கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தமிழ் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தமையும், அந்த அழைப்பு உடனடியான வாபஸ் பெறப்பட்டமையும், அப்பேச்சுவார்த்தை காலவரையறையின்றி பிற்போடப்பட்டமையும் யாவரும் அறிந்ததே. தென் இலங்கையிலே அவரின் அழைப்புக்கு எதிராக எழுந்த எதிர்ப்பே இத்தனைக்கும் காரணம் என்பதும் இப்போது தெளிவாகின்றது. இந்த அழைப்பின் பின்னணி என்ன? அவ்வாறான ஓர் அழைப்பு முஸ்லிம் தலைவர்களுக்கும் அனுப்பப்படாதது ஏன்? இவைபற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? இக்கேள்விகளுக்கு சுருக்கமான விடைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முன்னர் சில விடயங்களைப் பின்னணியாக விளக்க வேண்டியுள்ளது.
ஆட்டம் காணும் அரசு
இலங்கையின் ராஜபக் ஷாக்களின் அரசு ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது. அதன் சட்டப்படியான ஐந்து வருட ஆயுள் முற்றாக நீடிக்குமா அல்லது விரைவில் குன்றிவிடுமா என்ற சந்தேகம் இப்போது வலுவடைகின்றது. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் பதவிக்கு வந்த ஓர் அரசாங்கம் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டமை சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவை.
ஒரு பக்கத்தில் தொற்று நோயின் நெருக்கடி; மறுபக்கத்தில் பொருளாதாரத்தின் சீரழிவு; இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தலையிடி; இத்தனைக்கும் மத்தியில் அரசின் பங்காளிக்கட்சிகளின் சூழ்ச்சிகளும் பயமுறுத்தல்களும், என்றவாறு நாலாபக்கங்களிலுமிருந்து இந்த ஆட்சியின் நிலைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது. நெருக்கடிகள் பெருகினாலும் மக்களின் ஆதரவு ஓர் அரசுக்கு இருக்கும்வரை அந்த அரசை யாருமே அசைக்க முடியாது. ஆனால், இன்றைய நிலையில் வறுமையும் பசியும் பட்டினியும் இலட்சக்கணக்கான குடும்பங்களை வாட்டி வதைக்கின்ற நிலையில் அந்த ஆதரவை இந்த அரசு வெகுவாக இழந்து விட்டதென்றே கூறவேண்டும்.
சில தினங்களுக்குமுன் ஜனாதிபதி பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின் எதிர்கால சுபீட்சத்தைப் பற்றிய அவரது கனவுகளை வழமைபோல் விபரித்து, அவற்றை அடைய இதுவரை அவர் ஈட்டிய வெற்றிகளையும் சுட்டிக்காட்டி இறுதியாக இன்றுள்ள பிரச்சினைகளுக்குரிய முழுப் பழியையும் தொற்று நோயின்மேல் சுமத்தியதை அவ்வுரையைக் கேட்டோர் உணர்ந்திருப்பர். சுருக்கமாகக் கூறின் இது மக்களை ஏமாற்றிய ஓர் உரை.
தொற்று அரசின் அரண்
கொவிட் தொற்று இலங்கையில் மட்டும் பரவவில்லை. அது ஓர் உலகளாவிய பிணி. ஆனால் ஏனைய நாடுகளின் அரசுகள் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து அந்த நோயைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை அவர்களிடமே சுமத்தி அத்துடன் பொருளாதாரத் தாக்கங்களையும் மட்டுப்படுத்தி பெருமளவு வெற்றிகாண, இலங்கையின் ஆட்சியாளர்களோ நிபுணர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி, மருத்துவ தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் போலிப் பரிகாரிகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் முதலிடம் வழங்கி, நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் இராணுவ மயப்படுத்தியதனால் இன்று அந்த நோய் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, மக்களின் தொழில்வாய்ப்புகள் குறைந்து, வருமானமிழந்து, விஷம்போல் ஏறும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் அளவுக்கு வறுமை நாட்டைப் பீடித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தி அதேவேளை பொருளாதாரப் பாதிப்பையும் குறைக்கக்கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டமொன்றை ஆரம்பத்திலிருந்தே வகுக்காதது அரசாங்கத்தின் குற்றமேயன்றி நோயின் குற்றமல்ல. இந்தக் குறைபாட்டுக்கு மத்திய வங்கியின் காவலர்களும் ஒரு காரணம்.
கொவிட் நோய் உண்மையிலேயே ராஜபக் ஷ அரசின் பாதுகாப்புக்கு ஓர் அரணாய் விளங்குகிறது. ஏனெனில் அதுதான் ஆட்சியாளர்மேல் வெறுப்படைந்துள்ள மக்களை வீதிகளிலிறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளின் சீர்கேடுகளை விரிவாக ஆராய்வதானால் இக்கட்டுரை மிகவும் நீண்டுவிடும். ஏனெனில் அந்தக் கொள்கைகளின் வரலாற்றை மகிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாகிய காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. சுருக்கமாகக் கூறுவதானால் கடன்பட்டு நடத்திய போரும், அபிவிருத்தி என்ற பெயரில் விரயமாக்கப்பட்ட பணமும், ஊழல் மோசடிகளும் ஒருங்கிணைந்து தேசத்தைக் கடன் சுமைக்குள் தள்ளி அத்தியாவசிய தேவைகளைக்கூட இன்று நிறைவேற்ற வசதி இல்லாத ஒரு நாடாக இலங்கையை மாற்றியுள்ளது.
வெளிநாட்டுக் கொள்கையால் விளைந்த விபரீதம்
சுதந்திர இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நீண்டகாலமாக, அதாவது ராஜபக் ஷாக்களின் ஆட்சிக்காலம்வரை, அணிசேராக் கொள்கையாகவே இருந்துள்ளது. முதலாளித்துவக் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுடன் கொள்கையளவில் நெருங்கி இருந்தபோதும், அதேபோன்று சோஷலிசச் சார்புடைய சுதந்திரக் கட்சி இடதுசாரி நாடுகளுடன் நட்புறவு கொண்டாடியபோதும், நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை அப்போது உலகை அச்சுறுத்தி வளர்ந்த பனிப்போரில் எந்த ஓர் அணிக்கும் அந்த இரு கட்சிகளும் ஈடுவைக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாகவும் நாடு நன்மை அடைந்தது. 1976இல் கொழும்பில் வெகு கோலாகலமாக நடைபெற்ற அணிசேரா நாடுகளின் சர்வதேச மகாநாடையும் இந்த நடுநிலைமைக் கொள்கைக்குக் கிடைத்த ஒரு பரிசு என்றே கருதவேண்டும். அந்த மகாநாட்டுக்குப் பின்னர் உலக அரங்கில் இலங்கைக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அத்தனையும் இன்று தவிடுபொடியாகி; ஒரு வங்குரோத்துப் பொருளாதாரத்தை எதிர்நோக்கும் இலங்கை மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் சிக்கியுள்ளது. இந்த நிலை எவ்வாறு உருவானது?
சீனம்சார் வெளிநாட்டுக் கொள்கை
அன்றைய அணிசேராக் கொள்கையின் ஓர் அம்சம் அண்டை நாடான இந்தியாவுக்கு வெளிநாட்டுறவில் முதலிடம் வழங்கப்பட்டமை. அதனால் இலங்கை அரசுக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்படுமிடத்து இந்தியாவே உடனடியாக உதவி செய்ய முன்வந்தது. அதே போன்று இந்திய,- பாக்கிஸ்தான் போரிலும் இந்திய-, சீனப் போரிலும் இலங்கை ஒரு சமாதானப் பறவையாக அன்று பறந்திருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் சீனாவுடன் இலங்கைபட்ட கடனை இறுக்க முடியாமல் அந்த நாட்டின் அழுத்தங்களுக்கு இசைந்து செயற்படவேண்டிய ஒரு நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது. அந்த அழுத்தங்கள் படிப்படியாக அதிகரிக்கவே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் சீனம் சார்ந்த ஒரு கொள்கையாக மாறி இந்தியாவுக்கு முதலிடம் என்ற நிலையும் கைவிடப்பட்டது. இதன் தாக்கத்தை விளங்குதல் அவசியம்.
சீனாவின் பொருளாதார எழுச்சியும் அது ஓர் உலக வல்லரசாக வேண்டுமென்ற இலட்சியமும் அமெரிக்க வல்லரசுக்கும் அதன் ஐரோப்பிய நேசநாடுகளுக்கும் எழுந்துள்ள மிகப்பெரும் சவால். இதனால் ஒரு புதிய பனிப்போர் இன்று உலகை அச்சுறுத்தி வருகின்றது. இந்தப் பனிப்போரில் இந்து சமுத்திரம் ஒரு முக்கிய களமாக மாறியுள்ளது. ஒரு பக்கத்தில் அந்தச் சமுத்திரத்தினூடாக புதிய பட்டுப்பாதை ஒன்றை அமைத்துத் தனது பொருளாதார, வர்த்தக, நலன்களைப் பாதுகாக்க சீனா விழைகிறது. மறுபக்கத்தில் சீனாவின் இந்து சமுத்திர ஊடுருவலால் இந்தியா அதன் பாதுகாப்புக்கு ஒரு புதிய திசையிலிருந்து ஆபத்து எழுந்துள்ளதென அச்சப்படுகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் இந்து சமுத்திரத்துக்குள் நுழைந்து தமது காலடிகளைப் பதித்து சீன எழுச்சியைத் தடுக்க முனைகின்றன. இந்த நிலையில் இலங்கை தனது சாணக்கியக் குறைவால் சீனம்சார்பான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து இந்தியாவினதும் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளினதும் சீற்றத்தைத் தேடிக்கொண்டுள்ளதில் எந்த வியப்புமில்லை.
மேற்கின் சீற்றமும் சிறுபான்மை இனங்களும்
இலங்கையின் சீனச்சார்புக் கொள்கையால் மேற்கில் எழுந்த சீற்றத்துக்கும் இந்நாட்டின் சிறுபான்மை இனங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? நிச்சயம் உண்டு என்பதைத்தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தமிழ்த் தலைவர்களுக்கு அனுப்பிய அழைப்பு தெளிவுபடுத்தியது. இதை இனி விளக்குவோம்.
இலங்கையின் சிறுபான்மை இனங்களின் நலனுக்காக மேற்கு நாடுகள் இன்றுவரை என்றுமே கண்ணீர் வடித்ததில்லை. சர்வதேச அரங்குகளிலும் புதின ஏடுகளிலும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு ஆங்காங்கே சில பரிந்துரைகளை மேற்கு நாடுகளின் தலைவர்கள் சிறுபான்மை இனங்களின் சார்பாகத் தெரிவித்தபோதும் செயலளவில் அவர்கள் எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களின் நோக்கமெல்லாம் மேற்கின் உலகாதிபத்தியத்தை பல திசைகளிலும் நிலைநாட்டுவதே. அந்த இலட்சியம் நிறைவேறுவதற்காக சிறுபான்மை இனங்களை மட்டுமல்ல பெரும்பான்மை இனங்களைக்கூட அவர்கள் பலியாக்கவும் தயங்கமாட்டார்கள். இதற்கு ஐரோப்பாவின் வரலாற்றிலே ஏராளமான ஆதாரங்களுண்டு.
இலங்கையின் சிறுபான்மை இனங்கள், அதிலும் குறிப்பாகத் தமிழினம், பல தசாப்தங்களாகத் தனது அபயக்குரலை உலக அரங்கில் எழுப்பியுள்ளது. ஆனால் அதன் குறைபாடுகளை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையெனவே மேற்குலகு தட்டிக்கழித்தன. அந்த நிலை இப்போது மாறியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அழுத்தங்கள். இரண்டாவது இலங்கையின் சீனச்சார்புக் கொள்கைகள்.
ஏறத்தாழ எழுநூறாயிரம் இலங்கைத் தமிழர்கள் இன்று கனடாவிலும், பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் கல்வியறிவிலும், தொழில் மேம்பாட்டிலும் உத்தியோகங்களிலும் உயர்வடைந்து அந்நாடுகளின் அரசியலிலும் ஓரளவு அங்கம் வகிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தப்பலத்தினை உபயோகித்து மேற்குலகத் தலைமைத்துவத்துடன் இலங்கையிலே வாழ்கின்ற தமிழருக்கு இழைக்கப்படும் அநீதிகளைப்பற்றி இடையறாது எடுத்துக்கூறி அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கு அரசுகளின் ஒத்துழைப்பை அயராது அவர்களின் அமைப்புகள் கேட்கின்றன. அவர்களுடன் சேர்ந்து புலம்பெயர்ந்து வாழும் சிறு அளவிலான இலங்கை முஸ்லிம்களும் அதே கோரிக்கையை முஸ்லிம் நாடுகளின் ஊடாக முன்வைக்கின்றனர். இந்தக் கோரிக்கைகளே மேற்கு நாடுகளுக்கு இலங்கை அரசின்மேல் எழுந்துள்ள சீற்றத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. சீனம்சார் இலங்கையைப் பழிவாங்க சிறுபான்மை இனங்களின் அவலநிலை ஒரு அரிய துரும்பாக மாறியுள்ளது. ‘சீனாவைக் கைவிட்டு எம்மோடு சேர்’, என்று வெளிப்படையாகக் கூறாமல் ‘சிறுபான்மை இனங்களை நசுக்காதே. அவ்வாறு நசுக்கினால் உனக்கெதிராக நாங்கள் நடவடிக்கைகள் எடுப்போம்’, என்று அவை மறைமுகமாக அச்சுறுத்துகின்றன.
கடந்த வருடம் புரட்டாதி மாதம் ஜெனிவாவில் நிறைவேறிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானமும், அண்மையில் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற பிரேரணையும், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச இறக்குமதி வரியும் ஏனைய சலுகைகளும் நீக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் முழுக்க முழுக்க சர்வதேச சாயம் பூசப்பட்ட நடவடிக்கைகளே. இவற்றுள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அச்சுறுத்தல் இலங்கையின் பொருளாதார மீட்சியை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அது ஒரு பாரிய சந்தையாக விளங்குகிறது. அந்தக்கதவு அடைக்கப்பட்டால் எத்தனையோ சிறு, நடுத்தர, கைத்தொழில் தாபனங்கள் இலங்கையில் மூடப்படும். இன்றுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு மத்தியில் இதுவும் நடந்தால் நாட்டின் கதி என்ன? இதுதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை கதிகலங்க வைத்துள்ளது.
கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
சீனாவை விட்டு அகல்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அந்த அளவுக்கு ராஜபக் ஷ அரசு இலங்கையை சீனாவிடம் அடகு வைத்துள்ளது. ஆகையால் மேற்கு முன்வைத்துள்ள சிறுபான்மை இனங்கள் பற்றிய, அதிலும் குறிப்பாக தமிழினம் பற்றிய, குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முடிவு காண்பதன் மூலம் மேற்கின் அழுத்தங்களைக் குறைக்கலாம் என்று கருதியதனாலேயே ஜனாதிபதி அவசர அவசரமாக தமிழர் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த அழைப்பு விடுத்தார். அது பின்னர் காலவரையறையின்றி பிற்போடப்பட்டாலும் அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்றே தீரும். அவருக்கு வேறு வழி இல்லை. ஆனால் முஸ்லிம்களும் நசுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை என்பது அவருக்குத் தெரியாதா? அவர்களின் தலைமைத்துவத்தை ஏன் அவர் அழைக்கவில்லை?
முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தையா? யாருடன் பேசுவது?
முஸ்லிம்களின் குறைபாடுகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் பற்றி உரையாட ஜனாதிபதி முன்வராததற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று, மந்திரி சபைக்குள்ளேயே அவரது மிக நெருங்கிய முஸ்லிம் நண்பரொருவர் நீதி அமைச்சராக இயங்குகிறார். அவரைப் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைத்தவரும் ஜனாதிபதியே. அவ்வாறிருக்கும்போது அவருடனேயே முஸ்லிம்கள் பற்றிய பிரச்சினைகளை கலந்துரையாடலாம் என்ற ஓர் எண்ணம். ஆனால் அவர் என்றுமே அன்றைய ஒரு பதியுத்தீனுக்கு இணையாக முஸ்லிம்கள் மத்தியில் மதிக்கப்படமாட்டார் என்பதை ஜனாதிபதி உணர்வாரா? இரண்டு, இப்போது நாடாளுமன்றத்துக்குள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவை பணத்தையும் பதவிகளையும் கொடுத்து வாங்கி விடலாம் என்ற ஒரு நம்பிக்கை. அதை பலமுறை இந்த அங்கத்தவர்கள் நிரூபித்துள்ளனர். ஆதலால் தமிழினத்தைப் போன்று முஸ்லிம்களையும் ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை என்பதனாலேயே அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை எனக் கருத இடமுண்டு. ஆனால் இந்த அங்கத்தவர்களின்மீது முஸ்லிம் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதை ஜனாதிபதி அறிவாரா? அவ்வாறாயின் யாருடன் பேசுவது?
இன்றைய இலங்கையில் முஸ்லிம் சிவில் இயக்கங்கள் பல இயங்குகின்றன. அவற்றுள் தனியே முஸ்லிம் பெண்களைக்கொண்ட இயக்கங்களும் உண்டு. அந்த இயக்கங்களுக்குத்தான் முஸ்லிம் இனத்தின் அடிப்படைப் பிரச்சினைகளும் குறைபாடுகளும் விளங்கும். இது கடந்த சில தசாப்தங்களில் முஸ்லிம் சமூகத்திலேற்பட்ட கல்வி விழிப்பால் ஏற்பட்ட ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆகவே அவர்களுடன் ஜனாதிபதி கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அண்மையில் ஐம்பத்தேழு நாடுகளை அங்கத்தவராகக்கொண்ட உலக முஸ்லிம் கூட்டுறவு அமைப்பு இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக ராஜபக் ஷ அரசு இழைக்கும் அநீதிகளைக் கண்டித்து ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. அந்த நிகழ்வுக்குப் பின்னால் புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம்களின் அழுத்தங்கள் இருந்தன என்பதை இந்த அரசு அறியுமா? அந்த அழுத்தங்கள் இன்னும் தொடரும். ஆகவே முஸ்லிம் சிவில் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது ஜனாதிபதியைப் பொறுத்தவரை புத்திசாதுரியமானது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் அது உகந்தது. -Vidivelli