சட்டத்தரணிகள், குடும்பத்தினர் எவருக்கும் அறிவிக்காது மிகவும் இரகசியமாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் அஹ்னாப்
விளக்கமறியல் நீடிப்பு; 22 ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு
எம்.எப்.எம்.பஸீர்
நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வார இறுதி நாட்களில் மிக இரகசியமாக இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜஸீம், தங்காலை தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறு நாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் அஹ்னாப் ஜஸீமை நீதிமன்றில் ஆஜர் செய்வதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அவரது சட்டத்தரணிக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ கூட அறிவிக்கவில்லை எனவும், ஜனநாயகத்துக்கு மிக விரோதமாக இரகசியமான முறையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இதனை முன்னெடுத்துள்ளதாகவும், அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி சஞ்சய தெரிவித்தார்.
அஹ்னாப் ஜஸீமின் குடும்பத்தார் கடந்த சனிக்கிழமை அவருடன் பேசுவதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளபோதும், அப்போது கூட ஒவ்வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்குமாறு தெரிவித்துள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதை அவர்கள் மறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் விஷேட வாதங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அஹ்னாப் ஜஸீமின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்கத்தின் கீழ் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியிலும், சர்வதேசத்தின் கரிசனை இவ்விவகாரத்தில் குவிந்துள்ள பின்னணியிலுமே மிக இரகசியமாக அஹ்னாப் ஜஸீம் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்ததுடன் அவர், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்தவராவார்.
இந் நிலையில் கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி. வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்தவினால் அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்களும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேகநபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்பாலான நேரங்களில் கை விலங்கிட்டே வைக்கப்பட்டுள்ளதாகவும், நித்திரைக்கு செல்லும் நேரம் கூட அவ்வாறான நிலையிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்படும் போது கூறப்பட்ட காரணத்தை விட, தற்போது, பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாபை சித்திரவதை செய்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாபை அங்கு எலி கடித்துள்ளதாகவும் அவருக்கு முறையான சிகிச்சைகள் கூட அளிக்கப்படவில்லை என அம்மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே தடுப்புக் காவலில் இருந்த அஹ்னாப் மிக இரகசியமாக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.Vidivelli