பயங்கரவாத தடைச் சட்டம்: திருத்துவதா நீக்குவதா ?
அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறுகிறார் நீதியமைச்சர் அலி சப்ரி
இலங்கையில் அமுலிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதா அல்லது திருத்துவதா என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அதற்கென இரு குழுக்களை அமைச்சரவை நியமித்துள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் அரப் நியூஸ் பத்திரிகைக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் அல்லது கைவிடப்படும் என தெரிவித்த நீதியமைச்சர் அலிசப்ரி, அமைச்சரவை நியமித்துள்ள இரு குழுக்களின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே இது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதில் ஒரு குழு அமைச்சரவை குழு என்றும் அடுத்தது நிபுணர்கள் அடங்கிய குழு என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, குறித்த குழுக்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கவுள்ளதாகவும் அதற்குள் அவர்கள் தமது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, இணைய குற்றங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகியவை அதிகளவில் இடம்பெறுவதால் காலத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்றார். மேலும் மனித உரிமைகளை பேணவேண்டிய அவசியம் அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் நலன்கள், சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப மனித உரிமை தேவைகளை நிறைவேற்றுவதற்கான சமநிலையான நடவடிக்கையை முன்னெடுக்க முயல்வதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த – ஆனால் நிறைவேற்றாத – 1979 ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம் நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைதுசெய்வதற்கும் சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாத காலம் வரையில் நபர் ஒருவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம்.
மார்ச் மாதம் செய்யப்பட்ட திருத்தங்கள் மத, இன, சமூக ஐக்கியமின்மையை ஏற்படுத்தியவர் அல்லது ஏற்படுத்த முயன்றார் என சந்தேகிக்கப்படுபவரை அவர் சரணடைந்தால் அல்லது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் இரண்டு வருடங்கள் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்துவைப்பதற்கு அனுமதியளித்தன.
ஜூன் 8 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீறுவதால் அதனை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஐரோப்பிய பாராளுமன்றம், ஜிஎஸ்பி வரிச்சலுகையை இரத்துச்செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதற்குப் பதிலளித்த இலங்கை அரசாங்கம், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பற்ற விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
இதேவேளை, தமது அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்வது தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“ ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய தீர்மானம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. மீளாய்வு செய்யுமாறு கோரவில்லை” என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷிரீன் சரூர் குறிப்பிடுகிறார்.
“இது ஒரு கடுமையான சட்டம், இது முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்ரோசமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் இது கட்டுப்படுத்துகிறது. இது முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும், திருத்தப்படக்கூடாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli