ரிஷாத் பதியுதீனை வீட்டுக் காவலில் வைக்க அனுமதியளியுங்கள்
உயர்நீதிமன்றில் சட்டத்தரணிகள் கோரிக்கை பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் விண்ணப்பம்
(எம்.எப்.எம். பஸீர்)
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை சி.ஐ.டி.யினரின் பொறுப்பிலிருந்து விடுவித்து, பிணை வழங்கி அவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நேற்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கையினை முன்வைத்தனர். இது தொடர்பான சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்வைக்கவும் உயர் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை முன் வைக்கப்படாத பின்னணியில், அவரை பயங்கரவாத தடை சட்டத்தின் 11/1 ஆம் அத்தியாயத்தின் கீழாவது நிவாரணமளிக்கப்படல் வேண்டும் என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன் சார்பில் ஆஜராகி இந்த வாதத்தை முன் வைத்தார். வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பை மையப்படுத்தி அவர் இந்த வாதத்தை முன் வைத்தார்.
அதன்படி சி.ஐ.டி. தடுப்பில் உள்ள ரிஷாத்துக்கு பிணையளிக்கப்பட்டு, வீட்டுக் காவலிலோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளுடனோ விசாரணைகளை தொடரக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகள் நேற்று மீளவும் இடம்பெற்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன.
நேற்றைய தினம் ரிஷாத் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் சார்பில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு வேறு மனுக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம் சஹீத், ருஷ்தி ஹபீப், புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது குறித்த ரிஷாத் பதியுதீனின் வழக்கு தொடர்பில் நிவாரணம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் திகதி ஒன்றினைப் பெற சட்டத்தரணிகள் முயன்றனர்.
இதன்போது நீதியரசர் விஜித் மலல்கொட, ‘இந்த வழக்கு நீதியரசர்கள் காரணமாக பிற்போவதாக ஊடகங்களில் அன்றாடம் செய்திகளை காண முடிகிறது. இன்று நான் இவ்வழக்கை பரிசீலிக்க தயாராக உள்ளேன். நீதியரசர்கள் காரணமாக வழக்கு பிற்போகிறது எனும் குற்றச்சாட்டுக்கு என்னால் ஆளாக முடியாது” எனத் தெரிவித்து வழக்கை பிற்பகல் 1.30 மணி முதல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி குறித்த வழக்கு பிற்பகல் வேளையில் விசாரணைக்கு வந்தது.
ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் விடயங்களை முன் வைத்தார்.
அதன்படி ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் சகல விதமான பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்படுவதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக கைது செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கவில்லை.
எனினும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக தடுத்து வைப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் கைதின் போது அது தெரிவிக்கப்படவில்லை.
கைதின் பின்னர் ரிஷாத் தற்கொலை குண்டுதாரிகளுக்கு நிதி உதவி அளித்தமை தொடர்பில் விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இம்மன்றில் முன் வைக்கப்பட்டுள்ள சட்டமா அதிபரின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளில், அவர் குளோசஸ் நிறுவனத்துக்கு பணம் சம்பாதிக்க உதவியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் பிரதிவாதிகள் கூறும் ஒவ்வொரு விடயமும் ஒன்றுக்கொன்று முரணாகவே உள்ளது.
இது முற்று முழுதாக ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது.
சி.ஐ.டி. அதிகாரிகள் இத்தனை நாள் ரிஷாத்தை விசாரித்து அவருக்கு எதிரான ஆதாரமாக கூறுவது, ரிஷாத் அவரது பிரத்தியேக செயலர் பாலசுப்ரமணியத்துக்கு எடுத்த தொலைபேசி அழைப்பொன்றினை மட்டுமே.
குளோசஸ் நிறுவனத்துக்கு செப்பு தொகையினை பெற்றுக்கொள்ள அமைச்சின் அனுமதியை அளிப்பதற்காக அந்த அழைப்பு எடுக்கப்பட்டதாக விசாரணையாளர்கள் கூறுகின்ற போதும் அது முற்றிலும் பொய்யானது என்பது அவர்கள் மறைத்த ஆவணங்கள் ஊடாக தெரிகிறது.
குறித்த நிறுவனத்துக்கான பூரண அனுமதி ஜனாதிபதி செயலகம் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணமே இது (உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்ப்ட்டிருந்த ஆவணமொன்றினை காட்டினார்) சட்ட மா அதிபர் தரப்பு தமது ஆட்சேபனத்தில் இந்த ஆவணத்தை மறந்துவிட்டது.
இந்த விடயத்தில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில், பாலசுப்ரமணியத்துடன் ரிஷாத் பதியுதீன் குறித்த அனுமதிக்கு முன்னைய தினம், தனது அமைச்சில் இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வொன்று தொடர்பிலேயே கதைத்ததாக சாட்சிகள் ஊடாகவும் வெளிப்பட்டுள்ளது.
அப்படி இருக்கையில், ரிஷாத்துக்கும் குண்டுவெடிப்புக்குமோ, குளோசஸ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களுடனோ எந்த தொடர்புகளும் இல்லை என்பது நூறு வீதம் புலனாகிறது.
எனவே தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீனை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோருகிறோம். ஒருவேளை விசாரணையாளர்கள் ரிஷாத் குறித்த விசாரணை நிறைவடையவில்லை என கூறுவார்களாயின், அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் 11(1) ஆம் அத்தியாயத்தின் கீழ், தடுப்புக் காவல் இடத்தை மாற்றி நிவாரணமளிக்கலாம். அவரை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை செய்யும் வண்ணமோ அல்லது, போக்குவரத்து கட்டுப்பாட்டுகளை விதித்தோ அவசியமான முறையில் அதனை செய்துகொள்ளலாம்.
வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பு இவ்வாறு செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (குறித்த வழக்குத் தீர்ப்பும் சமர்ப்பிக்கப்பட்டது.) என வாதங்களை முன் வைத்தார்.
அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் அந்த சட்டத்தின் 11/1 ஆம் பிரிவின் கீழான நிவாரணத்தை வழங்குமாறு கோரும் விண்ணப்பத்தை ஏற்கனவே சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.
இந் நிலையில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், அந்த விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சில் பரிசீலனையில் இருப்பதனால், மனுதாரர் தரப்பு வாதத்துக்கு எதிர்வாதத்தை முன் வைக்க கால அவகாசம் வேண்டும் என குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளை ஒத்தி வைத்தது.
ரியாஜ் பதியுதீனின் கைதுக்கும் எந்த அடிப்படையும் இல்லை என இவ்வாதங்களின் போது ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli