பஸ்ஹான் நவாஸ்
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும் ,பன்னூல் ஆசிரியரும், பனமொழித்துறை நிபுணரும், ஆன்மீக தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்றிய சிறந்த அறிஞராவார்.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையில் பிறந்த தைக்கா சுஐப் ஆலிம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவின் கொலம்பியா பசுபிக் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் தனது முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அரபு, அரபுத்தமிழ், பாரசீகம், உருது ஆகிய மொழிகள் மற்றும் கல்வி, இலக்கியத் துறைகளுக்கு வழங்கிய பங்களிப்புக்கள்” என்ற தலைப்பில் 30 வருட ஆராய்ச்சியின் பின்னர் 880 பக்கங்களைக் கொண்ட ஆய்வுநூலை வெளியிட்டார். இந்தியாவின் 9ஆவது பிரதமர் கலாநிதி சங்கர் தயால் சர்மா 1993 ஆம் ஆண்டு இந்த ஆய்வுநூலை வெளியிட்டு வைத்தார். சார்க் அமைப்பின் அரச தலைவர்களாலும் இந்த ஆய்வு நூல் பின்னர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிறந்த அரபு அறிஞருக்கான “இந்தியாவின் தேசிய” விருதை இரண்டு தடவைகள் வென்ற தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள், உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலிலும் தொடர்ச்சியாக இடம்பிடித்து வந்தார். பத்துக்கும் அதிகமான புத்தகங்ளையும், 15 இற்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு மூன்று தசாப்தகளுக்கு மேலாக அவர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தார்கள்.
நீண்ட காலமாக ஆன்மீகத் தலைவராக இருந்து இன ஒற்றுமைகளை வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கள் மகத்தானவை.
அவர்களின் குடும்பத்தவர்களே இலங்கையில் அதிகளவிலான பள்ளிவாசல்களை நிர்மாணித்தார்கள். அவர்களின் முப்பாட்டனாரான மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் 360 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிர்மாணித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
கடல் வர்த்தகம், முத்து வியாபாரம், மாணிக்கக்கல் வர்த்தகம் என்பனவற்றில் இவர்களது குடும்பத்தினர் பிரபலம் பெற்று விளங்கினார்கள். சுஐப் ஆலிம் அவர்கள் தனது சொந்தச் செலவின் மூலமே சகல பணிகளையும் நிறைவேற்றியதோடு, இலங்கையின் பல்வேறு பள்ளிவாசல்களையும் நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை சொந்த நிதியில் இருந்தே வழங்கியமை சிறப்பம்சமாகும்.
இவர்கள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆற்றிய சேவைகளை ஆவணப்படுத்துவதற்காக வழங்கியிருக்கின்ற சேவைகளை காலம் சென்ற கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி பல்வேறு இடங்களிலும் சிலாகித்துப் பேசியுள்ளார். மறைந்து சென்றுகொண்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி அவற்றை நூல் வடிவில் கொண்டு வருவதற்காக இவர்கள் தனது வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை செலவிட்டார்கள் என்றும் முப்பது வருடங்களுக்கு மேலான தனது வாழ்நாளை இதற்காக தியாகம் செய்தார்கள் என்றும் கலாநிதி சுக்ரி அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்துள்ளார்.
இவரது முப்பாட்டனார் எழுதிய அரபு இலக்கிய செறிவும் நிறைந்த எடின்பரோ போன்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஜலாலிய்யா ராதீபை கலாநிதி சுஐப் ஆலிம் கோவை செய்து வெளியிட்டதோடு இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கலாநிதி தைக்கா சுஐப்ஆலிம் எழுதிய முன்ஜியாத் என்ற நூலானது இதுவரை 35,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
ரூஸிய்யதுல் காதிரிய்யா ஆன்மீக அமைப்பின் தலைவராக இருந்து இலங்கை இந்தியா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, அமெரிக்கா, ஐரோப்பா கிழக்காபிரிக்கா போன்ற நாடுகளில் தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
மியன்மார், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தனது சொந்தச் செலவில் அவர்கள் பள்ளிவாசல்களை நிர்மாணித்துள்ளார்கள்.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவதற்காக தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் மேற்கொண்ட பணிகளை கௌரவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.Vidivelli