அரசாங்கத்தின் அண்மைக்கால போக்குகள் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆளும் பொது ஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளுக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் வலுத்துள்ளன. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த பௌத்த பிக்குகளும் பெரும்பான்மை சிங்கள மக்களும் கூட இன்று பகிரங்கமாகவே தமது அதிருப்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர். பல பௌத்த பிக்குகள் சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியையும் பிரதமரையும் அமைச்சர்களையும் கடும்தொனியில் விமர்சிப்பதைக் காண முடிகிறது. மறுபுறும் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் அரசாங்கத்தின் மீதான தனது அதிருப்தியை ஊடக மாநாடுகளை நடாத்தி வெளிப்படுத்தி வருகிறார்.
கொவிட் 19 பெருந்தொற்று நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தாது மூன்றாவது அலையும் வேகமாகப் பரவுவதற்கு இடமளித்தமை அரசாங்கத்தின் பாரிய தோல்வியாகும். கடந்த ஏப்ரல் புது வருடத்தின் பின்னர் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கப்பால் இந்தியா மற்றும் பிரித்தானியாவில் பரவிய தீவிரம் கொண்ட கொவிட் வைரஸ திரிபுகளும் இன்று இலங்கையை ஆக்கிரமித்துள்ளன. வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன. மரணங்கள் அதிகரித்துள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் இத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாதவாறு திணறிக் கொண்டிருக்கின்றனர். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை தோல்வியடைந்த ஒரு தேசமாகவே இன்று நோக்கப்படுகிறது. சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி இராணுவத்தின் தீர்மானங்களை எடுப்பதே இதற்குக் காரணமாகும். ஆரம்பித்திலிருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுகாதார நிபுணர்களின் வழிகாட்டலில் இதனைக் கையாண்டிருப்பின் இலங்கை இந்தளவு தூரம் சீரழிவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. இராணுவத்தளபதி கொவிட் செயலணியில் தலையிடக் கூடாது என ரணில் விக்ரமசிங்க புதிய பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று சபையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வருடம் சுமார் 4 மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். இந்த வருடமும் ஒன்றரை மாத காலத்திற்கும் மேலாக மக்கள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சாதாரண கூலித் தொழிலாளிகள் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரையும் பொருளாதார ரீதியாக பாதிப்படையச் செய்துள்ளது. அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த போதுமான எச்சரிக்கைகள் கிடைத்தும் அப்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அலட்சியமாக இருந்து 250 க்கும் அதிகமான உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தார்களோ அதேபோன்றுதான் இன்று கொவிட் தொற்று விடயத்திலும் இந்த அரசாங்கத்திற்கு போதுமான எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டும் அலட்சியமாக இருந்தமையே உயிரிழப்புகள் மூவாயிரத்தை எட்டக் காரணம் எனலாம். இந்த அலட்சியப் போக்கு தொடருமானால் இந்தியாவைப் போன்று சடலங்களை வீதிகளில் போட்டு எரிக்க வேண்டிய அவல நிலைமையே ஏற்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.
நேற்றைய தினம் பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், படுகொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமையானது ஜனாதிபதியின் நேர்மையையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது. தனக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கொலைக்குற்றவாளிகளைக் கூட, எந்தவித நியாயபூர்வமான காரணங்களுமின்றி விடுதலை செய்வதானது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது முற்றிலும் தனிப்பட்ட அரசியல் நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பது தெளிவாகவே விளங்குகிறது.
சிறு குற்றங்களைச் செய்தவர்கள் கூட பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்ற நிலையில் பட்டப்பகலில் நால்வரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதானது நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையே தெளிவாகக் காட்டி நிற்கிறது. ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இது பற்றிய தமது கரிசனையைச் செலுத்தியுள்ளன. ஏலவே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைவரங்களை கருத்திற் கொண்டு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இவ்வாறான அநாவசியமான தீர்மானங்கள் மேலும் மேலும் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதே கசப்பாயினும் உண்மையாகும். துமிந்த சில்வா என்ற தனி நபரின் விடுதலைக்காக ஒட்டுமொத்த நாடுமே எதிர்வரும் நாட்களில் விலை கொடுக்க வேண்டி வரும் என்பதையே ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் எச்சரிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.
நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணமாகக் கொண்டு ஏராளமாக அப்பாவிகள் அநியாயமாக கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை இனங்கண்டு விடுவிப்பதானது நீதியை நிலைநாட்டியதாகவும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வரிச் சலுகைகளைப் பாதுகாத்து நாட்டு மக்களுக்கு நலனைத் தேடிக் கொடுத்ததாகவும் அமையும். மாறாக பகிரங்கமாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட, நியாயமான விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டுக்கு அவப் பெயர் கிடைக்குமே தவிர ஒருபோதும் நன்மை கிடைக்காது என்பது நிச்சயம் ஜனாதிபதிக்கு விளங்காமல் இருக்கப் போதில்லை.- Vidivelli