முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: கண்துடைப்புக்கா ஆலோசனைக் குழு?

0 598

ஏ.ஆர்.ஏ.பரீல்

எமது நாட்டில் அமு­லி­லுள்ள1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில்(MMDA) அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளன. சமூ­கத்தின் பல தரப்­பு­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத் தின் பல முக்­கிய விட­யங்­களை அமைச்­ச­ரவை ஏற்­க­னவே தீர்­மா­னித்து விட்­டதன் பின்பு நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி இச்­சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட 10 பேர் கொண்ட ஆலோ­சனை குழு வெறும் ஒரு கண் துடைப்­பென்றே சமூகம் கரு­துகிறது.­

முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்டம் என்­ற­ழைக்­கப்­படும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென்று 17 ஆம் நூற்­றாண்டில் இந்­தோ­னே­சி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்­டது. பின்பு அச்­சட்டம் 1806 ஆம் ஆண்டு முகம்­ம­தியன் கோவை­யாக வடி­வ­மைக்­கப்­பட்­டது. பின்பு எம்.ரி. அக்பர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ஒரு குழு­வினால் 1929 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மாக மாற்­றப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. 1951 ஆண்டு இச்­சட்டம் 13 ஆம் இலக்க சட்­ட­மாக மாற்றம் பெற்­றது.

இச்­சட்­டத்தில் 1975 ஆம் ஆண்டு வரை திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. என்­றாலும் அதன் பின்­னரும் திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டாலும் அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் முன்னாள் நீதி­யரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு 9 வரு­டங்­க­ளாக ஆராய்ந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சிபா­ரிசு அறிக்கை 2018 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இத் திருத்­தங்­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னார்கள். திருத்­தங்­க­ளுக்­கான வரைபும் தயா­ரிக்­கப்­பட்­டது. என்­றாலும் கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லத்தில் இப்­ப­ணி­யினை நிறைவு செய்­ய­ மு­டி­யா­மற்­போ­னது. கடந்த பொதுத்­தேர்­தலில் பொது ஜன­ பெ­ர­முன கட்­சியே ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது. அலி­சப்ரி நீதி­ய­மைச்­ச­ராக நிய­மனம் பெற்றார்.

பெரும்­பான்மை அடிப்­ப­டை­வா­தி­களும் தீவி­ர­மதக் கொள்­கை­களைக் கொண்­டுள்ள ஒரு சில பெளத்த குரு­மாரும் முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்க வேண்டும். அனைத்து இனத்­தி­னரும் ஒரே சட்­டத்தின் கீழ் ஆளப்­ப­ட­வேண்டும் என தொட­ராக குரல்­கொ­டுத்து வந்­தனர். இச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றி­னையும் முன்­வைத்தார். இவ்­வாறு இச்­சட்டம் பல சவால்­களை தொட­ராக எதிர்­கொண்டு வந்­துள்­ளது.

ஆணைக்­குழு நிய­மனம்
இவ்­வா­றான சவால்­க­ளுக்கு மத்­தியில் முஸ்லிம் விவாவ, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு நீதி­ய­மைச்சர் அலி சப்ரி வக்பு சபையின் தலை­வ­ரான சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் 10 உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிய­மித்தார்.

இக்­கு­ழுவில் வக்பு சபையின் தலைவர், மற்றும் முன்னாள் தலைவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட விரி­வு­ரை­யாளர், உலமா சபையின் பிர­தி­நி­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள், இரு பெண் சட்த்­த­ர­ணிகள் அங்கம் பெற்­றனர். ஆலோ­சனைக் குழுவின் உறுப்­பி­னர்கள் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் (தலைவர்), சட்­டத்­த­ரணி நாபிக் நாபாத், அஷ் ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப், சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசின், சட்­டத்­த­ரணி எம்.ஏ.எம்.ஹக்கீம், சட்­டத்­த­ரணி எர்­மிஸா தீகல், சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி சபானா குல்­பேகம், அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி ஆகி­யோ­ராவர்.

அமைச்­ச­ர­வையின் தீர்­மானம்
இச்­சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு முன்பு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே சில தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இத்­தீர்­மா­னங்கள் ஆலோ­சனைக் குழு­விற்கு அறி­விக்­கப்­பட்­டது. தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட விட­யங்கள் தவிர ஏனைய விட­யங்கள் தொடர்­பிலே நீதி­ய­மைச்­ச­ரினால் ஆலோ­சனை கோரப்­பட்­டது.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வயது 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். திரு­ம­ணத்­துக்கு மண­ம­களின் சம்­ம­தமும் கையொப்­பமும் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும், பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ள­தாக குழு 2020.12.31 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­ட­போதே தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­தோடு காதி­நீ­தி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் ஆண்­களின் பல­தாரமணம் தடை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென 2021.03.08 ஆம் திக­திய அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக 2021.04.29 ஆம் திகதி ஆலோ­சனைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்க வேண்டாம்
ஆலோ­ச­னைக்­குழு தனது ஆலோ­ச­னைகள் அடங்­கிய அறிக்­கையை அண்­மையில் நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்­தது. காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்க வேண்டாம். அதன் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­துங்கள், அது தொடர்பில் கவனம் செலுத்­துங்கள் என்று ஆலோ­சனைக் குழு அமைச்­ச­ர­வைக்கு பரிந்­துரைகளை வழங்­கி­யுள்­ளது.

அமைச்­ச­ரவை காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என ஏற்­க­னவே தீர்­மானம் நிறை­வேற்றி அது தொடர்பில் ஆலோ­ச­னை­களை எதிர்­பார்க்­காத நிலையில் ஆலோ­ச­னைக்­குழு இவ்­வா­றான சிபா­ரி­சினை முன் வைத்­தி­ருப்­பது பாராட்­டத்­தக்­க­தாகும். காதி நீதி­ப­திகள் மற்றும் அவர்­க­ளது தகை­மைகள் தொடர்பில் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதால் இக்­கட்­ட­மைப்­பினை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டுவோர் சட்­டத்­த­ர­ணி­க­ளா­கவும், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பில்­அ­றி­வுள்ள 5 வருட அனு­பவம் கொண்ட சட்­டத்­த­ர­ணி­யாக இருக்­க­வேண்­டு­மெ­னவும் சிபா­ரிசு செய்­துள்­ளது. அவர்­க­ளது வய­தெல்லை 25 வயதுக்கும் -55 வயதுக்கும் இடைப்­பட்­ட­தாக இருக்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபைக்கு நிய­மனம் பெறும் உறுப்­பி­னர்கள் 10 வருட அனு­பவம் கொண்ட சட்­டத்­த­ர­ணி­யா­கவும், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் அறி­வுள்­ள­வ­ரா­கவும் 35வயதுக்கும் 65 வயதுக்கும் – இடைப்­பட்­ட­வ­ராக இருக்­க­ வேண்­டு­மென சிபா­ரிசு செய்­துள்­ளது.

காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு ஏனைய நீதி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வது போன்ற பயிற்­சிகள் தொடராக வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. அத்­தோடு ஏனைய நீதி­ப­தி­களின் சம்­பளம் காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கும் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

அத்­தோடு காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லாமலாக்­கப்­பட்டால் திரு­மணம் தொடர்­பான விட­யங்­க­ளுக்கு மாற்றுத் தீர்­வாக குடும்ப நீதி­மன்றம் நிறு­வப்­ப­ட­வேண்டும். குடும்ப நீதி­மன்றம் நிறு­வப்­ப­டாத பட்­சத்தில் மாவட்ட நீதி­மன்­றமே தீர்வாக அமைய வேண்டும் என ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை மக்­க­ளுக்கு மிகவும் அவ­சி­ய­மான தீர்­வு­களை சீர்­தி­ருத்­தங்கள் வழங்கும் என குழு ஆத்­மார்த்­த­மாக நம்­பு­கி­றது. முன்­மொ­ழி­வு­களை கவ­னத்தில் கொண்டு சமத்­துவம் மற்றும் அனைத்தும் உள்­ள­டங்­கிய முடி­வொன்­றினை மேற்­கொள்­ளு­மாறும் ஆலோ­ச­னைக்­குழு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

நீதி­ய­மைச்சர் அலி சப்ரி
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்­பி­லான, அமைச்­ச­ர­வை­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள திருத்­தங்கள் தொடர்பில் நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி மீதே சமூகம் விரல் நீட்டுகிறது. பல நூற்­றாண்டு கால­மாக அமு­லி­லி­ருந்து வரும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் முக்­கிய திருத்­தங்­களை அமைச்­ச­ர­வையே மேற்­கொண்­டுள்­ளது என்­பது தெளி­வா­கி­றது.

இதனை நீதி­ய­மைச்சர் அலி சப்­ரியின் விளக்கம் உறுதி செய்­கி­றது. அவ்­வா­றெனின் நீதி­ய­மைச்­சரின் ஆலோ­ச­னை­களைக் கூட பெற்­றுக்­கொள்­ளாது முக்­கிய திருத்­தங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

“முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட சீர்தி­ருத்தம் தொடர்பில் நான் அமைச்­ச­ர­வைக்கு சில ஆலோ­ச­னை­க­ளையே முன்­வைத்தேன். அதில் முஸ்லிம் ஆண்கள் நான்கு திரு­மணம் செய்து கொள்­ள­வுள்ள உரிமை தடை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றோ மற்றும் காதி நீதி­மன்ற முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றோ நான் வலி­யு­றுத்­த­வில்லை. அத்­தோடு இத்­த­கைய சிபா­ரி­சு­களை முன்­வைக்­கவும் இல்லை. என்­றாலும் அமைச்­ச­ரவை, நான் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­ட­தி­ருத்தம் தொடர்பில் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­த­போது பல­தார மணத்­தையும், காதி நீதி­மன்ற முறை­மை­யையும் தடை செய்ய வேண்­டு­மென தீர்­மா­னித்­தது” என நீதி­ய­மைச்சர் சட்­டத்­த­ரணி அலி­சப்ரி விளக்­க­ம­ளித்தார்.

மேலும் முஸ்­லிம்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும், திரு­ம­ணத்­தின்­போது மண­ம­களின் சம்­மதம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். திரு­மணப் பதிவில் மண­ம­களின் கையொப்­பமும் பெறப்­ப­ட­வேண்டும் என்றும் அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. இதுவே அமைச்­ச­ர­வையில் இடம்­பெற்­றது. அது அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னங்­க­ளாகும். இந்தத் தீர்­மா­னங்­களை அமைச்­ச­ரவை மாற்­றிக்­கொள்ளும் என்று நான் நம்­ப­வில்லை என்று அவர் விளக்­க­ம­ளித்தார்.

இதே வேளை நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி கடந்த காலங்­களில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்­பதை பல இடங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஊட­கங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ணல்­க­ளிலும் பகி­ரங்க நிகழ்­வு­க­ளிலும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். ‘ஒரே சட்டம்’ என்ற கொள்­கை­யின்கீழ் தனியார் சட்­டங்கள் பாது­காக்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் நில­வு­கி­றது. அத்­தோடு மிக விரைவில் ‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் உரிய திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது என அவர் கடந்த வருடம் தெரி­வித்­தி­ருந்தார். முஸ்லிம் சமூ­கத்தின் ஏற்­புடன் அவர்­க­ளுக்கு எவ்­வி­த­மான பாதிப்­பு­களும் ஏற்­ப­டாது, நிறை­வேற்­றப்­படும் எனவும் அவர் அன்று கூறினார். ஆனால். இன்று அவர் சிபா­ரிசு செய்­யா­மலே ‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் பாரதூரமான திருத்­தங்­களை அமைச்­ச­ரவை மேற்­கொண்­டுள்­ளது. இது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா-கும். காதி­நீ­தி­மன்ற முறை­யையே ஒழிப்­ப­தற்கு பெரும்­பான்­மை­யின அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

நீதி­ய­மைச்­சர்­களின்உறு­தி­மொ­ழிகள்
‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும் என எமது நாட்டில் பதவி வகித்த நீதி­ய­மைச்­சர்கள் பல உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­னார்­க­ளே­யன்றி அதற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­வதில் அவர்கள் அக்­க­றை­யின்­றியே இருந்­தார்கள். இவ்­வ­ரி­சையில் நீதி­ய­மைச்­சர்­க­ளாகப் பதவி வகித்த மிலிந்த மொர­கொட, ரவூப் ஹக்கீம்,விஜ­ய­தாச ராஜ­பக்ஷ, தலதா அத்­து­கோ­ரள, நிமல் சிறி­பா­லடி சில்வா ஆகி­யோரைக் குறிப்­பி­டலாம்.தற்­போது நீதி­ய­மைச்­ச­ராகப் பதவி வகிப்­ப­வரே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி. இந்­நி­லையில் ‘ஒரே சட்டம்’ என்ற கொள்­கையின் கீழ் முஸ்லிம் தனியார் சட்டம் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவே காணப்­ப­டு­கி­றது. இதனைக் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்கு நீதி­ய­மைச்­ச­ரினால் முடி­யுமா என்­ப­தனைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

ஆலோ­சனை குழு உறுப்­பினர்சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப்
‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கு நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனை குழு­விற்கு, இச்­சட்­டத்தின் பிர­தான முக்­கி­ய­மான விட­யங்கள் ஏற்­க­னவே அமைச்­ச­ரவை உப குழு­வி­னரால் தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்தை அமைச்­ச­ர­வை­யினால் எடுக்க முடி­யாது. முஸ்லிம் சமூ­கமே தீர்­மா­னங்கள் மேற்­கொள்ள வேண்டும். பிர­தான விட­யங்­க­ளைத்­த­விர்த்து ஏனைய விட­யங்­களைத் தீர்­மா­னிக்கும் படி வேண்­டு­வது பய­னற்­றது என நான் ஆலோ­சனைக் குழுவின் அமர்­வு­களில் எனது கருத்­தினைத் தெரி­வித்து வாதிட்­டி­ருக்­கிறேன் என ஆலோ­சனைக் குழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.அவர் மேலும் எம்­மிடம் விளக்­க­ம­ளிக்­கையில் ‘ முஸ்­லிம்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். திரு­ம­ணத்­தின்­போது மண­ம­களின் சம்­ம­தமும் கையொப்­பமும் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். காதி­நீ­தி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும். மற்றும் முஸ்லிம் ஆண்­களின் பல­தா­ர­மணம் தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற அமைச்­ச­ரவை உப­கு­ழுவின் தீர்­மா­னங்கள் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் முக்­கிய விட­யங்­க­ளாகும். இவற்றைத் தவிர்த்து ஏனைய விட­யங்­க­ளுக்கு மாத்­திரம் ஆலோ­சனை வழங்­கு­வது முழு­மை­யான ம-று­சீ­ர­மைப்­பா­காது.இக்­கு­ழு­வுக்கு முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­புக்கு அவ­காசம் இருக்­க­வில்லை என்றும் கூறினார்.

முரண்­பட்ட கருத்­துகள்
ஆலோ­சனைக் குழுவின் அமர்­வு­களின் போது அங்­கத்­த­வர்கள் சில விட­யங்­களில் முரண்­பட்டுக் கொண்­ட­தா­கவும் அறிய முடி­கி­றது. தற்­போது அமு­லி­லுள்ள சட்­டத்தில் ‘வொலி’ யின் பிர­சன்னம் கட்­டா­ய­மாகும். என்­றாலும் இவ்­வி­டயம் தொடர்பில் முரண்­பாடு ஏற்­பட்­டது. ‘வொலி’ யின் பிர­சன்னம் அவ­சி­ய­மில்லை என இரு அங்­கத்­த­வர்கள் முரண்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை ஆலோ­சனைக் குழுவின் உறுப்­பினர் ஒருவர் குழுவின் 3 அமர்­வு­க­ளிலே கலந்து கொண்­டி­ருந்­த­தா­கவும் அதன்­பின்பு அவர் குழு­வி­லி­ருந்தும் விலகிக் கொண்­ட­தா­கவும் அறிய முடி­கி­றது.

