அசாத் சாலி ; குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை!

0 516

எம்.எப்.எம்.பஸீர்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜ­ரத்னம் இது குறித்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரி­கையை கடந்த வெள்­ளி­யன்று(25) தாக்கல் செய்­துள்ளார். அசாத் சாலி ஊடக சந்­திப்­பொன்றில் தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கடந்த திங்­கட்­கி­ழமை (28) உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்ளார்.

அடிப்­படை உரிமை மீறல் மனு பரி­சீ­லனை:
அசாத் சாலி சார்பில், தன்­னையே மனு­தா­ர­ராக பெய­ரிட்டு, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு திங்கட்கிழமை உயர் நீதி­மன்றில் பரி­சீ­ல­னைக்கு வந்­தது. உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான பிரி­யந்த ஜய­வர்­தன, யசந்த கோதா­கொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்­னி­லையில் அது இவ்­வாறு பரி­சீ­லிக்­கப்­பட்­டது. இதன்­போது மனு­தாரர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ரா­சாவின் ஆலோ­ச­னைக்கு அமைய, ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான பாயிஸ் முஸ்­தபா, மைத்­திரி குண­ரத்ன மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீத் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர். பிர­தி­வா­தி­க­ளுக்­காக அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் பிர­சன்­ன­மானார்.

விசா­ரணை நடாத்­தப்­படும் இரு விட­யங்கள் :
இதன்­போது மன்றில் விட­யங்­களை முன் வைத்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ‘அசாத் சாலி பிர­தா­ன­மாக இரு விட­யங்­களை மையப்­ப­டுத்தி கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். ஒன்று கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில், இன, மத குழுக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி வெளி­யிட்ட கருத்­துக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாகும். மற்­றை­யது மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கார சந்­தேக நபர்­க­ளுக்கு உத­வி­ய­ளித்­தமை தொடர்­பி­லான விவ­கார விசா­ர­ணை­யாகும். இந்த விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

தடுத்து வைப்­ப­தற்­கான காரணம் :
தீவி­ர­வாத பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை, தீவி­ர­வாத பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­ய­ளித்­தமை மற்றும் உடந்­தை­யா­க­வி­ருந்­தமை, வன்­முறை அல்­லது மத, இன அல்­லது சமூக ரீதி­யான விரோ­தத்தை தூண்டும் வகையில் அல்­லது வேறு­பட்ட சமூ­கங்கள் அல்­லது இனங்கள் மத குழுக்­க­ளுக்­கி­டையில் பகை­மையை தூண்டும் விதத்தில் வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­கா­கவும் மற்றும் 21.04.2019 அன்று நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் இந்த சந்­தேக நப­ருக்கு உள்ள தொடர்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் அவரை தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­ம­திப்­ப­தாக ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்­டுள்ள தடுப்புக் காவல் உத்­த­ரவு அனு­ம­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் 90 நாட்­க­ளுக்கு அவரை தடுத்து வைக்க அனு­ம­திப்­ப­தாக ஜனா­தி­பதி குறித்த அனு­ம­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

குற்றப் பத்­தி­ரிகை:
எனினும் ‘ஊடக சந்­திப்பில் தெரி­வித்த கருத்­துக்கள்‘ தொடர்பில் கடந்த வெள்­ளி­யன்று கொழும்பு மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­போது மனு­தாரர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ரா­சாவின் ஆலோ­ச­னையின் பேரில் வாதங்­களை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, அவ்­வா­றெனில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை விசா­ர­ணைக்கு ஏற்று திகதி குறிக்­கு­மாறு கோரினார். அதனை உயர் நீதி­மன்றம் ஏற்­றுக்­கொண்­டது.

மன்றில் ஆஜர் செய்ய தயார்:
இதன்­போது மனுவில், பாது­காப்பு அமைச்­சரின் தடுப்புக் காவல் உத்­த­ரவு சட்­ட­வ­லு­வற்­ற­தென தீர்ப்­ப­றி­விக்­கு­மாறும் இடை க்கால தடை உத்­த­ரவு வழங்கி கைதி­யான அசாத் சாலியை நீதி­மன்றில் ஆஜர் செய்ய உத்­த­ர­விட வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வாதங்­களை முன் வைத்தார்.

‘தற்­போதும் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும் நிலையில், அவரை மன்றில் ஆஜர் செய்ய முடியும் என மருத்­து­வர்கள் சான்­றிதழ் வழங்கும் பட்­சத்தில் மன்றில் ஆஜர் செய்ய தயார்’ என திலீப பீரிஸ் தெரி­வித்தார்.

இதன்­போது மன்றில் பேசிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அது தொடர்பில் உறு­திப்­பாட்டை மன்­றுக்கு தெரி­வித்­துள்ள நிலையில், இடைக்­கால தடை உத்­த­ரவு அவ­சி­ய­மற்­றது என குறிப்­பிட்டார்.

ஜூலை 29 ஆம் திகதி விசா­ரணை:
இந் நிலை­யி­லேயே இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவை விசா­ர­ணை­க­ளுக்­காக எதிர்­வரும் ஜூலை 29 ஆம் திகதி எடுத்­துக்­கொள்­வ­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. அத்­துடன் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தின் பிர­தி­களை உயர் நீதி­மன்­றுக்கும், மனு­தா­ரரின் சட்­டத்­த­ர­ணிக்கும் கைய­ளிக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லுக்கு அறி­வித்­தது.

கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அசாத் சாலி சார்பில், தன்­னையே மனு­தா­ர­ராக பெய­ரிட்டு, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா இம்­ம­னுவை தாக்கல் செய்­தி­ருந்தார்.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்ன, சி.ஐ.டி. பணிப்­பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த பயா­கல, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர, குறித்த அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

மேல் நீதி­மன்ற வழக்கு:
அசாத் சாலிக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்­கத்தில் கீழ் வழக்குத் தொடுத்­துள்ளார். அதில் அசாத் சாலிக்கு எதி­ராக இரு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

குற்­றச்­சாட்­டுக்கள் :
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதி­மன்ற அதி­கார எல்­லைக்கு உட்­பட்ட பகு­தியில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி மத, இன பேதங்­களை தோற்­று­விக்கும், வன்­மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­தாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்­டங்­களால் திருத்­தப்­பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரி­வுடன் இணைத்து பர்க்க வேண்­டிய 2 (2) ( ஈ ) அத்­தி­யா­யத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை அசாத் சாலி புரிந்­துள்­ள­தாக முதல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழும் குற்­றச்­சாட்டு:
அத்­துடன் இதே சம்­பவம் கார­ண­மாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்க வேண்­டிய 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை அசாத் சாலி புரிந்­துள்­ள­தாக அவர் மீது முன் வைக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது குற்­றச்­சாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

56 சாட்­சி­யா­ளர்கள் :
இக்­குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­ப­தற்­காக சட்ட மா அதி­பரால் 56 சாட்­சி­யா­ளர்­களின் பெயர் பட்­டியல் மேல் நீதி­மன்­றுக்கு பட்­டி­ய­லிட்டு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சான்றுப் பொருட்­க­ளாக இறு­வெட்­டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை :
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அச்சட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் ( 3 மாதங்கள்) மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு ஊடாக இது சாத்தியப்பட்டுள்ளதுடன், நிர்வாக தடுப்புக் காவலில் பிரதிவாதி இருக்கும் போதே தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையாகவும் இது கருதப்படுகிறது.

Vidivelli

Leave A Reply

Your email address will not be published.