதிக்­கப்­பட்ட 15 வய­தான சிறு­மி­யிடம் நீண்ட வாக்கு மூலத்தை ஆறு­த­லாக பெற்­றுக்­கொண்­டது. அச்­சி­று­மியின் கையி­லி­ருந்த கைய­டக்கத் தொலை­பேசி, அத் தொலை­பே­சியில் பதி­வா­கி­யி­ருந்த தொலை­பேசி இலக்­கங்கள், வட்ஸ் அப் கணக்­குகள் என ஒன்று விடாது அனைத்­தையும் நோண்­டி­யது. அப்­போ­துதான் அதிர்ச்­சிக்கு மேல் அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

சிறு­மியின் தாயின் கைது:
இந்த விசா­ர­ணை­களில் முதலில் குறித்த சிறு­மியின் தாயை விசா­ர­ணை­யா­ளர்கள் கைது செய்­தனர். அது தனது மகளை சரி­வர கவ­னிக்­காமல் அவளை கொடூர நிலைக்கு உட்­ப­டுத்­தி­ய­மைக்­காகும். 30 வய­து­க­ளையே உடையே அந்த சிறு­மியின் தாயிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது, அவர் முதலில் கைது செய்­யப்­பட்ட ரஜீவ் எனும் சந்­தேக நப­ருடன் தகாத உற­வினை பேணி­யவர் என்­பது தெரி­ய­வந்­தது. அத்­துடன் மேல­திக விசா­ர­ணை­களில், இந்த பாலியல் பலாத்­கார சம்­ப­வத்­துக்கு தாய் உடந்­தை­யாக இருந்தார் என்­பது வெளிப்­படும் போது பொலி­ஸாரால் நம்ப முடி­ய­வில்லை.

ஆம், தனது 15 வயது மகளை, தனது தங்கை எனக் கூறி ரஜீ­விடம் அந்த தாய் கைய­ளித்­துள்­ளமை விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­டது. அத்­துடன் மகளை இணை­யத்தில் விற்­பனை செய்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களும் தாயின் ஒத்­து­ழைப்­புடன் தான் இடம்­பெற்­றுள்­ளமை என்­பது மிக அதிர்ச்­சி­க­ர­மா­னது.

தற்­போது இரு மாத கர்ப்­பி­ணி­யான அந்த தாய்க்கு அவ­ரது கர்ப்­பிணி நிலை மற்றும் கொவிட் பரவல் சூழல் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி நீதி­மன்றம் நேற்று முன் தினமே (7) பிணை­ய­ளித்­தி­ருந்­தது. சிறு­மியின் தாயாரும் இணையம் ஊடாக இவ்­வாறு பாலியல் தேவை­க­ளுக்கு பணத்­துக்­காக விற்­கப்­ப­டு­பவர் என தெரி­ய­வந்­தது. தாயும் சிறு­வ­ய­தி­லேயே பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு முகம் கொடுத்­துள்­ள­மையும் அவ்­வி­சா­ர­ணை­க­ளி­லேயே வெளிப்­பட்­டது.

சட்டம் சொல்­வ­தென்ன?
1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக, இலங்­கையின் தண்­டனைச் சட்டக் கோவையில் கொண்­டு­வ­ரப்­பட்ட மாற்­றங்கள் பிர­காரம் 16 வய­தினில் குறைந்­த­வர்கள் சிறு­வர்­க­ளாக கரு­தப்­படும் நிலையில் அவர்­களின் விருப்­பத்­து­டனோ விருப்பம் இல்­லா­மலோ பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது, பாலியல் பலாத்­கார குற்­ற­மாக கரு­தப்­ப­டு­கி­றது. எனவே இங்கு பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் வயதை அடிப்­ப­டை­யாக கொண்டு சிறுவர் பாலியல் பலாத்­கார குற்­ற­மாக கருதி விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

உட­ல­மைப்­பி­லேயே சிறுமி என்­பதை கண்­டு­கொள்­ளலாம்:
இங்கு பாதிக்­கப்­பட்ட சிறுமி, பார்த்த பார்­வைக்கே சிறிய வயதை உடை­யவர் என்­பதை கண்­டு­கொள்ள முடி­யு­மான உட­ல­மைப்­பையே கொண்­டுள்­ள­தாக இந்த விவ­கார விசா­ர­ணை­களை மேற்­பார்வை செய்து அதற்­கான ஆலோ­ச­னை­களை வழங்கும் கொழும்பு மேல­திக நீதிவான் லோச்­சனீ அபே­விக்­ரம தெரி­விக்­கின்றார். பொலிஸார் குறித்த சிறு­மியை நீதி­வானின் மேற்­பார்­வைக்­காக அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அறையில் கடந்த வாரம் ஆஜர் செய்­தனர். இதன்­போதே நீதிவான் அதனை அவ­தா­னித்து, இந்த விட­யத்தை பின்னர் திறந்த மன்றில் குறிப்­பிட்டார்.

அதனால் அச்­சி­று­மியை கொள்­வ­னவு செய்த எவரும் அவர் சிறுமி என நினைக்­க­வில்லை என்று கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது பொலி­ஸாரின் வாத­மாகும்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள்
இது­வரை பொலி­ஸாரால் சுமார் 34 சந்­தேக நபர்கள் இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் பிக்கு, அர­சி­யல்­வாதி, வைத்­தியர் முதல் கப்பல் கெப்டன், பொலிஸ் அதி­காரி என பல்­வேறு நிலை­களை உடை­ய­வர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
இந் நிலையில், சந்­தேக நபர்­களின் சமூக அந்­தஸ்து, பதவி நிலை­களை பார்க்­காது அனை­வ­ரையும் கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது­வரை கைது செய்­யப்­பட்ட பலரை பார்க்கும் போது, பெரும்­பா­லா­ன­வர்கள் பெண் பிள்­ளை­களின் தந்­தை­யாவர்.
மிஹிந்­தலை பிர­தேச சபை உப தலைவர், மாணிக்கக் கல் வர்த்­தகர், வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றிய இரு­தய சத்­திர சிகிச்சை நிபுணர் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்­களை வீசி சிறு­மியை பலாத்­காரம் செய்­த­வர்­களில் சிலர் என்­பது நீதி­மன்­றத்தில் விசா­ர­ணை­யா­ளர்­களால் கூறப்­பட்­டது.

இவர்­களை விட இவர்­க­ளுக்கு சிறு­மியை விநி­யோ­கித்­த­வர்­களும் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் மேலும் பலர் தேடப்­ப­டு­கின்­றனர்.

இரு­தய சத்­திர சிகிச்சை நிபுணர் கைது
இந்த விவ­கா­ரத்தில், குறித்த சிறு­மியை பணம் கொடுத்து பெற்று பலாத்­காரம் செய்த குற்­றச்­சாட்டில், பிர­பல இரு­தய சத்­திர சிகிச்சை நிபு­ண­ரான லெப்­டினன் கொமாண்டர் தரத்­தி­லுள்ள வைத்­தியர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சாலை, ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சாலை, இரத்­ம­லானை மற்றும் கொத்­த­லா­வலை பாது­காப்பு கல்­லூரி வைத்­தி­ய­சாலை ஆகி­ய­வற்றில் கட­மை­யாற்றும் 41 வய­தான குறித்த வைத்­தியர், கொழும்பு மேல­திக நீதிவான் லோச்­சனீ அபே­விக்­ரம முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது அவரை இன்று 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­தரவிட்டார்.

இந் நிலையில் குறித்த வைத்­திய நிபுணர் கடற்­படை வைத்­திய சேவையில் இருந்து இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கடற்­படை அறி­வித்­துள்­ளது. கடற்­படைத் தள­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய, குறித்த வைத்­தியர் இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கடற்­படை பேச்­சாளர் கெப்டன் இந்­திக டி சில்வா கூறினார்.

சிக்­கிய பிக்கு:
இந் நிலையில் விஷேட பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் குறித்த சிறு­மியை ரஜீவ் எனும் சந்­தேக நபர் முதலில் விற்­பனை செய்ய ஆரம்­பித்­துள்ளார். பின்னர் பலர் இவ்­வ­லை­ய­மைப்பில் இணைந்­துள்­ளனர்.

தலை நகரை அண்­மித்த ஒரு ஊரின் விகாரை ஒன்­றி­லுள்ள பெளத்த பிக்கு, 50 ஆயிரம் ரூபா­வுக்கு இச்­சி­று­மியை பெற்று பாலியல் பலாத்­காரம் செய்­துள்ளார். விசா­ர­ணை­களில் இந்த விடயம் தெரி­ய­வ­ரவே முதல் கட்­டத்­தி­லேயே பொலிஸார் அவரைக் கைது செய்­தனர்.

மாலைதீவு முன்னாள் நிதி இரா­ஜாங்க அமைச்சர் :
இந்த சிறுமி பாலியல் பலாத்­கார விவ­கா­ரத்தில், பணம் கொடுத்து பெற்று பலாத்­காரம் செய்த குற்­றச்­சாட்டில், மாலை­தீவின் முன்னாள் நிதி இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அவர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

40 வய­தான மாலை­தீவின் முன்னாள் நிதி இரா­ஜாங்க அமைச்சர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் உயர் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தங்­கி­யி­ருப்­பவர். கொள்­ளு­பிட்டி மரீனா பீச் ஹோட்­ட­லுக்கு அழைத்து சென்று சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்ய அவர் வழங்­கிய பணம் 40 ஆயிரம் ரூபா­வாகும்.

இணை­யத்­த­ளங்கள் தொடர்­பி­லான அதி­ரடி நட­வ­டிக்கை:
இவ்­வா­றான நிலையில் தான் சிறு­வர்கள், பெண்­களை பாலியல் தேவை­க­ளுக்கு விற்­பனை செய்யும் பல இணையத் தளங்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக இந்த சிறுமி தொடர்­பி­லான விசா­ர­ணை­களில், அச்­சி­று­மியை விற்­பனை செய்த இணை­யத்­த­ளத்தின் உரி­மை­யாளர், அதன் நிதி கட்­டுப்­பாட்­டாளர் மற்றும் குறித்த விளம்­ப­ரத்தை வடி­வ­மைத்­த­வர்கள் ஆகிய மூன்று பேருமே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சிறு­மியை விற்­பனை செய்த இணையத் தளத்தின் பாணந்­துறை -நல்­லு­ருவ பகு­தியைச் சேர்ந்த 45 வய­தான இணை­யத்­தள உரி­மை­யாளர், பிலி­யந்­தலை, மாவித்­தர -அலு­போ­வத்­தையைச் சேர்ந்த 43 வய­தான நிதிக் கட்­டுப்­பாட்­டாளர் உள்­ளிட்ட மூவ­ருமே தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த இணையத் தளங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்­பி­ர­யோக தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் தர்­ஷிகா குமா­ரியின் ஆலோ­சனை மற்றும் கோரிக்கை பிர­காரம், சி.ஐ.டி. எனும் குற்ற புல­னாய்வுத் திணைக்­கள டிஜிட்டல் பகுப்­பாய்வு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் இணையம் ஊடாக சிறுவர் மற்றும் பெண்­களை பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு விற்­பனை செய்யும் விவ­காரம் தொடர்பில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள இணையத்தளங்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சி.ஐ.டி.யினர் அவ்­வி­சா­ர­ணை­க­ளுக்கு கூகுள் நிறு­வன உத­வி­யையும் நாடி­யுள்­ளனர்.

இரு இணையத்தளங்கள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொள்ள இவ்­வாறு கூகுள் நிறு­வ­னத்தின் உத­வியைப் பெற்­றுக்­கொள்ள சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்­பாய்வு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன கொழும்பு மேல­திக நீதிவான் லோச்­சனீ அபே­விக்­ர­மவின் உத்­த­ரவைப் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

இத­னி­டையே, நாட்டில் சிறு­மிகள், பெண்­களை இவ்­வாறு விற்­பனை செய்யும் அடை­யாளம் காணப்­பட்ட மூன்று இணையத் தளங்­களை உட­ன­டி­யாக தடை செய்­ய தொலை தொடர்­புகள் ஆணைக் குழு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இணையம் ஊடாக கல்­வி­க்கு பெரும் தடங்கல்:
உண்­மையில் தற்­போ­தைய கொரோனா பரவல் நிலை­யி­டையே, கற்றல் நட­வ­டிக்­கைகள் இணை­யங்கள் ஊடாக முன்­னெ­டுக்­கப்படு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் பாட­சாலை மாண­வர்­களை வெகு­வாக இத்­த­கைய இணையத் தளங்கள் தவ­றான பாதைக்கு வழி நடாத்த தூண்­டு­கின்­றமை விஷேட அம்­ச­மாகும்.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில், கடந்த கொரோனா 2 ஆம் அலை பரவல் காலத்தின் போது, பம்­ப­ல­பிட்டி பகு­தியில், பாட­சாலை மாணவன் ஒருவன், விபசா­ரத்தில் ஈடு­படும் பெண் ஒரு­வ­ருடன் ஏற்­ப­டுத்­திய தொடர்­பு­க­ளுக்கு அமைய, அறை­யொன்­றுக்கு சென்று அங்கு குறித்த பெண்­ணுடன் பண கொடுக்கல் வாங்­கலில் ஏற்­பட்ட பிரச்­சி­னையை அடுத்து, அங்­கி­ருந்து தப்­பி­யோட முயன்ற போது விழுந்து காய­ம­டைந்த சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யி­ருந்­தது. இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய விப­சா­ரத்தில் ஈடு­படும் பெண்­ணையும் குறித்த மாணவன், இந்த விவ­கா­ரத்தில் சிறு­மியை விற்ற இணையத் தளம் ஊடா­கவே அணு­கி­யி­ருந்­த­தாக விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­த­தாக சி.ஐ.டி. அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

எனவே இணையம் ஊடாக கற்றல் செயற்­பா­டு­களின் போது தமது பிள்­ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிறு­மியின் பாது­காப்பு:
உண்­மையில் இந்த பாலியல் பலாத்­கார விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட15 வயது சிறுமி தற்­போது கொழும்பு வடக்கு போதனா வைத்­தி­ய­சா­லையின் 33 ஆவது சிகிச்சை அறையில் சிகிச்­சை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்த சிறு­மியை பார்­வை­யிட்ட நீதிவான் லோச்­சனி அபே­விக்­ரம, ‘குறித்த சிறுமி, பல்­வேறு நபர்­களால் பல்­வேறு முறை­களில் பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மிக மோச­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். அச்­சி­றுமி எனது உத்­தி­யோ­க­பூர்வ அறையில் ஆஜர் செய்­யப்­பட்டபோது நான் அது தொடர்பில் ஆராய்ந்தேன். பாலியல் பலாத்­கா­ரங்­களால், மிக மோச­மாக அவர் பாதிக்­கப்­பட்­டுள்ளார். போசனை இன்றி, மான­சீக ரீதி­யிலும் உட­ல­ள­விலும் அவர் மிகவும் சோர்­வ­டைந்­துள்ளார்.

இந் நிலையில் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­பது போன்று, அச்­சி­று­மியை பழைய நிலைக்கு அழைத்து வரு­வதும், இந் நிலை­யி­லி­ருந்து மீட்­பதும் மிக முக்­கி­ய­மாகும்.

அவர் மீண்டும் பாட­சா­லைக்கு செல்ல ஆசைப்­ப­டு­கிறார். அதனால் எதிர்­வரும் சாதா­ரண தரப் பரீட்­சையை எழு­து­வ­தற்­காக, அவர் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் சம வயதை உடைய சிறு­வர்­க­ளுடன் அவர் வைக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் அவ­ருக்கு உடல் மற்றும் மான­சீக சிகிச்­சைகள் வட கொழும்பு போதனா வைத்­தி­ய­சாலை ஊடாக வழங்­கப்­ப­டு­கின்­றன’ என தெரி­வித்தார்.