ஆலோ­சனைக் குழு­வுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தி­னது முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­புக்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் பிர­தான விட­யங்­களை அமைச்­ச­ரவை உப­கு­ழுவே தீர்­மா­னித்­தி­ருந்­தது என குறிப்­பிட்ட உறுப்­பினர் தெரி­வித்தார். இந்­நி­லையில் அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் சட்­டத்­துக்குள் உட்­ப­டுத்­தப்­படும் போது அதனை நீதி­மன்றில் சவா­லுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­பதால் அவர் அக்­கு­ழு­வி­லி­ருந்து வில­கி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒரே நாடு ஒரே சட்டம்
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் மற்றும் காதி நீதி­மன்ற முறைமை சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் கடந்த வருடம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதியுதீன் பாரா­ளு­மன்றில் நிகழ்த்­திய உரை மீட்டு நோக்க வேண்­டி­ய­தொன்­றாகும். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ அமு­லாக்­கலின் கீழ் சிறு­பான்மை சமூ­கத்­தினர் ஆளப்­பட்டு வரும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம், தேச­வ­ழமைச் சட்டம், கண்­டிய சட்டம் என்­ப­ன­வற்­றுக்கு விடை­கொ­டுக்­கப்­பட்டு விடுமா? என்று சிறு­பான்மை சமூ­கத்­தினர் அச்­சத்தில் ஆழ்ந்­துள்­ளனர்.

இந்த நாட்டில் எல்­லோ­ருக்கும் ஒரே சட்டம் என்ற கோஷம் நாட்டில் வெவ்­வேறு பிரி­வி­ன­ருக்கு வெவ்­வேறு சட்டம் இருப்­பது போன்ற தோற்­றப்பாட்.டைத் தோற்­று­வித்­துள்­ளது. அது பிழை­யான சிந்­த­னை­யாகும். வெவ்­வேறு சமூ­கங்­களின் சமூக கலா­சார மர­பு­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட அந்த மக்கள் தொன்று தொட்டு பேணி வரு­கின்ற விட­யங்கள் மன்னர் காலத்­தி­லி­ருந்தே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளவை என்ற உண்­மையை இந்த உய­ரிய சபை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அவற்­றினால் தான் அந்­தந்த சமூ­கங்­க­ளுக்கு பாதிப்­பில்­லாத முறை மன்னர் காலத்­தி­லி­ருந்தே நடை­மு­றையில் இருந்து வரு­கி­றது.

இவ்­வாறு காலா­கா­ல­மாக பழக்­கத்­தி­லிந்து வரு­கின்ற வழக்­கா­றுகள், மர­பு­ரி­மைகள் டச்சுக் காரர் காலத்தில் தொகுக்­கப்­பட்­டன. பின்னர் அவற்­றுக்கு சட்ட வடிவம் கொடுக்­கப்­பட்டு இன்று அவை தனியார் சட்­டங்­க­ளாக அடை­யாளம் காணப்­ப­டு­கின்­றன. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற பிர­மையின் கீழ் இவற்றில் கைவைக்க முற்­ப­டு­வது சமூ­கங்­களின் கலா­சார மர­புகள் மீது கை வைப்­ப­தற்கு ஒப்­பா­ன­தாகும். அத்­தோடு சர்­வ­தேச சாச­னங்கள் வரை­ய­றுத்­துள்ள சமய, கலா­சார உரி­மை­களை மீறு­வ­தாகும். ஒரு சமூகம் தனது மர­பு­களை மாற்ற வேண்­டுமா? இல்­லையா? என்­பதை அந்­தந்த சமூ­கங்கள் தான் தீர்­மா­னிக்க வேண்டும். சிறு­பான்மை சமூ­கங்­களின் தனித்­து­வத்தில் அத்­து­மீறி சட்­டங்­களை திணிக்க முயல்­வது நாக­ரீ­க­மான அல்­லது ஜன­நா­யக செயற்­பா­டாக அமை­யாது என அவர் அன்று தெரி­வித்தார். இதுவே முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பாடு எனவும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப்
‘நூற்­றாண்டு கால­மாக இலங்­கையில் அமுலில் இருந்­து­வரும் காதி­நீ­தி­மன்­றங்­களை ஒழிக்க வேண்டும் என அமைச்­ச­ரவை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ள­தாக ஊட­கங்கள் வாயி­லாக அறிந்து கொண்டேன். இந்­நி­லையில் இது குறித்து அர­சுக்கு ஆத­ரவு வழங்கி வரும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பாடு என்ன? என்று திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

அவர் இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில், ‘எமது நாடு சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­பி­ருந்தே நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் அமு­லி­லி­ருந்து வரு­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு நூற்­றாண்டு கால­மாக சட்­ட­ரீ­தி­யாக வழங்­கப்­பட்டு வந்த உரி­மையில் அமைச்­ச­ரவை கைவைத்­துள்­ளது. அமைச்­ச­ர­வையின் தீர்­மானம் அர­சாங்கம் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது என்­பதை தெளி­வாக எடுத்துக் காட்­டு­கி­றது.

அமைச்­ச­ர­வையின் இந்த தீர்­மானம் குறித்து அர­சுக்கு ஆத­ரவு வழங்கி வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் எனும் அர­சியல் கட்­சிகள் இது­வரை எவ்­வித கருத்­து­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. அதனால் இந்த மௌனம் சம்­ம­தத்­திற்கு அறி­கு­றியா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இந்தக் கட்­சிகள் முஸ்லிம் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட கட்­சிகள் என்று கூறிக்­கொண்டே மக்கள் மத்­தியில் ஊடு­ரு­வின. இக்­கட்­சிகள் எல்லா தேர்தல் மேடை­க­ளிலும் முஸ்­லிம்­களின் உரி­மைகள் பற்­றியே பேசின. காதி நீதி­மன்­றங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் வாழ்­வி­ய­லுடன் சம்­பந்­தப்­பட்­டவை. இஸ்­லா­மிய சட்­டங்­களின் அடிப்­ப­டையில் தீர்ப்­புகள் வழங்­கு­ப­வைகள். இது முஸ்­லிம்­களின் உரி­மை­களில் பிர­தா­ன­மாகும். இந்த காதி நீதி­மன்­றங்­களை ஒழிப்­ப­தற்கே அமைச்­ச­ரவை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் இதனை விட உரிமை மீறல் எதுவும் இருக்க முடி­யாது. எனவே முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் தமது நிலைப்­பட்­டினை மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று கூறியுள்‌ளார்.

காதி நீதி­ப­திகள் போரம்
‘காதி நீதி­மன்ற முறைமை இல்­லா­ம­லாக்­கப்­பட வேண்டும் என அமைச்­ச­ரவை உப குழு மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்­தினை அறிந்து காதி­நீ­தி­ப­திகள் போரம் கவ­லையும், அதிர்ச்­சியும் அடைந்­துள்­ள­தாக காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் தலை­வரும் இரத்­தி­ன­புரி நீதி நிர்­வாகப் பிரிவின் காதி நீதி­ப­தி­யு­மான எம்.இப்ஹாம் யெஹ்யா குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ‘ஒரு குறிப்­பிட்ட சிறிய கொடுப்­ப­ன­வு­டனே காதி நீதி­மன்­றங்­களை அரசு செயற்­ப­டுத்தி வரு­கி­றது. காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வளங்கள் அதி­க­ரிக்­கப்­பட்டு மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு உரிய பயிற்­சிகள் தொட­ராக வழங்­கப்­பட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் பின்பு இன்­று­வரை காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட­வில்லை. சம்­பந்­தப்­பட்ட அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

காதி­நீ­தி­மன்­றங்­களை ஒழிப்­ப­தற்கு முன்பு அவர்­க­ளது பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிய வேண்டும். பேச்­சு­வார்த்­தைகள் மூலம் பல்­வேறு நன்­மை­களைப் பெறலாம். பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம். எமது பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்­கித்­த­ரு­மாறு நீதி­ய­மைச்­ச­ரிடம் 2020.11.04ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீதி­ய­மைச்சர் இது­வரை நேரம் ஒதுக்கித் தராமை கவ­லை­ய­ளிக்­கி­றது. மீண்டும் 29.06.2021 ஆம் திகதி நீதி­ய­மைச்­ச­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளோம்.

பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தையோ, திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிப்­ப­தையோ நாம் எதிர்க்­க­வில்லை. நூற்­றாண்டு காலம் பழ­மை­வாய்ந்த எமது சட்­டத்தை சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யா­டாது ஒவ்­வொ­ரு­வரின் விருப்­பத்­துக்கு அமைய சிதைத்து விடா­தீர்கள் என்றே கோரு­கிறோம்.

காதி­நீ­தி­ப­திகள் சில­ரிடம் குறைகள் இருக்­கலாம். அதற்­காக காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்­பையே அழிக்க முயல்­வது சமூ­கத்­துக்குச் செய்யும் துரோ­க­மா­கவே நாம் கரு­து­கிறோம். காதி­நீ­தி­ப­தி­களின் குறை­களைப் பற்­றியே பேசிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் கொடுப்­ப­னவும் மற்றும் ஏனைய வச­திகள் குறித்து ஏன் சிந்­திப்­ப­தில்லை. சமூ­கத்தின் தலை­வர்கள் இது தொடர்பில் குரல் எழுப்ப வேண்டும்.

நீண்ட கால­மாக காதிகள் மேன்­மு­றை­யீட்டுச் சபையில் செய­லாளர் ஒருவர் தொட­ராக இயங்­க­வில்லை. இதனால் முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சு அக்கறை கொள்வதில்லை. காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்வதற்காகவே இந்த முன் ஏற்பாடுகள் என நாம் சந்தேகிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதி நீதிமன்ற கட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்கள்
காதிநீதிவான் பாலியல் இலஞ்சம் கோரினார், எதிர்த்தரப்பினரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கினார், எனது பக்க நியாயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றெல்லாம் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில பெண்கள் இனவாத ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களை வழங்கி வருவது கவலைக்குரியதாகும்.

காதி­நீ­தி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஒருவர் வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதிவான் பக்­க­சார்­பாக நடந்து கொள்­கிறார் என சந்­தேகம் கொண்டால் குறிப்­பிட்ட வழக்­கினை விசா­ரிக்க விசே­ட­காதி நீதிவான் ஒரு­வரை நிய­மித்­துக்­கொள்ள முடியும்.அதற்­காக நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு விண்­ணப்­பிக்க முடியும்.

அத்­தோடு காதி நீதி­மன்றில் நியா­ய­மான தீர்ப்­புக்­கி­டைக்­க­வில்லை என எவ­ரா­வது கரு­தினால் அத்­தீர்ப்­புக்கு எதி­ராக காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபைக்கு (Board of Quazis) மேன்­மு­றை­யீடு செய்­யலாம். எமது நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டத்தில் இத்­த­கைய அனு­கூ­லங்கள் இருக்­கும்­போது இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் எத­னையும் மேற்­கொள்­ளாது எமது சமூ­கத்தில் சிலர் இன­வாத ஊட­கங்கள் முன்­னி­லையில் எமக்கு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தேவை காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லாமற் செய்­யப்­ப­ட­வேண்டுமென உணர்ச்­சி­வ­சப்­பட்டு தெரி­விப்­பது மட­மைத்­த­ன­மாகும்.

மேலும் தகு­தி­யற்ற அர­சியல் செல்­வாக்­குள்­ள­வர்­களே காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­றெல்லாம் குற்றம் சுமத்­து­வது அடிப்­ப­டை­யற்­ற­தாகும். காதி நீதி­ப­தி­களை நீதிச்­சேவை ஆணைக்­குழு நிய­மிக்­கி­றது. விண்­ணப்­பங்கள் அரச வர்த்­த­மானி மூலம் கோரப்­ப­டு­கி­றது. விண்­ணப்­ப­தா­ரிகள் பட்­ட­தா­ரி­க­ளாக அல்­லது ஓய்வு பெற்ற பதவி நிலை உத்­தி­யோ­கத்­த­ராக அல்­லது மெள­லவி பட்டம் பெற்­ற­வ­ராக இருக்க வேண்டும். நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவில் நீதி­ப­தி­களால் நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்டே நிய­மனம் வழங்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் தகு­தி­யற்­ற­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­பது அடிப்­ப­டை­யற்­ற­தாகும்.

மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும்
அமைச்­ச­ரவை உப­குழு மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னங்கள் மற்றும் ஆலோ­சனைக் குழுவின் ஆலோசனைகள் என்பனவற்றை நீதியமைச்சர் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்பதே சமூகத்தின் அசையாத நிலைப்பாடாகும். திருத்தங்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் சமூகத்தின் ஆணைபெற்றுக் கொள்ளப்படவேண்டும். இந்த நிலைப்பாட்டிலே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இருக்கிறது.

Vidivelli

Leave A Reply

Your email address will not be published.