(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகங்களையும் கோரியுள்ளது.
நாட்டில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மாத்திரம் மூடிவைக்கப்படவில்லை. கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ ஆலயங்கள், இந்து கோயில்கள், பௌத்த ஆலயங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளன என்பதை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் 20.06.2021 ஆம் திகதியிட்ட சுற்றுநிருபம் நாட்டிலுள்ள அனைத்து மதத்தலங்களும் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. என்றாலும் பள்ளிவாசல்கள் உட்பட மதத்தலங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை சுகாதார அமைச்சும், கொவிட் செயலணியுமே தீர்மானிக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.- Vidivelli