ஹிஜாஸுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தும் சி.ஐ.டி.
புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி அத்துகோரள சுட்டிக்காட்டு; மன்றில் ஆஜர் செய்யுமாறு கோரிக்கை; சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், நீர் கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கும் விஷேட உத்தரவுகள்
எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பலரை வற்புறுத்தி வருவதாக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள புத்தளம் மேல் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்பில்லாத, எனினும் அவ்வழக்கின் சாட்சியாளர்களாகக் கூடிய வாய்ப்புள்ள இருவரை, சி.ஐ.டி.யினர் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கைது செய்து தடுத்து வைத்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவ்விருவரும் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவினை இது குறித்து தாக்கல் செய்துள்ளதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறிப்பிட்டார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக விசாரணைக்கு வந்தது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்துக்கு அமையவே குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் 5 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 75 சாட்சியாளர்களின் பட்டியலையும் 17 ஆவணங்களையும் சட்ட மா அதிபர் இணைத்துள்ளார்.
இந் நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சி.ஐ.டி. மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக நீதிமன்றில் ஆஜர் செய்து, அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை கையளித்து வழக்கை விசாரிக்க நகர்த்தல் பத்திரம் ஊடாக, ஹிஜாஸின் சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகள் சார்பிலும், சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், நுவன் போப்பகே, நிரோன் அங்கிடெல் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி தம்மிக உடவத்த ஆஜரானார்.
இதன்போது மன்றில் வாதங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவர் தொடர்பிலான வழக்கினை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் எனும் ரீதியில் முன்னுரிமை அளித்து உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரினார். அதன்படி அவரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
‘தற்போதும் விளக்கமறியலில் உள்ள பிரதிவாதிகளுக்கு குறிப்பாக வழக்கின் முதல் பிரதிவாதிக்கு (ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்) எதிராக சாட்சியமளிக்குமாறு, இவ்வழக்குடன் தொடர்பு படாத எனினும் எதிர்காலத்தில் இவ்வழக்கின் சாட்சியாளர்களாக மாற வாய்ப்புள்ள நபர்கள் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அது குறித்து உயர் நீதிமன்றிலும் மனு தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை உடன் ஆரம்பிக்கவும் அவரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்கவும் கோருகின்றேன்.’ என சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதிமன்றில் தெரிவித்தார்.
எனினும் இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி ஒருவருக்கு பதிலாக மன்றில் ஆஜராகிய அரச சட்டவாதி தம்மிக உடவத்த,
‘நாட்டில் நிலவும் சூழலில் எந்த பிரதிவாதியும் எந்த நீதிமன்றங்களுக்கும் அழைக்கப்படாத பின்னணியில், இவ்வழக்கின் பிரதிவாதிக்கு விஷேட முறைமை சாத்தியமற்றது என வாதிட்டார். சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமையவே நீதிமன்றங்களுக்கு பிரதிவாதிகள் அழைக்கப்படுவதில்லை எனவும், எனவே இது சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு பதிலளித்த சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, ‘இவ்வழக்கில் எந்த விஷேட நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. சாதாரண வழக்கு விசாரணை முறைமையின் கீழேயே நடக்கிறது.
குற்றவியல் சட்டக் கோவையை மீறி இங்கு எந்த வழக்கு விசாரணைகளும் நடாத்த முடியாது. தற்போது மேன் முறையீட்டு நீதிமன்றங்களில் கூட ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக மேன் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
நாட்டில் நிலவும் நிலைமையை மையப்படுத்தி, ஒருவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையில் இல்லை. சந்தேக நபரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வாதிட்டார்.
இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதி குமாரி அபேரத்ன, முதலில் நீதிபதியின் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்திய நிலையில், நாட்டில் நிலவும் சூழலில் பிரதிவாதியை நீதிமன்றுக்கு அழைக்க உரிய சுகாதார பரிந்துரைகள் இருப்பின் அவற்றை மன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் பிரதிவாதிகளை மன்றில் ஆஜர் செய்யவுள்ள வாய்ப்புக்கள் தொடர்பில் மன்றுக்கு விஷேட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சருக்கும் நீதிபதி கட்டளை பிறப்பித்து வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன்போது, சிலாபம், புத்தளம் மேல் நீதிமன்றங்களில் ஸ்கைப் தொழில் நுட்பத்துடன் கூடிய வசதிகள் இல்லை என்பதும் வெளிப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார். அது முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, தண்டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்தியாயங்களின் கீழும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ( உ) பிரிவின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1) ஆம் உறுப்புரையின் கீழும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான நம்பகரமான தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17இல் ஆலோசனை வழங்கினார்.
அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாசிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை குற்றவியல் சட்டக் கோவை நடைமுறைக்கு அமைய நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17இல் வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.-Vidivelli