அத்­துடன் குறித்த சிறு­மியை பலாத்­காரம் செய்­த­வர்கள் அதி­கார வர்க்­கத்­தி­லி­ருந்து கீழ் மட்டம் வரையில் பரந்­துள்ள நிலையில் சிறு­மியின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர். அதனால் ராகமை பொலி­ஸாருக்கு சிறு­மிக்கு தேவை­யான பாது­காப்பை வழங்­கவும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

சிறு­வர்கள் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­படும் சம்­ப­வங்­களின் அதி­க­ரிப்பு:
இலங்­கையை பொறுத்­த­வரை கடந்த 5 ஆண்­டு­களின் தர­வு­களை நோக்கும் போது சிறு­வர்கள் பாலியல் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாகும் வீதம் அதி­க­ரித்துச் செல்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பொலி­ஸா­ருக்கு பதி­வான சம்­ப­வங்­களின் அடிப்­ப­டையில் இதனை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பொலிஸ் தலை­மை­யக புள்ளி விப­ரங்­களின் பிர­காரம், கடந்த 2015 ஆம் ஆண்டு 1654 சிறுவர் பாலியல் பலாத்­கார சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இதில் 1339 சம்பவங்கள் சிறுவர்களின் விருப்பத்துடனும் 315 சம்பவங்கள் அவர்களின் சம்மதம் இன்றியும் நடந்துள்ளன.

2016 ஆம் ஆண்டில் பதி­வா­கி­யுள்ள 1686 பாலியல் பலாத்­கார சம்­ப­வங்­களில் 1394 சம்­ப­வங்கள் சிறு­வர்­களின் சம்­ம­தத்­து­டனும் 292 சம்­ப­வங்கள் சம்­மதம் இன்­றியும் நடந்­துள்­ள­தாக புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன.

2017 ஆம் ஆண்டில் 1438 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அதில் 1206 சம்­ப­வங்கள் சிறு­வர்­களின் சம்­ம­தத்­துடன் இடம்­பெற்­றுள்­ளன. 232 சம்­ப­வங்கள் அவர்­களின் சம்­மதம் இன்றி இடம்­பெற்­றுள்­ளன.

2018 ஆம் ஆண்டில் சிறு­வர்­களின் சம்­ம­தத்­துடன் 1199 பாலியல் பலாத்­கா­ரங்­களும் சம்­ம­த­மின்றி 248 சம்­ப­வங்­க­ளு­மாக மொத்­த­மாக 1447 பலாத்­கார சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 1490 சிறுவர் பாலியல் பலாத்­கார சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அதில் 305 சம்­ப­வங்கள் சிறு­வர்­களின் சம்­ம­தத்­துடன் இடம்­பெற்­றுள்­ளன.

இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் பலாத்­கார சம்­ப­வங்­களில் மீள அதி­க­ரிப்பை அவ­தா­னிக்க முடி­கி­றது. பொலிஸ் தலை­மை­யக தர­வுகள் பிர­காரம், 1292 சிறுவர் பாலியல் பலாத்­கா­ரங்கள் கடந்த வருடம் சிறு­வர்­களின் சம்­ம­தத்­துடன் இடம்­பெற்­றுள்­ளன. அவ்­வாண்டில் பதி­வான மொத்த சிறுவர் பாலியல் பலாத்­கார சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை 1653 ஆகும்.

இந்த புள்ளி விப­ரங்­களை மையப்­ப­டுத்தி ஆரா­யும்­போது, சிறு­வர்கள் தொடர்பில் பெற்­றோரின் கண்­கா­ணிப்பு மற்றும் வழி நடத்­தலின் கூடிய அவ­சியம் புலப்­ப­டு­வ­துடன், இவ்­வா­றான சம்­ப­வங்­களால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான பாது­காப்பு மற்றும் மீட்பு, உள­வியல் தாக்­கங்­க­ளுக்­கான தீர்­வு­க­ளையும் சமூகம் தேட வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.