இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை. 1951 ஆம் ஆண்டின் பின்னர் இச் சட்டத்தில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக, சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவென 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக் குழு சுமார் 9 வருட கால இழுபறியின் பின்னர் தனது அறிக்கையை கையளித்தது. எனினும் இக் குழுவின் அங்கத்தவர்கள் இரு வேறாகப் பிரிந்து மற்றொரு அறிக்கையையும் சமர்ப்பித்ததால் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் இழுபறி தோன்றியது. 2009 இன் பின்னர் நீதியமைச்சர்களாக பதவி வகித்த பலரும் இச் சட்டத்தை திருத்துவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய போதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் துணிவைப் பெற்றிருக்கவில்லை.
இந் நிலையில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிப்பதையும் தனது இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தவறான பிரசாரங்களும் இதற்கு வலுச்சேர்த்தன. இந் நிலையில்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் மேற்கிளம்பின. இனவாத ஊடகங்கள் காதி நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற போர்வையில் பலரைக் கொண்டுவந்து முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தப்பபிப்பிராயங்களை கட்டியெழுப்பின.
இப் பின்னணியில்தான் தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான முயற்சிகளை நோக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினாலும் ஏனையவர்களாலும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஒரு புறம் வைத்துவிட்டு, அமைச்சரவைத் தீர்மானம் என்ற போர்வையில் காதி நீதிமன்ற முறைமையை முற்றாக இல்லாதொழிப்பதற்பாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காதி நீதிமன்ற முறைமையிலும் காதி நீதிபதிகளிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இக் குறைபாடுகளை நிவர்த்தித்து இந்த முறைமையை மேலும் வலுப்படுத்துவதே இதற்குத் தீர்வாகும். மாறாக இதனை இல்லாதொழிப்பதல்ல என்பதை நீதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அமைச்சரவையில் நீதியமைச்சர் மாத்திரமே ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியாக இருக்கின்ற நிலையில், முஸ்லிமல்லாத பெரும்பான்மை அமைச்சர்கள் எவ்வாறு இஸ்லாமிய விவகாரங்கள் குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
அமைச்சரவையின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானமானது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக கவலையில் ஆழ்த்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்துடன் உரிய முறையில் கலந்தாலோசிக்காது இவ்வாறானதொரு பாரதூரமான தீர்மானம் ஒன்றுக்கு அரசாங்கம் வருவதானது, எதிர்காலத்தில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை மென்மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை நாம் சொல்லித்தான் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
இத்தீர்மானத்தை சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கு முஸ்லிம் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் காதி நீதிபதிகள் போரமும் இத் தீர்மானம் தொடர்பில் தமது அதிருப்தியையும் கவலையையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
இந் நிலையில் நீதியமைச்சர் அலி சப்ரி இது விடயத்தில் சமூகத்தின் மனக்கவலைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமூகம் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
“இந்த யோசனையை நான் சமர்ப்பிக்கவில்லை, இது பற்றி என்னால் எதுவும் பேச முடியாது“ என்று நழுவுவதை விடுத்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பிரதிநிதி என்ற வகையில் அவர் சமூகத்திற்காக குரலெழுப்ப வேண்டும். இல்லாதபட்சத்தில் முஸ்லிம் சமூகத்தையும் அதன் பிரதிநிதிகளையும் கொண்டே, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ உரிமையாக காலங்காலமாக பேணப்பட்டு வந்த தனியார் சட்டத்தைப் பறித்தெடுக்கின்ற அரசாங்கத்தின் தந்திரோபாயத்திற்கு நீதியமைச்சரும் பலியாக வேண்டி வரும். அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க பிரார்த்திப்போமாக.- Vidivelli